முதியவர்.
களைத்திருந்தார். பசித்திருந்தார்.
தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் நாற்கர சந்திப்பில் சிவப்பு சிக்னல் நிறுத்தத்தில் ஒவ்வொரு வாகனமாய் கை நீட்டி யாசித்தார்.
ஒவ்வொரு முறை சிவப்பாக சிக்னல் மாறும்போதும் 90 விநாடிகள் வாகனங்கள் நிற்கும். தளர்ந்த உடலை விசை கூட்டி நகர்த்தி ஒவ்வொரு வாகனமாய் அணுகினார்.
அனுதாபப்பட்டு சிலர் சில்லறை தந்தனர். சிலர் ரூபாய் நோட்டுகள் தந்தனர்.
எனது வாகனத்தின் அருகில் அவர் வந்தபோது சிவப்பு விளக்கு பச்சையாக மாற நாற்பது நொடிகள் இருந்தது. கோடை சூரியன் உச்ச வெப்பத்தில் தலைக்கு மேலே.
சன்னல் கண்ணாடியை கீழிறக்கி பணம் கொடுக்க முயன்றேன்.
'ஐயா, பணம் வேணாமையா, பசிக்கு சாப்பிட ஏதாவது இருந்தா தாங்கய்யா' என ஈனமான குரலில் வேண்டினார்.
கடந்த பத்து வருடங்களாக வெவ்வேறு சிக்னல்களில் வெவ்வேறு மனிதர்கள் பணம் மட்டுமே விருப்பமாய் யாசித்து வேண்டுவதும், உணவு தந்தால் முகம் சுளிப்பதும் நடந்ததுண்டு.
ஆனால் முதல் முறையாக உணவு மட்டுமே யாசிக்கும் மனிதர்...
அவசரமாய் என் பையில் தேடினேன். அன்றைய மதிய உணவு பழங்கள் மட்டுமே என முடிவு செய்து எடுத்து வந்திருந்தது அப்போதுதான் நினைவில் வந்தது.
கையில் அகப்பட்ட பழங்கள் அனைத்தையும் எடுத்து அவர் கரங்களில் வைத்தேன்.
புதிய உயிர் ஒன்றை கையில் ஏந்தும் உணர்வோடு பெற்றிக்கொண்டவர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பச்சைக்கு மாறிய சிக்னல், பின் வரிசையிலிருந்து கோபமாய் ஒலிக்கும் horn எதையும் பொருட்படுத்தாமல் ஜன்னலில் முழங்கைகளை பதித்து வலியில் தோய்ந்த குரலில் அவர் சொன்னது இப்போதும் வயிற்றைப்பிசைகிறது. அவர் அதிகமாகக்கூட எதுவும் பேசவில்லை; 'சார், பேரன் பேத்தியவெல்லாம் வளர்த்திருக்கிறன் சார்'. சொல்லி முடிக்கையில் அவர் கண்களில் பிரதிபலித்த 'வாழ்ந்து கெட்டவரின் வலி', 'கைவிடப்பட்டவரின் பெருஞ்சோகம்' என் நினைவுகளில் இருந்து நீங்குமா எனத்தெரியவில்லை.
கைவிட்டவர்கள் இந்த நொடியில் இந்த பூமியில் எங்கோ ஓரிடத்தில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களை இன்னும் பல ஆண்டுகள் கழித்து ஏதாவதொரு சிக்னலில் நாமோ அல்லது நம் வாரிசுகளோ கடக்க நேரிடலாம். அப்போது அவர்களுக்கும் நம் / நம் நீட்சிகளிடமிருந்து ஒரு உணவுப்பொட்டலம் கண்டிப்பாக கிடைக்கவேண்டும் என பேரிறையை வேண்டுகிறேன். கூடவே, நம் உலகின் பசிப்பிணி போக்க "ஆபுத்திரனை" ^ மறுபடி இங்கு உயிரோடு உலவ விடு; அதே நேரத்தில் அவனையும் அவனது அமுதசுரபி பாத்திரத்தையும் பேராசைப்பெருவணிகத்திடமிருந்து காத்தருள் எனவும் வேண்டுகிறேன்!
பேரன்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு: நாகரிக உச்சம் தொட்ட நம் உலகில் முப்பது சதவிகித மக்கள் அடுத்த பத்தாண்டுக்கான தங்களது உணவுத்தேவையை பாதுகாப்பாய் பதுக்கி வைக்க, எஞ்சிய எழுபது சதவிகிதம் காய்ந்த வயிற்றோடு உறங்கப்போகும் அவலம் நம் கண் முன்னேதானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது? பொருளாத வளர்ச்சியின் குறியீடான GDP படி உலகின் முதன்மை நாடுகள் என வலம் வரும் நாடுகள் (so called multi trillion dollar economies) ஏன் இந்த காய்ந்த வயிறுகளுக்கு இன்றைய உணவை அளிப்பதில் அக்கறை காட்டாது, யுத்தங்களை ஓயவிடாமல் செய்யும் யுத்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதில் கவனமாய் இருக்கின்றனர்?
நம் நாகரிக உச்ச வளர்ச்சியின் உச்சமே இந்த கேள்வி கேட்கும் சிந்தனையை நம்மிடமிருந்து இலவசமாய், (பிடுங்குவது தெரியாமல்) பிடுங்கிக்கொண்டதுதானே!
பேரன்புடன்,
பாபுஜி
^ ஆபுத்திரன் - நம் பழைய உலகின் முழு முதல் பசி தீர்த்தோன். நாம் கொண்டாட மறந்த Biggest Super Hero! இவர் பற்றி ஒரு தனிப்பதிவு விரைவில்.
Images credit: Reuters and The Conversation
கருத்துகள்
கருத்துரையிடுக