ஒரு முறை தஞ்சை பயணத்தில் உடன் பயணித்த ஒருவர் இந்த உணவகத்தை அறிமுகம் செய்தார்.
"பழைய ஓட்டல்ங்க. ப்ராமின்ஸ் பல தலைமுறையா நடத்தறாங்க. சாப்பாடு நல்லாருக்கும். ஒங்க அத்தான் திருச்சி போகும்போதெல்லாம் இங்கதான் சாப்பிட நிறுத்த சொல்வார்'
மறைந்த கண்ணா அத்தான் - உணவுப்பிரியர். அவரது உணவு சாய்ஸ் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அடுத்தபயணத்தின்போது நிறுத்தி, மதிய உணவருந்தினோம், நானும் என் மனைவியும்.
அளவு சாப்பாடு, தக்காளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், மெது வடை, தயிர் வடை, சாம்பார் வடை. வீட்டு சமையல், கமர்சியல் மசாலாக்கள் அதிகமாக கலக்காத, வயிற்றைக்கலக்காத உணவு. ரசித்து உண்டோம். விலையும் அதிகமில்லை.
இலையை எடுத்து தொட்டியில் போட்டுவிட்டு, கை கழுவுகையில் அங்கிருந்த பணிப்பெண்ணிடம் 'சமையல் யாரம்மா?' என்றேன்.
" ஏன், உணவில் ஏதாவது குறையா?" என நிதானமான ஆண்குரல் பின்னால் இருந்து கேட்டது. திரும்பினால் இந்த புகைப்படத்தில் இருப்பவர், ஒரு defensive மன நிலையில் குறைகள் கேட்க ஆயத்தமாக நின்றிருந்தார்.
'நிறைகள் சொல்லவும் தேடலாமில்லையா?' என்றேன் சிறு புன்னகையுடன்.
1977 ல் இருந்து அவர்தான் சமையலாம். மலர்ந்த முகத்துடன் 'சொல்லுங்க!' என்றார்.
சொன்னோம். கேட்க கேட்க மகிழ்ச்சியின் ஒளி பெருகிய கண்களுடன், தணிந்த குரலில் '45 வருசமா நான்தான். இதுவரை யாரும் இதை சொன்னதில்லை, உரிமையாளர் உட்பட' என்றார். அதன் பின் நாங்கள் விடைபெற்று வெளியேறும் வரை அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி...
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மதியம் அங்கே உணவருந்த நிறுத்தினேன்.
புதிதாக சில பணிப்பெண்கள். நெற்றியில் நாமமிட்ட அதே முதலாளி. அதே எண்ணெய் கொப்பரை, அதே உணவு மேசை. பழைய சமையல்காரரை மட்டும் காணவில்லை.
உணவு முடித்து விசாரித்தேன் 'தெரியலங்க. நாங்க புதுசு. ரெண்டு வருசந்தான் ஆவுது' என்றார் வெள்ளந்தி பணிப்பெண்.
அந்த பணிப்பெண்ணே என்னிடமிருந்து பணத்தை வாங்கி, முதலாளி மேசையில் வைத்தார். முதலாளி பணத்தை எடுத்து பெட்டியில் வைத்து, மீதத்தொகையை மேசையில் 'எறிந்தார்'.
அவரது அந்த செயல் என்னை ஏதோ செய்தது. பணிப்பெண் பணத்தை எடுத்து வருகையில் முதலாளி காதில் விழாத தொலைவு சென்று நின்றேன். வந்த பெண்ணிடம் 'ஏம்மா இப்படி? கைகளில் வாங்கி, கைகளில் தருவதில்லையா?' என்றேன்.
அச்சம் கலந்த பார்வையுடன், 'இல்லைங்க, இப்படிதான் இங்கே...' என்றார்.
Hey Ram படத்தில் வயதான சாகேதராம் நவீன சென்னையில் மருத்துவ மனைக்கு ஆம்புலன்சில் விரைகையில் மதக்கலவர கண்ணீர் குண்டுகள் சத்தத்தில் கண்விழித்து 'என்ன' என வினவ, 'மதக்கலவரம் தாத்தா' என பேரன் விளக்க, 'இன்னுமா?!' என வேதனையுடன் தேய்குரலில் கேட்பது மனக்கண்ணில் வந்துபோனது.
'இன்னுமா?!' என நானும் கேட்டேன், ஆமாமென தலையாட்டினார்.
சாகேதராமின் சோகம் என்னையும் தொடர்கிறது...
மதங்களுக்கு இடையே மட்டுமா கலவரம்? ஒவ்வொரு மதத்திற்குள்ளும் இருக்கிறதுதானே...
பெரியார் மண்ணு... புண்ணாக்கு புடலங்கா மண்ணு!
தமிழகம் மட்டுமல்ல,
வருவாயின் மூலத்திற்கு சாதி மதம் பார்க்காத சமூகம், யார் கையிலிருந்து பெறுவது என தானே வகுத்துக்கொண்ட வரையறையில் வகுந்து கிடக்கிறது எனது இந்தியா.
இது பிராமண சமூகத்துக்கு மட்டுமான சிக்கல் அல்ல. எல்லா வர்ண அடுக்குகளிலும் நமக்குள்ளே நாமே உண்டாக்கிக்கொண்ட பல்வேறு உப சிக்கல்கள், உப தேவதைகள் போல...
பிறப்பால் அனைவரும் சமம், மனிதர்கள் மட்டுமல்ல, ஏனைய உயிர்களும்தான் என்கிற உண்மை என்று நம்மை இயக்க அனுமதிக்கப்போகிறோமோ அன்றுதான் நமக்கான சுதந்திரம் நமதாகும்...
நான் இனி அந்த உணவகம் செல்வதாக இல்லை.
பேரன்புடன்,
பாபுஜி
பதிவின் தலைப்பு பற்றிய பின் குறிப்பு:
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்
சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ
வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்
- எழுதியவர், யாரோ பாரதியாம் :-(
கருத்துகள்
கருத்துரையிடுக