பறவைகள் எதுவும் தேவைக்கதிகமான அளவில் கூடு கட்டுவதில்லை.
எத்தனை குஞ்சுகள் உருவாக்கலாம் என்கிற தெளிவான உள்ளுணர்வுடன், தன்னுழைப்பில் மட்டுமே அவை கூடுகளை உருவாக்குகின்றன. எதிர்காலத்திற்கென கூடுதல் அறைகள் அறவே கிடையாது.
அந்த கூடென்பதும் வெறும் தாவரக்கழிவுகளால் மட்டுமே...
அந்தக்கூட்டில் குஞ்சுகள் காலுதைத்து சிறகு விரித்து பறக்க வெளியேறும்வரை அவற்றை வளர்ப்பது தாய்ப்பறவையின் உடற்சூடு மட்டுமே, அது தரும் கதகதகப்பு மட்டுமே.
காற்று மழை புயல் வெயில் கடுங்குளிர் இடி மின்னல் தாண்டியும் வாழும் இக்கூடுகள், மரம் சாய்ந்தாலோ கிளை முறிந்தாலோ மட்டுமே மண்ணில் வீழும்...
சிறகு விரிந்த குழந்தைகள் எல்லாம் வாழ்வு பழக வெளியேறிய பின்பு தாய்ப்பறவையும் அதன் இணையும் அந்தக்கூடுகளில் தங்குவதும் இல்லை...
பறவையைக்கண்டோம் விமானம் படைத்தோம் என மார்தட்டும் மனிதக்கூட்டம் மட்டுமே பறவைகளிடம் இருந்து வாழ்விடம் அமைப்பதைக்கூட இன்றுவரை கற்றுக்கொள்ளவில்லை.
நினைத்த காலத்தில் நினைத்த இடத்தில் தன்னுழைப்பு மட்டுமே கொண்டு கட்டப்படும் அற்புதத்கூடுகள் எவற்றையும் மனிதர்கள் ஏனோ கொண்டாடுவதே இல்லை.
வீடென்பது உடல் இளைப்பாறும் இடம் என மட்டுமே என மனிதர்களின் புரிதல் தவறாகவே இருக்கிறது இன்றுவரை. இவர்களின் வீடுகளில் தேவைக்கதிகமான அறைகளிருந்தாலும் சிறகுகளின் கதகதப்பு மட்டும் இவர்களின் குழந்தைகளுக்கு கிட்டுவதில்லை. இந்த கதகதப்பு கிட்டாத குழந்தைகள் எவரும் முழுவதும் வளர்வதில்லை...
ஐந்து தலைமுறைகளாக சோதனைச்சாலை கூண்டில் வளர்ந்த ஒரு பறவையினத்தின் ஒரு வளர்ந்த குஞ்சை திறந்துவிட்ட சில மணி நேரங்களிலேயே அது தனக்கான கூடு ஒன்றை இயல்பாக பின்னத்தொடங்க, வியப்பில் உறைந்து நின்ற ஆய்வாளர்கள் பற்றிய பதிவுகளை ஏராளமாய் பார்த்திருப்போம். மனிதக்குழந்தைகளை இதே இடத்தில் பொருத்திப்பார்த்தால் நமது வாழ்வு முறையின் அபத்தங்கள் உணர்வோம் நாம்.
செயற்கை நுண்ணறிவுக்கு எட்டாக்கனி நம் மரபறிவு. இது ஒன்று மட்டுமே நம் உலகை மீட்கும், காக்கும்.
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக