காவல் துறை உங்களின் நண்பன் என்பது தமிழகத்தில் ஒரு புகழ் பெற்ற வாசகம்.
ஆனாலும் போலீஸ் என்றால் வீடு வாடகைக்கு கொடுக்க தயங்குவதில் இருந்து வடிவேலுவின் சிரிப்பு போலீஸ் வரை சமூகப்பார்வை சற்று கலவரமாகவே இன்று வரை தொடர்கிறது.
முதலாம் வகுப்பு படிக்கையில் என் வகுப்பில் ஒருவன் தினமும் என் ஸ்லேட்டுக்குச்சி, பென்சில், ரப்பர் பிடுங்கிக்கொள்வான், தராவிட்டால் என் அப்பாவை அவனது போலீஸ் அப்பா அரெஸ்ட் செய்துவிடுவார் என மிரட்டுவான் (தனிப்பதிவே எழுதியிருக்கிறேன் முன்பு ஒரு முறை). நானும் கண்ணீருடன் சிலநாட்கள் தாரை வார்த்திருக்கிறேன். பிறகு சில நட்பு அரை டௌசர்கள் தந்த தைரியத்தில் எவ்வாறு அவனது மிரட்டலை வெற்றிகரமாக முறியடித்தேன் என்பதை அந்தப்பதிவில் வாசிக்கலாம் :-))
அப்பாவும் அவர் பங்குக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை சித்ரவதைகள் பற்றி பல அழிச்சாட்டிய ரௌடி கதைகள் சொல்வார் (லாடம் கட்டுதல், நகக்கண்களில் ஊசி, நகம் பிடுங்குதல் இத்யாதி, ஆனாலும் அவர் கதைகளில் ரௌடிகள் அசராமல் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்).
ராமநாதபுரத்தில் பள்ளி நாட்களில் நண்பனது வீட்டருகில் ஒரு A.S.I குடியிருந்தார். நல்ல மனிதராம். புதிதாக திருமணம் ஆனவராம். ஒரு நாள் வீட்டில் மனைவியுடன் பிணக்கு. அவர் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்ப காத்திருந்த மனைவி, வீட்டில் உத்தரத்தில் கயிறு ஒன்று கட்டி அவர் கதவு திறக்கும் நொடியில் தொங்குவதாக பாவனை செய்து (கணவனது அன்பை சோதிப்பதற்காகவாம்) நிசமாகவே தொங்கிப்போனார் என அந்த ஏரியாவே அவர் மீது பரிதாபப்பட்டது. பின்னர் அந்த ஏரியாவே சந்தேகப்பட்டது, அவரது உத்யோகம் காரணமாக.
அவ்வப்போது விறைப்பாக காக்கி சட்டையில் காவலர்களை காணும்போதெல்லாம் அதே காலகட்டத்தில் வந்த படங்கள் வழியாகவே அவர்களை 'கண்டேன்'.
கல்லூரி ஹாஸ்டல் நாட்களில் ஒரே ஒரு முறை இரவுக்காட்சி திரைப்படம் நண்பர்களுடன் சென்று சைக்கிள் மிதித்து திரும்புகையில் ரோந்து போலீஸ்காரர்கள் நிறுத்தி விசாரிக்க, பயத்தில் 'We are returning from a Theatre' என பதில் கூற, 'என்னாடா இங்க்லீசு!' என அவர்களுள் ஒருவர் வீசிய சாராயம் + மொழிப்பற்று லத்திக்கம்பு என் கை கட்டை விரலை பதம் பார்க்க, வலி பல நாட்கள் நினைவில் கிடந்தது...(ஆங்கிலம் பேசினால் விட்டு விடுவார்கள் என்கிற அன்றைய திரை பிம்பங்களே நான் இந்த தாக்குதலுக்கு உள்ளாக காரணம் யுவர் ஹானர்!)
சென்னையில் அலுவலக நாட்களில் ஒரு முறை நான் பயணித்த ஆட்டோவில் lift கேட்டு நிறுத்தி ஏறிய காவலர் ஒருவர், பல நேரம் டூட்டி நின்றுகொண்டே பார்த்து கால் வலி கண்டதால் என சிரித்துக்கொண்டே காரணம் சொல்லி சில கிலோமீட்டர் இலவச சவாரி செய்தபோது சுத்தமாக அவர் மீது நம்பிக்கையில்லை).
எனது வீடு இருக்கும் பகுதியில் சில சில்லறை திருட்டுகள் நடந்தபோது காவல் நிலையம் சென்று வந்த ஏரியா நண்பர்கள், போகாமல் இருந்திருந்தால் செலவு என்பது திருடப்பட்ட பொருட்களோடு நின்றுபோயிருக்கும் என வருத்தப்பட்டனர். எனது நண்பரது கடையின் பொய்க்கூரையை (அதாங்க false ceiling, அந்த ceilingக்கு மேலே சிமெண்ட் ஷீட் மட்டுமே கூரை) பிரித்து யாரோ இருளில் உள்ளிறங்கி கல்லாவில் இருந்த சொற்ப பணத்தை திருடிச்சென்றபோது அவர் காவல் நிலையம் செல்வதை தவிர்த்ததும் இது போன்ற நிகழ்வுகளால்தான் என்றார்.
ஒரு முறை எனது car இல் ஐம்பது மரக்கன்றுகளை ஒரு நர்சரியில் இருந்து ஏற்றிக்கொண்டு திரும்புகையில் வழி மறித்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டச்சொல்லி வற்புறுத்த, ('நீங்க இப்டி உங்க வண்டிலயே லோட் பண்ணி போனா வாடகை வண்டிங்களுக்கு வாழ்வாதாரம் பறி பகுதி சார். அதனால் இது சட்டப்படி குற்றம்'), எந்த சட்டம் என நான் வாக்குவாதம் செய்ய, அவரது உயரதிகாரி ஒருவர் இதை கவனித்து இடை மறித்து 'நீங்க போங்க சார்' என்றார்.
இன்னொரு முறை வெளி நாட்டுப்பணியில் ஆண்டு விடுப்புக்கு சென்னை விமான நிலையத்தில் நீண்ட இரவுப்பயணம் தூக்கமின்றி முடித்து இறங்கி வெளியேற சொற்ப ஆற்றலுடன் நான் விரைய, அங்கு ஒரு காவல் அதிகாரி என்னை நிறுத்தி, என் கழுத்தில் தொங்கிய கேமராவிற்கு indemnity bond எழுதிக்கொடுத்தால்தான் கேமராவை என்னுடன் எடுத்துச்செல்ல அனுமதிப்பேன் என சட்டம் பேச ("நீங்க அத நம்மூர்ல வித்திடமாட்டீங்க அப்டீன்னு ஒரு பாண்டு எழுதி தந்திட்டு அப்றம் எடுத்திட்டு போலாம்... இல்லன்னா நீங்க கேமராவை திருப்பி எடுத்துட்டு போக முடியாத். ஆபீஸ்க்கு வாங்க"), நான் வாதிடத்தொடங்க, சில நிமிட வாதாடலுக்கு இடையே என்னைத்தாண்டி ட்ராலியில் நான்கைந்து பெரிய சூட்கேஸ்களுடன் ஒரு குடும்பம் செல்ல, அந்த காவலர் சட்டென 'சரி இந்த முறை விட்றேன். வரும்போது காமிக்கணும்!' என அடிக்குரலில் சொல்லி அவசரமாய் அந்த குடும்பத்தை இடைமறித்தார்.
பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்கு முன்பெல்லாம் காவலர்கள் வீட்டுக்கு வந்து முகவரி சரி பார்ப்பார்கள், அக்கம் பக்கம் விசாரிப்பார்கள், பின்னர் பணம் வாங்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் செல்வார்கள். காவல் நிலையத்திற்கே நேரில் சென்று நாம் ஆதாரம் காட்டும் சேவை வந்தபிறகு இது வழக்கொழிந்தது.
காவல் துறையுடன் சேர்ந்து நீதித்துறையின் பிம்பமும் (வக்கீல் ஆபீஸ் கட்ட பஞ்சாயத்துகள், லஞ்ச நீதிபதிகள், ஓய்வு பெற்ற பின் உயர் அரசு பதவிகளுக்காக விதி மீறும் நீதி...) நம்பிக்கை தருவதாக இல்லை.
பின்னர் குருதிப்புனல், விசாரணை, விடுதலை சீரீஸ் படங்கள், Felix மரண சூழல் என ஊடகங்களும் நிகழ்வுகளும் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காவல் துறையின் பிம்பம் இன்னும் அச்சுறுத்துவதாகவும் நம்பிக்கையை குறைப்பதாகவுமே உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் வந்த திரைப்படங்களில் எதுவுமே 'காவல் துறை உங்கள் நண்பன்' என்பதை வழி மொழிவதாக இல்லை. இந்த படங்கள் எல்லாமே தணிக்கை சான்று பெற்ற பின்னர்தான் வருகின்றன.
இவையெல்லாம் பார்க்கும்பொழுது நம் நாகரிக வளர்ச்சி பொய்யான ஒன்றே என்கிற எண்ணம் வலுப்பெறுகிறது. தனி மனித பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, நிலப்பரப்பு பாதுகாப்பு என எல்லாவற்றிலும் நாம் வளர்க்கும் சிக்கல்களை காணுகையில் நம்மை சுற்றி உள்ள டிஜிடல் கண்காணிப்பு கருவிகள், பாதுகாப்பு கருவிகள் எல்லாமே நகைமுரண்களாக தோன்றுகிறது.
இன்று நாம் 'ஆதிவாசிகள்', 'காட்டுமிராண்டிகள்' என முகம் சுளிக்கும் இனங்களில் மட்டும்தான் இன்றும்கூட தனி மனித பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் நிலைத்திருக்கிறது (living with Nature, no property, no crimes, no law and order machinery, nobody goes hungry if at least somebody has food to offer etc...).
சிந்திக்க முடிந்தவர்க்கு தெரியும், நம் புது உலகின் காவலர்கள் நம் தொல்குடிகள்தான் என்பது. அவர்களையும் நம் நாகரிக உலகின் காவல் துறைகளும் நீதித்துறைகளும் அவற்றை இயக்கும் அரசுகளும் முடிந்தவரை 'புதிய நாகரிகம்' நோக்கி எப்படி எல்லாம் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை தெளிவாய் சொல்லும் ஒரு Documentary Film தான் SugarCane. திட மனது உள்ளவர்கள் மட்டும் பாருங்கள் (Disney + Hotstar OTT).
Which language movie
பதிலளிநீக்குEnglish.
நீக்குஎன்ன மொழி திரைப்படம்
பதிலளிநீக்கு