இளமையில் நான் வளர்ந்த சூழல், பள்ளி்கல்வி பெற்ற கிருஸ்தவ, இந்து, இஸ்லாமிய பள்ளிகள், அரசு பள்ளிகள் (R.C Morning Star, Ganapathi Vilas, Syed Ammal) எவற்றிலும் கிடைக்காத மத நல்லிணக்க உணர்வுகளை, என் குடும்பம் எனக்கு போதிக்காமலே போகிற போக்கில் கடத்திய மேஜிக்... இப்போதும் வியப்பாக இருக்கிறது.
தாத்தா பழுத்த வேதாந்தி. ஆத்மானந்தா என பெயரெல்லாம் மாற்றிக்கொண்டு, கிராமத்து வீட்டில் சிவனடியார்களை குடில் அமைத்து தங்கவைத்து (அப்படி ஒன்றும் வசதியில்லை அவருக்கு, ஆனாலும் ஆன்மீக ஈர்ப்பு) அவர்களிடம் வேதாந்த வியாக்கியானங்கள் செய்து தெளிந்தவர். கவட்டைப்பலகை ஒன்றில் V வடிவில் பழுப்பான வேதாந்த புத்தகத்தை திறந்துவைத்து கண்ணாடிக்கண்கள் வழியே வாழ்வின் சாரத்தை தேடியவர். கடவுளுடன் பிணக்கு கொண்டு (செல்ல மகள்களுள் ஒருவரின் அகால மரணம்) சாமி படங்களை எல்லாம் புறந்தள்ளி...இதே மனிதர்தான் இடையில் பல காலம் நாத்திகராக வாழ்ந்தார்.
எனது சிறு வயது நினைவுகளின் அச்சாணி, 'கடவுளை நம்பு' என ஒவ்வொரு முறை நான் ஆசீர்வாத திருநீறு பெறும்போதும் அவர் சொன்னதுதான்.
எந்த கடவுள் என ஏனோ அவர் சொன்னதே இல்லை.
அப்பாவுக்கு புத்தக அலமாரி வைத்து நிரப்பி வாசக்க வசதி இல்லை ஆனால் வாசிப்பில் ஆர்வம் அதிகம். பணிக்காலம் முழுதும் நேர்மையாக பணி செய்த குற்றத்தினால் பலப்பல ஊர்களுக்கு குறுகிய இடைவெளிகளிலேயே மாற்றலாகி லாரியில் பொருட்களை அள்ளிப்போட்டு இடம் பெயர்தல் அலுத்துப்போய் ஒரு கட்டத்திற்கு மேல் எங்களை ஒரே ஊரில் இருத்திவிட்டு கைப்பெட்டியுடன் மட்டுமே பல ஊர்களில் வசித்திருக்கிறார். இதில் புத்தகமாவது அலமாரியாவது!
ஆனால் அவரிடம் சில சொற்ப புத்தகங்கள் + நாளிதழ் கட்டிங்குகள் இருந்தன. பல ஆண்டு காலம் போற்றி பாதுகாத்து வைத்திருந்தார்.
நாளிதழ் கட்டிங்குகள் அநேகமாக விலங்குகள், பறவைகள் பற்றி The Hindu நாளேட்டில் வந்த முழு வண்ண படங்களாகவே இருந்தன (முட்டை ஓட்டை உள்ளிருந்து உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு, close up இல் இந்திய புலிகள் etc...)
மகா முருக பக்தர். கோவிலுக்கு எப்பொழுதாவது அழைத்துச்செல்வார். எனது திருமணத்துக்கு, உறவு முறிந்திருந்த தாய்மாமா வீட்டில் பெண் கேட்கப்போகும் முன் திருத்தணி சென்று முருகனிடம் கலந்தாலோசித்துவிட்டுதான் வந்தார். ஆனால் 1990களில் கோவில்களின் பழமை மாறி, கடவுள் சன்னதியில் மனிதர்கள் சக மனிதர்களை மரியாதை செய்வதை வெறுத்து கோவில் விசிட்களை வெகுவாக குறைத்துக்கொண்டவர் ('கடவுள் முன்னாடி எந்த மனிதரும் பெரிய மனிதரில்லையே'). அவரிடம் இருந்த
புத்தங்கள் மிக மிக குறைவு. ஒரு ஆங்கில நாவல், ஒரு தமிழ் நாவல். Non fiction இரண்டு: Pilgrims Progress அதில் ஒன்று, The holy Quran இன்னொன்று.
இவை எனக்கு திறந்துவிட்ட கதவுகள் வழியேதான் இன்றும் நான் என் சக மனிதர்களையும் பிற உயிரினங்களையும் பார்க்கின்றேன், நேசிக்கின்றேன், இவர்களுடனெல்லாம் விருப்பமோடு தொடர்ந்து பயணிக்கிறேன்.
என்னிடம் இப்பொழுது சில புத்தக அலமாரிகள் நிறை சூல்போல புத்தகங்களால் மூச்சிரைத்துக்கொண்டிருக்கின்றன. அறிவியல், வேளாண், வணிக, வசிய, வாழ்வியல், மருத்துவம், மனையடி சாத்திரம், ஆன்மீகம், நாத்திகம், மேஜிக், நிலவியல், வானியல், உடலியல், சித்தர் பாடல்கள், உளவியல், மனவியல், உலக வரலாறு, எதிர்காலம், பூஞ்சைக்காளாண்கள் என எனது தேடல் தளம் விரிவாகிப்போய், எனது இப்போதைய கவலை எனது உறவு + சுற்றத்தில் குறுகி வரும் புத்தக வாசிப்பும், எதிர்வரும் தலைமுறையின் குறுகிவரும் தேடல் தளங்களும் ("We got Google and Chat GPT" வகை தேடல் முடக்கங்கள்...).
இதை விட பெரிய கவலை, 'அந்த religion / caste / community கூடல்லாம் no friendship, OK?' என அடுத்த தலைமுறை குழந்தைகள் படிக்கும் பள்ளி / கல்லூரிகளில் பல பெற்றோரின் உபதேசங்கள்...
எனக்கு விநாயாகரை மிக பிடிக்கும், கிருஷ்ணரையும். சிறு வயதில் பால மித்ரா, அம்புலிமாமா கதைகளில் பல குழந்தைகளுக்கு இந்த இரு தெய்வங்களுமே favourite விளையாட்டுத்தோழர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள் என்பதனால் இருக்கலாம். ஏனோ தெரியவில்லை, அந்த இதழ்களில் ஒரு கதையில் கூட ஒரு சுடலை மாடனோ, இருளப்ப சாமியோ வந்ததில்லை.
பின்னாட்களில் ISKCON இல் 'உங்கள் குழந்தைளின் பிறந்த தினங்களில் + இன்ன பிற special தினங்களில் புனித கங்கை நீர் கொண்டுவந்து புரியாத மொழியில் வேண்டுதல் செய்து ஆசி வழங்குகிறோம், 3000 / 5000 ரூபாய் பேக்கேஜ்களில்' என விளம்பரம் பார்த்தபின் கிருஷ்ணர் கோவில்கள் மீது நாட்டம் குறைந்து, பின்னர் ஒரு கிராம பெரியவர் சில ஆண்டுகள் முன்பு ஒரு வீடு கட்டி கணபதி ஹோமம் செய்த காரணத்தை கேட்டதும் (வீடு கட்டையில பல விதமான ஆளுங்க உள்ளே போய் வந்தாங்களா, ஒரு கணபதி ஹோமம் செஞ்சி தீட்டு கழிச்சோம்...) விநாயகரை கோவில்களில் சென்று வழிபடும் நாட்டமும் குறைந்துபோனது.
வணிகமில்லாத கடவுள்கள் என எந்த மதத்திலும் இல்லை என வாழ்க்கை திரும்பத்திரும்ப உணர்த்த, வணிகமும் மதங்களும் ஊடுருவாத ஆதி தொல்குடி வழிபாட்டு முறைகளையே இப்போது மனம் விரும்புகிறது, இயற்கையை ஆராதிக்கத்தோன்றுகிறது. இந்த உணர்வு எனக்கு வெளியில் இருந்த வந்ததல்ல, அந்த பழைய Hindu full page வண்ணப்படத்தில் கோழிக்குஞ்சு உள்ளிருந்து ஓட்டை உடைத்து வெளிக்கிளம்பியதுபோல...
அப்பா முருகனை மட்டும் என்ன காரணத்தினால் போற்றி வழிபடுகிறார் என இன்று வரை கேட்கத்தோன்றியதில்லை. Religion அவருக்கு highly personal. என்னையும் இன்றுவரை சாங்கியங்களை பின்பற்றச்சொல்லி வலியுறுத்தியதில்லை. ஆனாலும் என்னை முருகன் வெகுவாக ஈர்த்துக்கொண்டிருக்கிறான், சேவலை, மயிலை, பாம்பை தன்னுடன் வைத்திருப்பதனாலும், மலைகளை காப்பதனாலும், முழுக்க முழுக்க சனங்களின் கடவுளாக இருப்பதாலும்!
அவரவர் கடவுள் அவரவர் தேடல். Highly personal.
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக