ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, பெருமாள் பேரைச்சொல்லி லட்டு தரும் கூட்டம் நாம்.
விலங்கின் கொழுப்பு கலந்த நெய் என பற்றவைக்கபட்ட நெருப்பு, தணிவதற்கு நாளாகும் என்றே தோன்றுகிறது. நமது அரசியல் 'அமைப்பு' அப்படி.
பக்தகோடிகள் அனைவரும் உண்ணும் உணவில் உள்ள கலப்படம் எவர் கண்ணையும் இதுவரை உறுத்தவில்லை. எந்த அரசியல் கட்சிகளும் இதுவரை கொடிபிடிக்கவில்லை.
கோவிலுக்கு கோடிக்கணக்கில் தரிசிக்க வரும் பக்தர்களின் வயிற்றில் விலங்கின் கொழுப்பு இருக்கலாம் தப்பில்லை என்பதுதான் பொது நியதியாக உள்ளது.
குற்றம் சாட்டியவர்களும் மறுப்பவர்களும் இதன் பின் உள்ள அரசியல் தெரியாமல் பக்தியினால் மட்டுமே இதை செய்கின்றனர் என நினைப்பவரா நீங்கள்?
ஒரு சப்ளை செயினில் தவறுகள் நிகழ்ந்தால் தவறின் மூலம் கண்டு, களைந்து, செயலை தொடர்வது இயல்பான அணுகுமுறை. அது பெருமாள் பெயரால் வழங்கப்படும் லட்டு என்றாலும், நம் மாதபி புக் என்றாலும்.
இந்திய அரசின் செபி நிறுவன தலைவர் பொறுப்பில் இருக்கும் மாதபி புக், அதானி குழும ஊழலுக்கு உடந்தையாக இருந்தார் என மிகப்பெரிய குற்றச்சாட்டு சென்ற மாத ப்ரேக்கிங் நியூஸ்.
அவர், விதிமுறைகளை மீறி செயல்பட்டாரா என அறிய ஒருவர் 'தகவல் உரிமைச்சட்டத்தில்' செய்த விண்ணப்பத்தை செபி நிரகரித்திருக்கிறது இந்த வாரம். நிராகரிக்க அந்த அமைப்பு தந்திருக்கும் காரணம் என்ன தெரியுமா?
'உங்களுக்கு நேரடியாக தொடர்பில் இல்லாத ஒருவரின் தகவல்களை உங்களுக்கு தேடித்தர நாங்கள் பணியாளர்களை பயன்படுத்தினால் அதைவிட முக்கியமான பல தினசரி செயல்பாடுகள் முடங்கிப்போகும். எனவே, நிரகரிக்கிறோம்'
!
இப்போது நம் நாட்டின் அதி முக்கிய தலைவர்கள் எல்லோரும் களமிறங்கி, குற்றத்தின் வேரை களைவோம் என சூளுரைத்துக்கொண்டிருப்பது, மாதபி புக் மீதான குற்றம் பற்றி அல்ல, திருப்பதி லட்டு பற்றி!!
இரு கோடுகள் தத்துவத்தை இந்த அளவு கையாளும் தேசம், இந்த 'Take Diversion' பலகைகளை பின்பற்றி இன்றளவும் நம்பி அலைகிறதே!
பெருமாளே, எங்களை எல்லாம் எங்களிடமிருந்தே காப்பாற்று. நாங்கள் உன் லட்டை காப்பாற்றுகிறோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக