எண்ணெய் தேய்த்து படிய வாரிய தலை. தலையில் க்ளிப்பின் பிடிப்பில் ஒரு துண்டு மல்லிகைச்சரம்.
மிக மிக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட சரம். அணிபவரை மனதில் நிறைத்து தொடுப்பவர் தொடுத்த சரம். அதில் பொங்கி வழியுது தாயன்பு.
ஆகாய நீல மேல்சட்டையெங்கும் கரு நீல சதுரங்கள். கரு நீலத்தில் நனைத்த கீழாடை.
சைக்கிளின் முன்னிருக்கையில் அச்சிறுமி. பின் இருக்கையில் நேர்த்தியாக வெட்டப்பட்ட, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட அவளது அண்ணன், சிறுவன், அவளது சீருடை வண்ணத்திலேயே அவனதும்.
இருவரையும் சுமந்த சைக்கிளை கவனமாக மிதித்து முன்செலுத்தும் தகப்பன், ஏழ்மை அப்பிய முகம், வறிய உடை, கிள்ளியெடுக்க சதையில்லை.
அந்த காலை வெயிலில் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் நாற்கர சந்திப்பில், அவசர கதியில் விரையும் எண்ணற்ற வாகன மனிதர்களின் இடையில் ஒளிரும் அவனது கண்கள், அதில் தெரிந்த எச்சரிக்கை உணர்வு...
இயந்திர ஆற்றலின் துணை கொண்டு விரைந்துகொண்டிருந்த சனத்திரளில் தன் சொந்த ஆற்றலில், தன் எதிர்காலத்தை தன் சைக்கிளில் முன்னும் பின்னுமாய் அமர்த்தி நிகழ்கால நொடியில் மட்டுமே கவனத்துடன் மிதித்துச்சென்ற அவனது முகம் போன்ற அமைதியான, நம்பிக்கை தரும், மகிழ்வு தரும் மனித முகமொன்றை நான் நெடுங்காலமாக பார்த்ததில்லை.
ஒரு சாலை சிக்னலில் சில நிமிட வாகன நிறுத்தலில் அவனது சைக்கிள் மெல்ல என்னைத்தாண்டிச்சென்ற அந்த சில நொடிகள், நம் ஆன்மீகம் கால காலமாய் நம்மை உணர வைக்க முயலும் 'இறை தரிசன' நொடிகள்.
வாழ்வு எளிது. வாழ்தல் இனிது. அதனினும் இனிது 'நிகழ்நொடியில்' வாழ்தல்.
நம் அனைவருக்கும் இந்த வரம் தொடர்ந்து கிட்ட அந்த ட்ராஃபிக் சிக்னலிடம் ப்ரார்த்திக்கிறேன்!
பேரன்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு 1: சிறு வயதில் ஓவியம் கற்காமல் போனதை எண்ணி வருந்தவைக்குது இதுபோன்ற தருணங்கள். வரையத்தெரிந்திருந்தால் மனதில் பதிந்த காட்சியை வரைந்து இணைத்திருப்பேன்.
மொபைல் கேமராவில் புகைப்படம் எடுக்கக்கூட தோன்றாமல் மனது அந்தக்காட்சியில் ஒன்றிப்போயிருந்தது.
என்னதான் புகைப்படக்கலையை ஓவியன் போல பயன்படுத்த நான் முயன்றாலும் புகைப்படங்கள் அனைத்தும் ஓவியங்களாகாதே!
பின் குறிப்பு 2: முன்னொரு நாளில் புழுதி படிந்த சிறுநகரமொன்றில் என் தகப்பன் தன் சைக்கிளில் என்னை பின்னிருக்கையில் அமர்த்தி எதிர்காலத்திற்கு மிதித்துச்சென்றதும் நினைவில் வந்தது. அன்றும்கூட அந்தச்சாலையில் பயணித்த யோரோ சிலருக்கு இறை தரிசனம் உணர்த்திய நொடியாக அதுவும் இருந்திருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக