தற்செயலாகத்தான் எனக்கு அறிமுகமானார்.
மன்னார்குடியில் ஏதோ ஒரு பள்ளியில் ஒரு சிவராத்திரி அன்று வேஷ்டி திரை கட்டி அதில் ஒரு படம் காட்டினார்கள். 'அழைத்து வரவி்ல்லை, இழுத்து வந்திருக்கிறார்கள்' என சங்கிலியாய் பிணைக்கப்பட்டு அரசவையில் அரசன் முன் அடிபணியா சீற்றத்தோடு அவர் முழங்கத்தொடங்கிய அந்த நொடியில் தமிழ் மீது நான் கொண்ட காதல் இன்றும் தொடர்கிறது.
அந்தப்படம் முடியும்போது அரை டவுசர் பார்வையாளர்கள் நாங்கள் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக மாறிவிட்டிருந்தோம்.
அதன் பின் சாரங்கதாரா, தூக்குதூக்கி, திருவிளையாடல், குங்குமம், பராசக்தி (ஆமாங்க, படம் வெளிவந்த பொழுது காணத்தவறியிருந்தால் அல்லது நாங்கள் பிறப்பதற்கு முன்னால் ரிலீசான படங்களை பின்னால் ஏதாவது ஓரு வருடம் நாங்கள் படித்த ஊரில் சினிமா தியேட்டரில் அல்லது டென்டு கொட்டாயில் சிவராத்திரி, பொங்கல், முழாண்டு விடுமுறை போன்ற விஷேச நாட்களில் படம் வந்தால் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு பெற்ற தலைமுறை நாங்கள்!) போன்ற படங்கள் அவரது நடிப்பின் உயரத்தால் எங்களை தொடர்ந்து வசீகரிக்க, அவரது வசன உச்சரிப்பு எங்கள் தமிழார்வத்தையும் தொடர்ந்து தூண்டியது. ஒரு விதத்தில் தமிழ்நாட்டில் ஒரு தலைமுறை தமிழை காதலிக்க இவரே முக்கண் முதல் காரணம்! அதுவும் குறிப்பாக பராசக்தி! கலைஞர் கருணாநிதி எனும் தமிழ் ஆளுமையை எனக்கு அறிமுகம் செய்ததே சிவாஜிதான்!
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பியை இவர் தருமி வழி தந்து பாண்டியன் சபையில் நக்கீரருடன் தமிழால் மோதி நெற்றிக்கண்ணில் fire விட, அந்தப்பாடல் எங்கள் பள்ளித்தமிழ் ஆசிரியர் எங்களுக்கு பத்தாம்ப்பில் சொல்லித்தருவதற்கு முன்னரே மனப்பாடமாகிப்போனது. பள்ளியில் அந்தப்பாடலை கற்றுத்தந்தபின்னர் அவர் பாடலின் பொருள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது எனக்கேட்டபோது ஒட்டுமொத்த வகுப்பும் கரமுயர்த்த, அவர், தனது கற்பிக்கும் திறமையினால்தான் இது நிகழ்ந்தது என நினைத்து
ஆனந்தத்தில் தத்தளித்தது இன்றும் நினைவில் நிற்கிறது.
பின் நாட்களில் நாங்கள் கமல், ரஜினி, கஜினி ரசிகர்களாக மாறியதும் இவரது புதிய படங்களை பார்க்கும் ஆர்வம் குறைந்தது. திரிசூலம் எனும் ஹிட்டு படத்தில் வயதான சிவாஜி கேரக்டர் பல வருடம் முன்பு பிரிந்துபோன மனைவியின் தொலைபேசி அழைப்பில் அவரது குரல் கேட்டதும் ஓவர் ஆக்டிங்கில் ரிசீவரை தரையில் எறிந்து அடுத்த நொடியில் இன்னும் ஓவராக நடித்து தரையில் புரண்டு உடலை இழுத்துக்கொண்டே தொலைபேசியை நோக்கி நகர்கையில் என் மனதில் இருந்த வணங்காமுடி மனோகரன் ஓடி ஒளிந்துகொண்டான்.
Then Thevar Mayan happened and changed my perspective about The legend totally. 'அடப்பாவிகளா, இப்படியாப்பட்ட சிங்கத்தை இடையில சரியா பயன்படுத்த விட்டுட்டீங்களேடா!' என தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் தமிழ் ரசிகர்களையும் வைதுகொண்டே பல முறை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன், இன்று வரையில்.
'வெத...நான் போட்டது! இதெல்லாம் என்ன பெருமையா? நம்ம கடமை!' என வயது முதிர்ந்த சிங்கத்தின் கர்ஜனை இன்றும் என் பாதையின் வெளிச்சமாக இருக்கிறது.
சின்ன வயதில் விளையாட்டு தமிழ் வழியே (சிவாஜி வாயிலே ஜிலேபி, டப்பா டப்பா வீரப்பா எப்ப டாப்பா கல்யாணம் etc...) உச்சரிப்பு பழகிய அரை டவுசர்களை தமிழ்க்காதலில் மூழ்கவைத்த இந்த மகாநடிகரை திடீரென இன்று என் நினைவுகள் ஏன் இழுத்துவந்து எழுத வைத்தன என்று தெரியவில்லை. காரணங்கள் இருந்தே ஆகவேண்டுமென கட்டாயமா என்ன?!
கொசுறு: இவர் தூண்டிய தமிழ்க்காதல் மட்டுமல்லாது என்னை இன்றுவரை வியக்கவைக்கும் இவரது Swag! உத்தமபுத்திரனின் 'யாரடி நீ மோகினீஈஈஈ?' swag இன்று வரை திரையிலும் நிஜத்திலும் யாரும் விஞ்சமுடியாத swag!!
கருத்துகள்
கருத்துரையிடுக