நண்பகல் கோடை வெயிலில் சாலையை கடக்கும்போது அவர்களை பார்த்தேன்.
ஒரு டாடா ஏஸ் வண்டி முழுக்க குப்பைகள். கணவன், மனைவி + ஒரு சின்னஞ்சிறுமி. சாலையோர மர நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு தரையில் அமர்ந்து அவர் எதையோ உடைத்து சேகரிக்க, அந்த சிறுமியும் குப்பைகளை கிளறிக்கொண்டிருந்தாள்; மூன்று வயது கூட ஆகியிருக்காது... அவளது அம்மா சாலையோரம் இருந்த குப்பையை கிளறிக்கொண்டிருந்தார்.
யு டர்ன் செய்து திரும்ப வந்து அவர்கள் அருகில் நிறுத்தி உரையாடினேன்...
'ஏங்க இப்படி சின்ன குழந்தையும் குப்பையில...பள்ளிக்கூடம் போகலையா?' என்றேன்.
திருப்பூரில் இருந்து தினமும் கோவைக்கு வந்து குப்பைகள் பொறுக்கி அவற்றில் விலை பெறக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்து விற்று பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழ் முகங்களாக தோன்றவில்லை ஆனாலும் தமிழ் தடங்கலின்றி பேசுகிறார்கள்.
வீட்டில் அவரது அம்மா அப்பா இருந்தாலும் அவர்களும் தினக்கூலிகளாக வெளியே செல்வதால் குழந்தையை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள யாருமின்றி அவர்களுடனே அழைத்துச்செல்வார்களாம். பள்ளி செல்லும் வயது வந்தவுடன் பள்ளிக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்களாம். கண்ணியமான குரலில் பேசியவரை பார்த்து உதவி ஏதாவது வேண்டுமா என்றேன். 'இல்ல சார்' என்றார். 'டீக்கு காசு இருந்தா குடுங்க சார் போதும்' என்றார் அவரது மனைவி. நம் உலகில் பெண்கள்தானே வயிறு நிரப்புகிறார்கள், இருந்தாலும் இல்லாவிட்டாலும்... என்கிற நினைப்புடன், 'நானே வாங்கி வருகிறேன்' எனச்சொல்லி அருகில் இருந்த உணவகத்தில் இருந்து உணவுப்பொட்டலங்கள் வாங்கித்தந்தேன். நன்றியுடன் பெற்றுக்கொண்டார்கள்.
விடைபெற்று நகர்ந்தபோது மனம் பாரமாகியிருந்தது. தலைமுறை தலைமுறையாக இவர்கள் தினக்கூலிகளாக... குழந்தையை பாதுகாப்பாக விட்டுச்செல்லக்கூட இடமும் உறவுகளும் இன்றி, ஆபத்தான கிருமிகள் உலவும் குப்பைகளை குழந்தைகளுடனே கிளறிக்கொண்டு...
நம் அரசுகள் இலவசங்களை வழங்குவதில் ஒரு பகுதியை மடைமாற்றி இப்படி தினக்கூலிகளாய் செல்வோரின் குழந்தைகளையும் முதியவர்களையும் நாள்பொழுது முழுவதும் பத்திரமாய் பார்த்துக்கொண்டு உணவளிக்கும் திட்டம் ஒன்றை ஊர்தோறும் உருவாக்கலாமே. அந்த திட்டம் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு தருவதோடு மட்டுமல்லாது இவர்கள் போன்ற vulnerable மக்களின் வாழ்வாதரமும் மேம்படுமே என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்த, எங்கிருந்தோ ஒரு பாடலை நினைவு இழுத்துவந்து மேலும் சோகம் சேர்த்தது...
'அந்தரத்தில் தொங்குதம்மாஆஆஆ சொந்தமேதுமில்லாத ஏழ வாழ்க்க
முந்தியிங்கு வந்ததம்மா, வந்ததிங்கு என்னதென யார கேக்க
...
எம் மண்ணு எனைப்பாக்க நாந்திரும்பி அதப்பாக்க ஏழேழு தலமுறயும் இதுபோல போனதம்மா...' எனப்போகும் மேற்குத்தொடர்ச்சிமலை படப்பாடல்.
விஸ்வகர்மா திட்டம் பார் என மத்திய அரசு முழங்க, கலைஞர் கைவினை திட்டம்தான் நல்லது என மாநில அரசு முறுக்க, இடையில் நைந்துகிடக்கிறது இவர்கள் போன்ற பலப்பல மக்களின் வாழ்க்கை.
அம்மையார், மாமா, அம்மா, அப்பா, ஐயா, விஸ்வகுரு என பலர் வந்துபோனாலும் நம் நாட்டில் நலிந்தோரின் வாழ்வு சிறக்க கடந்த முப்பது ஆண்டுகளில் பலன் தரக்கூடிய நிலையான திட்டங்கள் எவையும் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள் போன்ற நலிந்த மனிதர்களிடம்கூட கேட்டு வாங்கிக்கொள்ள நம் எதிர்கால அரசியல் தலைவர்களுக்கு இருப்பது இவர்களது ஓட்டு மட்டுமே. We have miles to go before they (poverty stricken people I mean; not the politicians!) sleep comfortably.
பேரன்புடன்,
பாபுஜி
நிதர்சனம். இந்த குரல்/ இதனைப் போன்ற பதிவுகள் ஒருநாள் மக்களவையில் ஒலிக்க பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்கு