தமிழக கேரள காடுகளில் மட்டும் 40க்கும் மேலான தொல்குடி இனங்கள் வாழ்கின்றன.
அடர் வனங்களுள் இருக்கும் இவர்களது பெரும்பான்மையான குடியிருப்புகளுக்கு நவீன சாலை வசதிகள் கூட கிடையாது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் வனங்களை காத்து வருபவர்கள் இவர்கள்.
நம் நாடு விடுதலை பெற்ற பின்பும் இவர்களது பணி தொடர்ந்து வருகிறது.
வேட்டையாடி இனங்களாய் வாழும் இவர்களை நம் நாகரிக உலகம் மெல்ல தொடர்பு கொண்டு, 'காட்டிலிருந்து நாங்கள் கேட்பவற்றை கொண்டு வா, பண்டமாற்றாய் உனக்கு வேண்டிய நாகரிக பொருட்களை நாங்கள் தருகிறோம்' என மெல்ல பழக்கி, தேன், மூலிகைகள் என தொடங்கி விலை உயர்ந்த மரங்கள் வரை இவர்களைக்கொண்டே நம் காடுகளிலிருந்து சமவெளிக்கு இறக்குமதி செய்கின்றன.
இத்தனை தொல்குடி இனங்கள் வாழும் காடுகளில் விலங்குகளால் கொல்லப்பட்டவர்கள் என யாருமில்லை என்பதே சில பத்தாண்டுகளுக்கு முன் வரை நிலவிய உண்மை.
சமவெளி நுகர்வோரின் தூண்டுதலால் தொல்குடியினருக்கு தேவையில்லாத அல்லது தேவைக்கு அதிகமான காட்டு விளைச்சலை எடுக்கச்சென்ற தொல்குடியினர் எப்போதாவது விலங்குகளால் தாக்கப்படுவது நிகழும், குறிப்பாக தேனெடுக்கையில். ஆனாலும் உயிர்ச்சேதம் அரிதாகவே நிகழும்.
இதை விட அரிதானது, காடர்கள் எனும் இனத்தில் இத்தகைய நிகழ்வுகள். குறிப்பாக யானைகளுடன் நெருங்கிப்பழகும் இந்த இனத்தில் இதுவரை யாரும் யானை தாக்கி இறந்ததில்லை.
அதாவது நேற்றுவரை.
ரவி எனும் காடன், தலைமுறை தலைமுறையாக யானைகளுடன் பழகுவதில் அனுபவம் உள்ளவர், இன்று நம் செய்தித்தாள்களில், 'யானை தாக்கி இறந்த முதல் காடன்' என புகைப்படத்தில் மட்டும் வாழ்கிறார்...
காடர்கள் தமிழகத்தின் ஆனைமலை காடுகளிலும் கேரளத்தின் பல மாவட்ட காடுகளிலும் வாழ்பவர்கள்.
நேற்று டவுனுக்கு சென்று வீட்டுக்கு வேண்டிய மளிகை பொருட்களை ஆனைமலை அடிவாரத்தில் வாங்கிக்கொண்டு இரவில் ஆட்டோ பிடித்து இரண்டு நண்பர்களுடன் ரவி தனது மலைக்குடியிருப்புக்கு இரவு திரும்புகிறார்.
ஆட்டோவிலிருந்து இறங்கும்பொழுது நல்ல இருட்டு, மழையும் கூட. அன்று மாலைதான் அந்தப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று நடமாடுவதை கேள்விப்பட்டிருந்த வாகன ஓட்டுநர் அவர்களை எச்சரித்து இறக்கிவிடுகையில் கவனமாக வீடு திரும்பச்சொல்கிறார்.
நண்பர்களுடன் ரவி தன் வீடு நோக்கி நடக்கையில் அருகில் ஒரு பலா மரத்தின் பின்னே இருட்டில் நின்றிருந்த யானை ஒன்று சட்டென வெளிப்பட்டு அவர்களை துரத்தத்தொடங்குகிறது.
பழக்கப்பட்ட தொல்குடியினரல்லவா, இருளிலும் ஓடித்தப்பித்து சொற்ப காயங்களுடன் அவர்கள் அனைவரும் வீடு சேர்கின்றனர்.
அரை மணி நேரம் கழித்து ரவிக்கு தான் ஓடி வருகையில் தவறவிட்ட மளிகைப்பை நினைவுக்கு வருகிறது.
ஒரு காடனாய் ரவி அந்த இரவில் மீண்டும் வெளியேறி பையைத்தேடி அந்தப்பாதைக்கு வந்திருக்க மாட்டார்.
ஆனால் நம் நாகரிகத்தின் தாக்கம், அவருள் பிறப்பிலிருந்தே இருந்த எச்சரிக்கை உணர்வையும் வாழ்கையில் சேர்த்த அனுபவ அறிவையும் மழுங்கடித்திருக்கவேண்டும்...
வனத்துறையினர் அவரது குடும்பத்திற்கு 50,000 ரூபாய். இழப்பீடு தந்துள்ளனர். ஆனால் காடர் இனம் இந்த நிகழ்வின், இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் தம் கானகங்களை இழக்கப்போகிறது என நான் அஞ்சுகிறேன்.
பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது குடியிருப்பு அங்கிருந்து அகற்றப்படலாம். அதன் பின்னர் அந்தக்காடுகளை நம் நாகரிகம் சுரண்டுவது எளிதாகலாம்.
அவருடன் அழிந்தது அங்குள்ள காடும்தான் என்றே தோன்றுகிறது.
அந்த வேட்டையாடி இனத்தை நம் நாகரிகம் தீண்டாதிருந்தால், அவர் போன்ற பல இனங்களையும் அது தீண்டாதிருந்தால் நம் நாட்டின் கானக வளம் பெருகியிருக்கும்தானே.
தமிழக கேரள எல்லையில் அடப்பாடி என்றொரு பெருவனம் இருந்தது (! இப்ப இல்லையா?!).
1700 ஆண்டுகளில் மலபார் பகுதியின் சில குடும்பங்களுக்கு மட்டுமே இந்த ஒட்டுமொத்த வனமும் சொந்தமாக இருந்தது, 1970களில் கேரள அரசு வன நில மிட்பு சட்டம் தீட்டி இந்த வன நிலங்களை பல்லாயிரக்கணக்கான சாகுபடியாளர்களுக்கு / முன்னாள் குத்தகைதாரர்களுக்கு பிரித்து வழங்கும் வரையில்.
(1970களில் மூப்பில் நாயர் என்கிற தனி மனிதருக்கு மட்டுமே இங்கு 1,87,000 ஏக்கர் காடு சொந்தம்!)
1700-1930 வரை ஆங்கிலேய, உள்ளூர் பண்ணையார்களுக்கு தேவைப்படும் பொருட்களை இந்த வனப்பகுதியிலருந்து சேர்த்துத்தருவதே அதனுள் வசித்த தொல்குடியின் வாழ்வாதாரம். அடர் வனங்களுள் எந்தப்பேரரசும் நுழைய அஞ்சி, இவர்கள் வழி மட்டுமே 200 ஆண்டுகளில் வெட்டி வெளியேற்றிய மரங்கள் மட்டுமே பல கோடி!
சிறுவாணி மற்றும் பவானி என்கிற இரு பெரு நதிகள் உற்பத்தியாகும் இந்த வனப்பகுதி தொடர்ந்து மொட்டையடிக்கப்பட, 1940களில் மன்னார்காடு - கோவை சாலை அமைக்கப்பட்டதும் கானக அழிவு துரிதமானது (வெட்டியதை சாலை வழி எளிதாக எடுத்துச்செல்லும் வாய்ப்பு உருவானதால்).
விளைவு: பவானி & சிறுவாணி நதிகளின் நீர்ப்பிடிப்பு பரப்பு குறைந்து நதிகள் வற்றத்தொடங்கின.
விழித்துக்கொண்டு சென்னை மாகாண அரசு, நதி தொடங்கும் கானகப்பரப்பை தனியாரிடமிருந்து வாங்கி பாதுகாக்க சட்டமியற்றி, தொடர்ந்து அடுத்த நாற்பதாண்டுகளில் காட்டு நிலங்களை வாங்கி, காட்டு மரங்கள் நட்டு காடுகளை மீளுருவாக்கம் செய்யும் பெரும்பணியில் ஈடுபட்டது, சென்னை மாகாணத்திலிருந்து கேரளம் உதயமானபின்பு செயல்வேகம் கூடியது.
1980களில் ஒரு நெடிய ஆய்வு செய்து கேரள வனத்துறை சமர்ப்பித்த 225+ பக்கங்கள் கொண்ட அறிக்கையின் சாரம்:
"கடந்த நூற்றாண்டு வரை கற்பகத்தரு போல கானக தொல்குடிகளின் அனைத்து வாழ்வாதரங்களையும் (உணவு, உடை, கட்டுமானப்பொருட்கள், மருத்துவ மூலிகைகள் etc...) வாரி வழங்கிய காடுகள், மனிதர்களது வணிகப்பேராசையினால் குறுகிய காலத்தியலேயே சுரண்டப்பட்டு, இன்று அவர்களது விறகுத்தேவையைக்கூட நிரப்ப இயலாத நிலையில் இருக்கின்றன."
கடந்த நாற்பதாண்டுகளாக அம்மாநில அரசு காடுகளை மீளுருவாக்க போராடிக்கொண்டே இருக்கிறது...
ரவி, பத்தாம் வகுப்பு வரை நாகரிகக்கல்வி பயின்றவர், தன் இன சிறார்கள் பலரை கல்லூரிப்படிப்புக்கு வழிகாட்டியவர், தன் இன முன்னேற்றத்துக்காக சங்கங்கள் அமைத்து போராடியவர், யானையினால்தான் இறந்தார் என்றுதான் நீங்கள் இப்போதும் எண்ணுகிறீர்களா?!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக