2000 மாவது ஆண்டிலிருந்து 2010 வரை ஐரோப்பிய வாழ்வு, பணியிடம் என உலகை வெல்லும் பேராசையில் ஓடிக்கொண்டிருந்தோம் நானும் மனைவியும், குழந்தைகளுடன்.
2010 இல், தாய்மண் திரும்ப முடிவு செய்து (return for good type of return) எங்களது அலுவலகங்களில் தெரிவித்ததும் அரைமனதாக ஒப்புக்கொண்டு வழியனுப்பும் விதமாக பல வாழ்த்து அட்டைகள் தந்தனர்.
பதினான்கு ஆண்டுகள் கடந்த பின் இந்த டிசம்பர் 31, இன்றைய தினம், பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் நாங்கள் இருவரும் reorganize செய்துகொண்டிருக்கையில் தற்செயலாக கண்ணில் பட்ட file ஒன்றில் அந்த வாழ்த்து அட்டைகளை கண்டோம். அவரவர் அலுவலக அட்டைகளை சற்று நேரம் கைகளில் விரித்து பார்த்துக்கொண்டோம்.
'என்ன நினைக்கிற?' என்றார் மனைவி.
'இல்ல...ராப்பகலா ஆர்வமா ஜாலியா வேலை செய்த குழுக்களின் சக பணியாளர்கள், அன்று நல்ல நண்பர்கள், ஒருத்தர் பெயரும் நினைவிலில்லை... இதுவா அந்த பதினெட்டு வருட நினைவுப்பேழைகள்னு வியப்பா இருக்கு' என்றேன்.
அவரது அலுவலக நண்பர்கள் தந்திருந்த வாழ்த்து அட்டைகளை இன்னுமொரு முறை புரட்டிப்பார்த்தார்.
'எனக்கு அப்படில்லாம் மறக்கல, முகங்கள் நினைவில இருக்கு' என்றார்.
பல வருடங்கள் இரண்டே இரண்டு குழுக்களுடன் தொடர்ந்து அவர் பணி செய்ததால் அவரது நினைவுகள் அப்படி. எனது பணியில் பல குழுக்கள், பல அலுவலகங்கள் என்பதால் இருக்குமோ என விவாதித்தோம்.
ஆனால் விவாதமின்றி நாங்கள் ஆமோதித்த ஒன்று என்னவென்றால், the power of these cards to bring back those jolly good years in a jiffy, the kind of happiness that permeated us when we had that reflection...
இடங்கள் போல மனிதர்களும், நாட்களும்கூட ஒரு விதத்தில் நம் மனக்குளங்களில் தத்திச்சென்ற பானைச்சில்லின் அதிர்வுகள்தான். எறிந்தவர் யார் / எது என்பது மறந்துபோனாலும், even கசந்துபோனாலும் நினைவுகூறும்போதெல்லாம் அவை புதிதாய் ஏற்படுத்தும் அதே பழைய ripples and good vibes... kind of a time travel ticket.
அதனால்தானோ என்னவோ இன்று நம்மிடம் முகம் கொடுத்து பேசக்கூட ஆர்வமின்றி பகை பாராட்டும் மனிதர்கள்கூட நம் நினைவுக்குளங்களில் எரித்த கற்களின் வட்ட வட்ட அதிர்வுகள் மட்டும் இனிமையாய், அவர்களையும் இந்த நொடியில் நேசிக்கும் வல்லமையை நமக்கு தருகின்றன (ஆனால் நமது மூளை உடனடியாக அலெர்ட்டாகி, 'ஏய், அவர் அன்னைக்கு அப்படி இருந்தாருதான். ஆனா இப்ப முறுக்கிகிட்டடு திரியிறாரு, ஆமா, அம்புட்டுதான் சொல்வேன்' என நிகழ்காலத்திற்கு வம்பை இழுத்து வரும்).
அவர்களைப்போலவே நாமும் யார் யாரோவுடைய நினைவுகளில் நொடியில் நோன்றி குளத்தின் விளிம்பு நோக்கி விலகும் அதிர்வுகள்தானே.
2024 விடைபெறும் இறுதி நிமிடங்களில் தொடங்கி, 2025 பிறக்கும் முதல் நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டு எழுதிய இந்தப்பதிவை நீ வாசிக்கும் பொழுதில் யார் யாருடைய நினைவுகளையோ உன் மனதில் அது தெத்துக்கல் உருட்டி விளையாடி மறையலாம். நினைவின் வட்ட வெளி விளிம்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தால் உண்டாகும் மாபெரும் தொடர் வட்டங்களில் நீயும், நானும், எல்லோரும் இணைந்தே இருப்போம் நட்பே! அது என்றும் இனிப்பாகவே இனிக்கவும், பழைய கசப்புகள் அனைத்தையும் மெல்ல மெல்ல இனிப்பாக மாற்றவும் எல்லாம் வல்ல இயற்கையையும் அதனின்று உண்டான வாழ்வியலையும், அந்த வாழ்வியல் உருவாக்கின கடவுள்களையும் வேண்டுகிறேன்.
புத்தம்புதிய ஆண்டில் என் அன்பு வாழ்த்துகள் உனக்கு என் நட்பே!
சக உயிர்களனைத்தையும் நேசிப்போம், மனிதர்கள் உட்பட :-)
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக