அதிகாலை வேலையில் பெங்களூரு பெருநகர சாலைகளில் பரவிக்கிடக்கும் மலர் இதழ்கள் கொள்ளை அழகு.
விழுந்த மலர்கள், வெயில் ஏற ஏற வாகன இரைச்சல் கூட கூட மெல்ல காணாமல் போகும் மலர்கள், மறுநாள் காலையில் மேலும் புதிதாய், மேலும் மெருகு கூடி குவிந்து கிடக்கின்றன அதே ஒரங்களில்.
நகரின் பெரிய பூங்காக்களை விட சிறிய பூங்காக்களில் இன்னும் நெருக்கமாய், சிநேகமாய் இயற்கை.
எத்தனையோ புதிதாய் கற்று காசு பண்ணும் பேரூர் நம்முடைய தமிழ் சாம்பாரை மட்டும் இன்னும் முழுதாய் செய்ய கற்கவில்லை!
மரக்குடை பிடித்த சாலை ஓரங்களும் மத்திய தடுப்பு மர வரிசைகளும் வெப்பத்தை உள்வாங்கி நமக்கு குளுமையை மட்டும் வழங்குகின்றன பெரும்பாலான இடங்களில். ஏனோ மற்ற பெரு நகரங்கள் இதை முயலவில்லை இன்றுவரை...
குப்பை குவியல்கள், குடலைப்பிரட்டும் நாற்றங்கள் - அறவே இல்லை.
எல்லா வணிக நிலையங்களிலும் அவசர அவசரமாக ஆங்கில பெயர்களுக்கு இணையாக கன்னட பெயர்களும் கல்லடிக்கு பயந்து பெருகிக்கொண்டிருக்கின்றன.
மருந்துக்கடைகள் பெட்டிக்கடைகள் போல ஏராளமாய்...
காலை மாலை வேளைகளில் உணவகங்களில் இளசுகளின் கூட்டமென்றால் இடைப்பட்ட பொழுதுகளில் ஏனைய சனத்திரளும் நகரின் அனைத்து இடங்களிலும் சரளமாய் நுழைந்து பயன்படுத்தி / பயன்பெற்று வெளியேறுகின்றன, தயக்கமில்லாமல்.
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பின்னர் வந்து பார்த்தால் ஆயிரம் பறவைகளின் எச்சம், மலர்களின் மகரந்தச்சிதறல்களின் மிச்சம் என அவை ஆசீர்வதிக்கப்பட்டு நின்றிருக்கும்! சுத்தம் செய்வது பெரும்பாடு.
மிரட்டும் வான்முட்டும் கட்டிடங்களின் வெளியே புலித்தோலை அரைக்கிசைத்து ஒரு கூட்டம் இசைக்கருவிகள் முழங்கி கூட்டம் சேர்க்கும் வேலையை ஊதியத்துக்காக செய்வதும் நடக்கிறது.
193 ஏரிகள் உள்ள பெருநகரமாம்! இப்போது மார்ச் மாத முன்கோடையிலேயே தண்ணீரின்றி தடுமாறுவது 'பொருளாதார முன்னேற்றத்துக்காக' இந்த நகரம் கொடுத்துக்கொண்டிருக்கும் விலை!
பயணம் முடித்து ஊர் திரும்பும் தினத்தில் ஒரு ரிலையன்ஸ் ஃப்ரஷ் கடையின் பில்லிங் கவுண்டரில் ஓவியர் கோபுலுவின் தூரிகையிலிருந்து உயிர்த்தெழுந்தது போன்ற தோற்றத்தில் ஒரு வயதான தம்பதியை பார்த்தேன். உயரமான கணவர் - தொட்டால் உதிர்ந்துபோவது போலதொரு தோற்றம், வெளுப்பான வெளுப்பு நிறம். மனைவியும் அதே உயரம் அதே ஒடிசல் தேகம். இருவரது தோற்றமும் உடையும் மிக நேர்த்தி.
எனக்கு முன்னர் அவர்கள் தாங்கள் வாங்கிய பொருளுக்கான பில் தொகையை டிஜிடல் முறையில் செலுத்த முயன்றுகொண்டிருந்தனர்.
நடுங்கும் விரல்களால் கணவர் கூகுள் பே சேவையில் ரகசிய எண்களை உள்ளிட, நடுக்கத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு எண் அழுத்தமாக பதியாமல் சேவை 'தவறு' சொல்ல, மனைவி மிக பவ்யமாக 'தப்பா அழுத்திட்டேள். மறுபடி ட்ரை பண்ணுங்கோ' என மெல்ல சொல்ல, அவர் மறுபடி மறுபடி விரல் நடுங்கி பிழை நிகழ, 'நான் உதவட்டுமா?' என தமிழில் அவர் மனைவியிடம் கேட்டேன்.
ஓரிரு நொடிகளில் அவர் தனது கணவர் கோபக்காரர் என்றும், நான் உதவினால் பிடிக்காது என்றும் பதட்டமான முகத்துடன் கணவருக்கு தெரியாமல் சொற்களேதுமின்றி என்னுடன் அபிநயத்தில் சொன்ன வேகமும் லாவகமும் பிரமிக்கவைத்தது.
ஏன் இவர்கள் இந்த வயதில் தனியே இப்படி என்கிற எண்ணம் தோன்றிய வேகத்திலேயே, நம் ஊரில் கிராமத்து ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க போராடிய பெரியவர் ஒருவர் சொன்ன பதிலும் மனதில் வந்து போனது; 'பையனுகிட்ட அட்டைய தந்து பணமெடுக்க சொன்னா...கூட எடுத்துட்டு குறைவா தரானுங்க. அதாங்க நானே வந்தேன்' என்றார்.
அதே ரிலையன்சில் சில வாழைப்பழங்களை மட்டுமே வாங்க பில்லிங் கவுண்டரில் நின்றிருந்த ஒரு கன்னடர், விலை பனிரெண்டு ரூபாய் என அறிந்து ஒரு பழத்தை திரும்பக்கொடுத்து பத்து ரூபாய் தந்து எஞ்சிய பழங்களை வாங்கிச்சென்றார். அது மதிய உணவு நேரம். அவர் வாங்கியது அவரது ம. உணவாகக்கூட இருக்கலாம்...
டிஜிடல் இந்தியா - நிச்சயமாய் வயதானவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இல்லை!
"பை பை பெங்களூரு" எனச்சொல்லி ஊர் நோக்கி வாகனத்தை நெடுஞ்சாலையில் சீறவிட்டேன். ஒரு ஆறு வழித்தடத்தின் நடுவில் ஒரு சரக்கு லாரி, கர்ப்பிணி பெண் இரண்டு கர்ப்பம் சுமப்பது போன்ற அளவுக்கு கூடுதல் பொதியேற்றி ப்ரேக்டவுன் ஆகி, வாட்டும் கோடை பகலில் உருகும் தார் சாலையில் நின்றிருக்க, அதன் முன்னே கொதிக்கும் சாலையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த, தலை கலைந்த, கண் கண்ணாடியிட்ட, பிரமை பிடித்த அந்த லாரி ஓட்டுநரின் முகம் நான் பெங்களூருவில் கண்ட அனைத்து வசீகர முகங்களையும் பின் தள்ளி, பயணம் முடிந்தபின்பும் தொடருது என் நினைவில். என்ன சொல்லிவிட்டு வந்திருப்பார் வீட்டில்? 'சனிக்களமை வந்தரறேன் கண்ணு' என்கிற சொற்களை நம்பி யார் யாரோ காத்திருப்பாரே என்கிற கவலைகள் நிரம்பிய அந்த முகம், பெங்களூரு பயணம் தந்த கனவு வசீகரத்தை சட்டென உடைத்து நிதர்சன உலகிற்கு என்னை இழுத்து வந்தது.
அனைவருக்கும் சேர்த்துதானே கிடைத்தது சுதந்திரம்?
தப்பான கேள்வியோ?!
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக