நம் பூமியிலே ஆதியில் நிலம் கீறி எச்சமிட்டு பறவைகள் வளர்த்த பரப்பெங்கும் பச்சையாச்சி.
பச்சை கண்டு படையெடுத்த பல்லுயிர்க்கூட்டம் இச்சையோடு புசித்து
எச்சமிட்டு எச்சமிட்டு பச்சை பரவியாச்சி.
புலன்குளிர்ந்து ஆகாயமும் ஆனந்தமாய்
கண்ணீர் வடிக்க துளிபட்ட இடமெங்கும் தீயாய் தாவித்தாவி பச்சை பரவ காணுமிடமெலாம் பச்சையாச்சி.
பல்லுயிரும் பச்சையோடு பல்கிப்பரவ ஓருயிர் மட்டும் மாற்றி சிந்தித்து ஓரிடத்தில் தங்கிப்போச்சி.
குந்தித்தின்று கரைந்த பச்சை, அவ்வுயிரை காணாப்பச்சை தேடத்தள்ள, காணும் ஆவலி்ல் இவ்வுயிர்க்கூட்டம் பறவைபோல நிலம் கிளறி எச்சமிட மொத்தமும் மறுபடி பச்சையாச்சி.
விலகிப்போன உயிரெலாம் பசிக்கு மட்டும் புசிக்கையிலே தங்கிப்போன கூட்டம் மட்டும் ருசிக்கும் சேர்த்து புசிக்கவும் பழகியாச்சி.
மழையற்ற காலத்திலே பசியென்ன உறங்கிடுமா என அக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் சேர்த்து வைக்க இந்தக்கூட்டம் பல்லுயிரழித்து பயிர் வளர்க்க, நொந்த வானம் அழுத கண்ணீர் பூமி சேருமுன்னரே கடும் வெயிலில் ஆவியாச்சி.
ஆவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பச்சையும் (நீரின்றி) அவிந்துபோச்சி.
சோர்வடையா உழைப்போடு இந்தக்கூட்டம் மறுபடி மாற்றி சிந்திக்க செயற்கையாய் பயிர் வளர்க்க முடிவாச்சி.
காடு மலை கடல் வானம் என வெளியெங்கும் சுற்றிச்சுழலும் பேராற்றல் இவர்கள் வசமாச்சி.
நமது பூமி நமக்கு மட்டுமே. வேறுயிரை வேரறுப்போம் பயிர் வளர்ப்போம் உயிர் வளர்ப்போம் என மார்தட்டி நச்சு செய்து நிலமெங்கும் பரப்பியாச்சி.
பல்லுயிரும் மூச்சுத்திணறி கொத்து கொத்தாய் மாண்டு விழ, நம் வசந்தங்களும் மௌனமாச்சி.
பேராசை பெருநுகர்வு பேரிரைச்சல் செவிடாக்க, வசந்தங்கள் மௌனமானது அறியாமலே ஏனைய பருவங்களையும் வளர் பருவமாய், பயிர் வளர் பருவமாய் மாற்றியாச்சி.
கோடையிலே நிலம் பற்றியெரிய, பருவமழை ஆவியாகி தூபம் போட காடுகளுள் பல்லுயிரும் வெந்து தணிஞ்சாச்சி பின்னே வந்த கூதலிலே நடுங்கி நாசமாச்சி.
காடிழந்த துயரத்திலே வான் பொங்கி குமுறிப்பொழிய நிலப்பரப்பு கடலாச்சி.
இவ்வாறு பூமியின் கதை இப்படி அணுதினமும் உருமாறிப்போக, பேராசை பெருவணிகம் வானேகி வேற்று கிரக நிலம் தேட ஆயத்தமாக, எஞ்சிய பல்லுயிரெலாம் பதைக்கையிலே இந்த ஒற்றை உயிர் மட்டும் பேரழிவு எதுவுமே நடக்காதது போல துயில் எழுந்து துயில் கொள்ள, இன்னும் நம்பிக்கை சுமந்து திரியும் மிஞ்சிய நிலம் கொத்திப்பறவையொன்று ஆளற்ற பாலையிலே கொத்திய கைப்பிடி நிலத்தினிலே தன் எச்சம் சுமந்த விதைகள் சில விதைத்து, விட்டு விலகாமல் பயிர் வளர்க்க உதிரம் கொடுக்கவும் உயிர்கொடுக்கவும் ஆயத்தமாச்சி.
வான்வெளியில் வட்டமிடும் பெருவணிக செயற்கைக்கோள்களில் நுண்கேள்திறன் கொண்ட காதொன்றில் அன்று புதிதாய் ஒலிக்கத்துவங்கியது இந்தப்பறவையின் ஓலம்;
'தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை? கண்ணீரால் காத்தோம். சர்வேசா, கருகத்திருவுளமோ?'
ஓலத்தினால் கிழிந்த காதோடு தரையில் மோதி விழுந்த அக்கோளை ஒற்றை உயிர்க்கூட்டம் சுற்றிச்சூழ்ந்து ஆய்வு பல செய்து ஓலத்தின் மூலமறிய ஆளற்ற தானியங்கி இயந்திரப்பறவைகளை ஏவியாச்சி.
...
பயிர் பிழைக்குமா?
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக