முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்தாய நெல்லும் ஆண்டாள் பாசுரமும்

மருதவனத்து நான்கு கட்டு வீட்டில் கொல்லைப்புறத்திலிருந்து ரிவர்ஸில் வந்தால் அடுக்களை பகுதி தாண்டி ஆளோடி என்கிற பகுதி இருந்தது. விவசாய குடும்பத்தின் வருடாந்தார அறுவடை நெல்மணிகள் ஒரு பெரிய மரத்தாலான பத்தாயத்தில் பாதுகாப்பாக இருக்கும் இடம். பத்தாய பகுதி தாண்டி முன்னேறினால் இரண்டாம் கட்டு பகுதி, தாத்தா புழங்கும் இடம். தாண்டி முன்னேறினால் திண்ணைப்பகுதி, வீட்டின் முதல் பகுதி. திண்ணையின் ஒருபுறம் கூண்டு வண்டி நிறுத்தியிருக்கும்.

உழவுப்பணியில் ஈடுபடுபவர்கள் பணிக்காலத்தில் தினமும் பாட்டி கையால் கொல்லைப்புறம் கேணியடி தளத்தில் அமர்ந்து உண்பர். அவர்களுக்கு அதை தாண்டிய வீட்டு பகுதிகளுக்கு அனுமதி கிடையாது.


நினைவு தெரியத்தொடங்கிய காலத்தில் இது ஒரு விசித்திரமான அமைப்பாக தோன்றியது...அவர்கள் அறுவடை செய்து புடைத்து தூசு நீக்கி தரும் நெல்மணிகள் மட்டும் வீட்டுப்பத்தாயம் வரை வருகையில் அவர்களுக்கு மட்டும் ஏன் தடை என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருந்தது.


தாத்தா ஒரு பலாப்பழ மனிதர். கரடு முரடான வெளித்தோற்றம், ஆனால் உள்ளுள் அன்பு கசியும் மனிதர். அவர் மேல்சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை. இடுப்பில் வேஷ்டி மீது பச்சை நிற பட்டை பெல்டில் எப்போதும் திருநீறு வைத்திருப்பார், இறை நினைவு உந்தும்போதெல்லாம் அனிச்சையாய் நிருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வார். சித்தாந்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சிவனடியார்களை அவ்வப்போது வீட்டில் அதற்காக அவர் அமைத்திருந்த குடில் ஒன்றில் தங்கச்செய்து விருந்துபசாரம் செய்து விவாதங்கள் செய்வார். அவரிடம் ஊரில் எல்லோருக்கும் ஒரு அச்சம் கலந்த மரியாதை இருந்தது.

இப்படியாகப்பட்ட தாத்தாவிடம் அந்த மகத்தான கேள்வியை ஒரு நான் கேட்டேவிட்டேன். அப்போது எனக்கு ஒன்பது வயது என நினைவு. அவரது கரங்கள் வேகமாக கைத்தடியை தேடுவதற்குள் சிட்டாய் ரிவர்ஸில் பறந்துவிட்டதால் விடையளிக்கும் வாய்ப்பை அவருக்கு நான் தரவில்லை என்கிற குற்ற உணர்வு மட்டும் மீந்திருந்தது. பின்னாளில் அந்த சிற்றூரின் வாழ்வியலும் சமூக படித்தட்டுகளும் மெல்ல புரியத்தொடங்கியபோதும் என் மனதில் ஒரு கோபம் மட்டும் தொடர்ந்தது. 

பின்னர் உடல் நலம் குன்றி அவர் மறைந்தபின்பு என் Renegade அப்பாவிடம் (தத்தாவின் வாழ்வியலுக்கு அப்பா ஒரு Counter Point!) இதே கேள்வியை கேட்டபோது அவர் அந்நாளில் அங்கு நிலவிய feudal system பற்றி எனக்கு அடிப்படை வகுப்பு நடத்தி புரியவைத்தார். ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தபோதும் அன்றைய வாழ்வியலை இன்றைய சூழல் வழியே நோக்குவது சரியல்ல என்கிற பக்குவம் வந்தது.


இன்று எந்த மதத்து மனிதர்களும் பூமியில் இறங்குவதற்கு முன் தங்கியிருக்கும் கருவறைகள் உள்ளேயும் அனுமதியே தேவையின்றி சுதந்திரமாய் நுழைந்து உலவும் இசைக்கு சொந்தக்காரரை, ஒரு கோவில் கருவறைக்குள் நுழைய விடாதது பரபரப்பான பேசுபொருளாக இருப்பதை அறிந்த நொடியில் அந்த மருதவன இரண்டாம் கட்டு மரப்பத்தாய நெல்மணிகள் மீண்டும் நினைவில் உருளத்தொடங்கின. 


நெஞ்சகமே கோவில் 

நினைவே சுகந்தம்

அன்பே மஞ்சனநீர்

பூசை கொள்ள வாராய் பராபரமே ! என தாயுமானவர் பாடிய, பூசலார் கட்டிய கோவிலில் சிவன் (காஞ்சி அரசன் கட்டிய கோவிலை மறுத்து) குடிகொண்டது போலத்தான் அவரும் இசையால் பெருங்கோவில் தன்னுள்ளே எழுப்பி அதில் குடிகொண்ட தெய்வங்களுடன் இசை வழி உரையாடுகிறார். அவரது பாசுரம் ஆண்டாளுக்கும் இனிக்கும்தானே! 


'எதை விலகச்சொல்கிறாய்? இந்த உடலையா இல்லை எனது ஆன்மாவையா?' என ஆதிசங்கரருக்கு புலையன் வடிவில் சிவனே பாடம் நடத்தியும், 'ஒரு புலையனிடமிருந்து இத்தகைய ஆத்மஞானம் வெளிப்பட்டால் அவனையும் வணங்குவேன்' என மனீஷ பஞ்சகம் இயற்றிய ஆதி சங்கரர் கூட அன்று நிலவிய சமூக கட்டமைப்பை மாற்றாது Polish ஆக கடந்துதானே சென்றார்?!


அவர் வணங்கிய ஈசன் கூட கோவிலுக்குள் தரிசன அனுமதி மறுக்கப்பட்ட நந்தன் சிதம்பர கோவில் வாசலுக்கு வெளியே தீக்குளிக்க முயன்றபோது அவனை கோவிலுள் அழைத்துச்செல்லாது கோவிலுக்கு வெளியேதானே அவனுக்கு தரிசனம் தந்தார்...


நான் மகாத்மா என வியக்கும் காந்தி கூட வைக்கம் ஆலய நுழைவு போராட்டத்தில் போராடிய அடித்தட்டு மக்களுக்கு கோவில் பிரகார வீதிகள் வரை மட்டும்தானே அனுமதி வாங்கித்தரமுடிந்தது...


'ரெண்டாயிரம் வருசமா வெற்றிவேல் வீரவேல்னு ஓடிகிட்டிருந்த கூட்டம்தேன். சட்டுனு மாறச்சொன்னா எப்படி மாறுவான்? மெல்லத்தான் மாறும், மாத்தணும். அதுக்கான விதை நாமதான போடணும். வெத... போட்டவொண்ணே பழம் சாப்புட முடியுமா? நீ சாப்புடுவ, ஒன் மயன் சாப்பிடுவான், அவன் மயன் சாப்புடுவான் ஆனா வெத... நான் போட்டது! இதெல்லாம் என்ன பெருமையா? நம் கடம!!' என பெரியாரின் கடமை பெருமை பேசி சிலிர்க்கும் நாமெல்லாம் பழம் சாப்பிடுவதுடன் மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து விதைகளையும் நம் சமூகத்தில் ஊன்றுவதற்கு கடமைப்பட்டுள்ளோம்.


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...