அறம் செய்ய விரும்பு.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி அருகிலிருந்தே காவிரியும் பயணிக்கிறது.
அகண்ட காவேரியாக பல கிலோமீட்டர் தூரம் அவள் பயணம் என்றாலும் நெடுஞ்சாலை மட்டும் பல இடங்களில் வாய்க்கால் அளவு குறுகி (மறுபுறம் இரயில் வண்டி தடம் + பாசன வாய்க்கால்) திருப்பராய்த்துறை அருகில் மட்டுமே விரிந்த சாலையாக மாறும்.
சீமான் தத்தாச்சாரியார் மாம்பழக்கடை தாண்டி, முக்கொம்பு கடந்து குளித்தலை தாண்டி பேட்டைவாய்த்தலை சாலை இந்த நெடுஞ்சாலையில் சேருமிடம் ஒரு நடமாடும் சந்தை.
நெல், வாழை, பலா, மா, மல்லி, முல்லை என கலந்து கட்டி சாகுபடி செய்யும் எளிய மனிதர்கள் நடத்தும் unofficial சந்தை.
சீசனுக்கு விளைந்த பழங்களை, மலர்களை நெகிழிப்பைகளில் சிறு சிறு கூறுகளாக அடைத்து, சாலை சந்திப்பு முனையில் ஓட்டப்பந்தய வீரர்கள் போல ஆயத்தமாக நிற்பார்கள். வெயில் 100-102 என ஏறும் நண்பகல், மதியப்பொழுது என பாகுபாடு இல்லாமல் தலையில் துண்டு அல்லது முந்தானை கொண்டு மூடிக்கொண்டு, சாலை கடப்பதற்காக வேகம் குறைக்கும் வாகனங்களை நோக்கி இரு கைகளிலும் பைகளை தூக்கிக்கொண்டு ஓடி வருவார்கள்.
சில நிமிடங்களில் வணிகம் முடித்து அடுத்த வண்டிக்கு நகர்வது அவ்வளவு சிக்கனமாக இருக்கும் பார்ப்பதற்கு.
சென்ற முறை அந்த பகுதியை கடக்கையில் வண்டியை சற்று தள்ளி நிறுத்தினேன். எதிர் திசையில் என்னை கடந்து ஓடிக்கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் கடைசியாக, ஓடமுடியாத வயதில் ஒரு பாட்டியம்மா. ஓட்டத்தை நிறுத்தி என்னிடம் மெல்ல நடந்து வந்து இரண்டு கைகளையும் நீட்டினார். ஒரு கையில் வாழைப்பழ பை, மறு கையில் பலாப்பழ பை. முகத்தில் மதிய வெயிலை விட பிரகாச சிரிப்பு.
'வாங்கிக்க கண்ணு. வாளப்பளம் அம்பது ரூவா, பலாச்சொள 40 ரூவா'
ஐநூறுக்கு சில்லறை இருக்கா பாட்டி என்றேன்.
இல்லையேப்பா என்றார்.
என்னுடன் வந்தவர் கூகுள் பே பண்ணலாமா பாட்டி? என்றார்.
கூப்பேல்லாம் இல்லப்பா என்ற பாட்டி, பழங்களை எங்களல கைகளில் திணித்து விட்டு, 'இதோ, மாத்திட்டு வரேன்' என பதிலுக்கு காத்திராமல் மெல்ல நடந்து சனத்திரளில் மறைந்தார்.
ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம். அதற்குள் இன்னும் சிலர் பைகளுடன். எங்களை அணுகி விற்பனை முயற்சிகளை தொடங்க, 'சில்லறை மாத்த போனவங்க வந்தாதான் உங்ககிட்ட வாங்க முடியும்' என்றேன்.
'பைய புடிங்க சார்' என கைகளில் தந்துவிட்டு அவர்களும் காத்திருந்தனர்.
இன்னொரு ஐந்து நிமிடங்களில், மாற்றிய சில்லறை நோட்டுகளை கையில் இறுகப்பிடித்தவண்ணம் பாட்டியம்மா வந்தார்.
மற்றவர்களிடம் அவர்களுக்கான பணத்தை தந்துவிட்டு நன்றி சொல்லி நகர்ந்தோம்.
எளிய மனிதர்கள் ஏமாற்றுவதில்லை கவனித்திருக்கிறீர்களா?
பாட்டி கூட்டத்தில் காணாமல் போயிருந்தால் எங்களால் எவ்வளவு நேரம் அறியாத ஊரில் தேடியிருக்கமுடியும்?
அந்த மனிதர்கள் எவ்வளவு ஒழுங்காக, நிதானமாக வணிகம் செய்கிறார்கள்? இத்தனைக்கும் high margin வணிகமும் அல்ல...
ஒரு நாளில் பல மணிநேரம் வெயிலில் ஓடி ஓடி ஐம்பது பைகளாவது விற்றால்தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.
விற்பனை ஆகாவிட்டாலும் உண்ண பழங்கள் இருக்கிறது.
அவர்களது வாழ்வு நம்பிக்கைகளால் நிறைந்திருக்கிறது.
ஒரு பெரு நகரில் வாகன சாரதி ஒருவரை (அதாங்க, ட்ரைவர்) சந்தித்தேன்.
பகலில் கால் டாக்சி ஓட்டுகிறார். இரவில் பெருநகர சுகாதார துறையில் ஒப்பந்த பணி (கான்ட்ராக்ட் லேபர்).
ஒரு இரவுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே வேலை. பெருநகரின் ஒரு பகுதியில் இருக்கும் சிறு சிறு குப்பை பெட்டிகளை வாகனத்தின் இயந்திர கரங்களால் நகர்ந்தி தூக்கி வாகனத்திற்குள் இருக்குமர பெரிய குப்பை பெட்டியில் சேர்த்து, இந்த சிறு சிறு குப்பை பெட்டிகளை மறுபடி அதனதன் இடத்தில் இறக்கி வைக்கும் வேலை.
வாகனத்தை விட்டு இறங்கவேண்டியது இல்லை. இயந்திர கரங்களை வாகனத்திலிருந்தே இயக்கலாம்.
ஒரு மாதத்திற்கு இருபத்து மூன்றாயிரம் சம்பளம்.
கூடுதலாக, அந்த வாகனத்தின் எரிபொருள் கலனில் இருந்து (டீசல் டேங்க்) டீசல் திருடி விற்ற வகையில் ஒரு நாளைக்கு...சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு வாசிக்கவும்: மூன்றாயிரம் ரூபாய்!
இந்த மூன்றாயிரம் தனியே கணக்கு வைக்கப்பட்டு அன்றாடம் குறிப்பிட்ட பலருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்றார்.
'என்னங்க இது? அறமா??' என்றேன்.
'வேற வழி இல்ல சார். இந்த தொழில் இப்படித்தான். சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் தெரிஞ்சிதான் நடக்குது' என்றார்.
பேட்டவாய்த்தலை பாட்டிக்கு தெரிந்த அறம் வேறு, இவர் போன்றவர்கள் பழகும் அறம் வேறு.
'அறம் செய்ய விரும்பு' என நம் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். எது அறம்? அதை எப்படி காப்பது என்று கற்பிக்கிறோமா?
எந்த அறத்தை காப்பது சர்வேசா?!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக