வலிவலத்தில் அம்மா பாட்டி வீட்டில் கோடை விடுமுறையில் அடுப்பறையில் விறகடுப்பில் பாட்டியோ சித்திகளோ தேநீர் கொதிக்கவைக்கையில் அடுப்பின் தீக்கங்குகளுக்கு மத்தியில் புளியங்கொட்டைகளை வேகவைப்போம். கங்குகள் அணையாதிருக்க மூச்சிழுத்து ஊதுகுழலில் கங்கு நோக்கி ஊதிக்கொண்டே கொதிக்கும் நாட்டு மாட்டுப்பாலில் சுத்தமான தேயிலைத்தூளை இட்டு இனிப்புக்கு வெல்லம் சேர்த்து தேநீர் தயாராகும் நேரத்தில் புளியங்கொட்டைகள் வெந்துவிடும். அவற்றை மென்றுகொண்டே மிடறு மிடறாய் தேநீர் அருந்துகையில் அவை நாசியில் ஏற்றிய நறுமணம் என் உள் ஆழத்தில் தண்ணென குளிர்ந்த கூழாங்கல்லாய் என்றும் சுமப்பேன்.
அப்பா பாட்டியின் அடுப்பறை எங்களுக்கு (பசங்களுக்கு) தடை செய்யப்பட்ட பகுதி். வாசல் திண்ணை அல்லது கொல்லைப்புற கிணற்றடி மட்டுமே எங்கள் தாத்தா 'அனுமதித்த' பகுதிகள். அப்பா பாட்டி அமைதியின் மொத்த உருவமாய் மெலிதாய் சிரித்துக்கொண்டே சித்தியின் உதவியோடு அனைவருக்கும் காய்ந்த சாண வரட்டிகளையும் விறகுகளையும் எரிபொருளாக்கி உணவு சமைப்பார். ஒரு முறை நாங்கள் கிணற்றடி கொல்லைப்புற மண்ணில் கல்லடுப்பு செய்து, தென்னை மட்டைகள் கொண்டு தீ மூட்டி, சீவிய இளநீரில் கையளவு அரிசியும் இடித்த வெல்லமும் இட்டு அதை அடுப்பில் இட்டு செய்த சர்க்கரை பொங்கல் இன்றும் இனிக்குது நினைவில்.
சிற்றூர் தாண்டி நாங்கள் வசித்த பல சிறு நகரங்களில் எங்கள் வீட்டில் மண்ணெண்ணைய் அடுப்பு. பதின் பருவத்தில் அப்படி ஒரு ஊரில் அடுப்பிற்கு எரிபொருள் வாங்க ரேசன் கடையில் வரிசையில் நின்ற அனுபவமும் உண்டு. மண்ணெண்ணெய்க்கென ஒரு தனி மனம் உண்டு தெரியுமா?!
வீட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வருபகையில் கல்லூரி வாழ்வுக்கு நகர்ந்தாச்சி. கல்லூரி மெஸ்ஸில் மீண்டும் விறகடுப்பு...
படிப்பு முடித்து பணியில் சேர்ந்தபின் கல்லூரி நண்பனொருவனின் அறையில் எங்களுக்காக அவன் வெஜிடபிள் ரைஸ் செய்து தந்த மினி கியாஸ் சிலிண்டரை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை.
அது தந்த உத்வேகத்தில் நாங்கள் (மென்பொருளாளர்கள்) வசித்த வீட்டிலும் கியாஸ் ஏற்பாடு செய்து... சில வருடங்கள் அப்பா வந்துசெல்லும்பொழுதெல்லாம் தவறாமல் கேட்ட அந்த 'ஒரு காபி'யை கூட ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றுதான் வாங்கித்தரும் சோம்பேறித்தனத்தை அந்த வீட்டில் வசதித்தவரை விட்டொழிக்க முடியவில்லை; சமையல் பாத்திரங்கள் (!) கழுவ அவ்வளவு அலர்ஜி :-)
முதல் வெளிநாடு பயண வாழ்வில் CNG எனப்படும் கம்ப்ரெஸ்ட் நாச்சுரல் கியாஸ் அடுப்பில் நாங்கள் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டபோது சமைப்பது ஒரு குழு, பாத்திரங்கள் தேய்ப்பது ஒரு குழு என லாஜிகலாய் பிரித்து சுழற்சி முறையில் இரு பிரிவுகளிலும் வேலை செய்து பழகினோம், நம்ம ஊர் உணவுக்கு வேறு வழியின்றி!
அடுத்தடுத்து வெளி நாடுகளில் வாழ்கையில் CNG யிலிருந்து மின்சார அடுப்புகளுக்கு முன்னேறி, பின்னர் அந்த அடுப்புகளும் Induction அவதாரங்கள் எடுத்து, மின்சார induction அடுப்புக்கு தனி பாத்திரங்கள், மற்ற வகை அடுப்புகளுக்கு தனி பாத்திரங்கள் என அறிவு விருத்தியாகி பெருமிதமாய் ஊர் திரும்பி பல ஆண்டுகள் கடந்தபின் இயற்கை வாழ்வுத்தடத்தில் சூரிய அடுப்பு, Bio Cake Stove, சாண எரிவாயு அடுப்பு, உணவுக்கழிவுகளில் இருந்து எரிவாயு அடுப்பு என நாங்கள் நடை பழகிக்கொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் எங்கு நோக்கினும் 'விறகடுப்பு சமையல், உன்னத ருசியில்!' என ஒளி உமிழும் விளம்பர
பலகைகளை பார்க்கும்போது உள்ளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி + சோகம்.
மகிழ்ச்சி: வாழ்க்கை ஒரு வட்டம்டோய் என்கிற புரிதலால்.
சோகம்: விறகடுப்பு சமையல் Elite trend ஆகும் இதே நேரத்தில் சாமான்யர்களின் வீடுகளில் IOC நிறுவனம் piped gas connection தருவதற்காக சாலைகளை தோண்டி குழாய்கள் பதித்து மூடிக்கொண்டிருப்பது + நம் பிரதமர் தானே விளம்பர மாடலாய் தோன்றும் 'ஹர் கர் கியாஸ் சிலிண்டர்' திட்டங்கள்.
எளிதான தற்சார்பு வாழ்வியலின் அங்கமாய் இருந்த விறகடுப்பு இன்று பணம் உள்ளவர்கள் மட்டுமே உண்ணக்கூடிய உணவகங்களின் 'விற்பனை மந்திரமாக' மாறிப்போக, தற்சார்பற்ற, விரைவிலேயே காலியாகப்போகும் எண்ணெய்ப்பொருளாதாரம் சார்ந்த கியாஸ் அடுப்புகள் நம் கருவேலங்காடுகளின் சமாதிகள் வழியே நம் வீடுகளில் நவீன வடிவங்களில் நுழைய, இதில் நாம் எங்கு தற்சார்பு வாழ்வியல் பழகுவது, புவியை காப்பது?!
ஆனால் இந்த மாற்றங்கள், அவற்றின் பின்னால் இருக்கும் அரசியல், பெருவணிகங்கள் எவையும் தொட இயலாத இடத்தில் ராமையா என்னும் மனிதர் கடந்த பல ஆண்டுகளாக தம் தோட்டப்பணியிடத்தில் தேநீர் இடைவேளைகளை மூன்று கற்கள், சில காய்ந்த சருகுகள், ஒரு மண் பாத்திரம், ஒரு தண்ணீர் குவளை, தோட்ட மரங்களில் இருந்து பறித்த ஒரு கைப்பிடி இலைகள் மற்றும் ஒரு தீப்பெட்டி துணையுடன் விமரிசையாக கொண்டாடி வருகிறார். வீட்டிலும் அதே முறையில் அவர் குடும்பத்தினர் உணவு சமைக்கிறார்கள்.
நண்பர்களே,
அடுப்பில்லா சமையல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சமையலில்லா உணவு கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நம் மனித இனம் தவிர அனைத்துயிர்களும் அடுப்புகள் இல்லாது, சமையலே இல்லாத உணவு உண்டு வாழ்கையில் நாம் மட்டும்
எட்டு மணி நேரமாவது உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்கிற சட்டத்தை 'நமக்கு நாமே திட்டத்தில்' ஏன் செய்துகொண்டோம் என சிந்தித்திருக்கிறீர்களா? நம்மில் பலர் அப்படி உழைத்தும் வயிறார உணவு அவர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை என சிந்தித்திருக்கிறீர்களா?
My dear friends, Nirvana awaits us all if we can do some more serious and focused travel!
பேரன்புடன்,
பாபுஜி
PC: From Tamil Boldsky website. Maybe subject to copyright.
கருத்துகள்
கருத்துரையிடுக