அதிகாலை குளிர் காற்றில் விரையும் லாரி.
லாரியின் திறந்த முதுகில் நின்றவண்ணம் பயணிக்கும் மூவர்; தொழிலாளர்கள்.
குலுங்கி நகரும் அந்த லாரியில் மூவரில் ஒருவன் தன்னைச்சுற்றி இரைச்சலோடு விரையும் வாகன புகை, ஓசையின் ஊடாக கைபேசியினை தன் முகத்திற்கு முன்னே உயர்த்தி தன்னைத்தானே படம் எடுக்கிறான் உலகை வென்ற புன்னகையணிந்து. சிவப்பு பச்சையாகி லாரி வேகமெடுப்பது கூட அவனது தவத்தை கலைக்கவில்லை.
பெரு நகர சாலையோரம் சுகாதார பணியாளர் ஒருவர் கையில் தரை பெருக்கும் நீள்குச்சி துடைப்பத்தை தரை தட்ட இழுத்துக்கொண்டே மெல்ல நடக்கிறார் சன நெரிசலில். குப்பைகள் எதையும் நகர்த்தாமலே தரைமீது தவழ்ந்து செல்கிறது துடைப்பம்.
'நகரு நகரு' என குரல் கொடுத்துக்கொண்டே சுமக்க முடியாத காய்கறி கூடையை சுமந்து சந்தையின் சேற்றுப்பாதையில் வெளியேறுகிறான் ஒரு திடகாத்திர இளைஞன். 'எதை நகரச்சொல்கிறாய்? இந்த உடலையா அல்லது ஆன்மாவையா?' என யாரும் கேட்கவில்லை.
அவன் சுமையை வாங்கிக்கொள்ள வெளியில் காத்திருக்குது பல கூடைகள் சுமந்த வாகனம் ஒன்று.
காலை அலுவலகம் செல்லும் வழியில் சந்தையில் நுழைந்து, இரவு உணவுக்கென கரிசனமாய் காய்கறிகள் வாங்கி அலுவலகத்திற்கு சுமந்து செல்லும் சில இளம் மனைவிகள். அவர்களை மட்டுமே அலுவலகத்திலும் தொடரும் அடுக்களை கவலைகள்.
சந்தையின் கடுங்கூட்டத்தில் சொற்கள் நுழைய மட்டுமே இடமிருக்கும் இடைவெளியில் தேநீர்க்குடுவை சுமந்து வாடிக்கையாளர்களை நோக்கி சலனமற்ற முகம் தாங்கி விரையும் மெல்லிய உடலமைப்பு மனிதர் ஒருவர்.
பல நிலங்களிலிருந்து அதிகாலையில் சந்தைக்கு வந்து இறங்கிய புத்தம்புதிய காய் கனிகளுக்கு இடம் தந்து அழுக்கு கோணிகளில் ஓரமாய் ஒதுங்குது நேற்றைய 'புதிது'.
எல்லாமே பசுமையாய் சொலிக்கும் சந்தையில் கசங்கலாய் கந்தலாய் சுற்றுது
ரூபாய் நோட்டுகள் மட்டும்.
புத்தம்புதிய காய்கனிகளை பழைய நோட்டுகளுக்கு பண்டமாற்று செய்யுது புதிய உலகின் வணிகம்.
வணிகச்சுழலில் சேர்த்துவிடும் அவசரத்தில் மூன்று குழந்தைகளை வாகனத்தில் இடுக்கிக்கொண்டு பள்ளிக்கு விரையும் கேசம் கலைந்த தகப்பன்.
நித்தம் நித்தம் நம் உலகு வரையும் இந்தக்கோலம் அலுப்பதில்லை யாருக்கும்.
ஒற்றை உலகில் பலப்பல உலகம் பலப்பல கோலம். உற்று நோக்கவும் எட்டிப்போகவும் எப்போதும் போல மனிதர்கள்...
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக