Tamil Nadu - A primer
இந்தி எதிர்ப்பு போராட்ட சூடு தணிவதற்கு முன்னரே தஷிண பாரத் இந்தி பிரச்சார சபாக்கள் உற்சாகமாக இயங்கிக்கொண்டிருந்தன. கற்க வரும் மாணவர்களின் கூட்டம் இன்றுவரை பெருகிக்கொண்டே உள்ளது; அவர்கள் என் னதான் தேர்வுத்தாளை மட்டுமே மையமாக வைத்து கற்பிப்பதை தொடர்ந்தாலும் :-)
ஆத்தாடீ மாரியம்மாஆஆஆஆ எனத்தொடங்கி, முருகா நீயெல்லாம் தெய்வமில்லை! என தொடர்ந்து, கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன் என உருகி, திருச்செந்தூரின் கடரோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கத்தை நினைவு படுத்தி, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை எங்கள் புருஷோத்தமன் புகழ் பாட அழைத்து, பாட்டும் நானே பாவமும் நானே என சிவனின் பரிமாணங்களை உணர்த்தி, உள்ளம் உருகுதையா என உருகி, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என பேட்டை துள்ளி, நல்ல மனதில் குடியிருக்கும் நாகூராண்டவா என நன்றி விளித்து, வானுக்குத்தந்தை எவனோ மண்ணுக்கும் தந்தை அவனே என விளக்கி, ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் என தேவ நம்பிக்கை தந்து, மண்ணுலகில் தேவன் இன்று இறங்கி வருகிறான் என குதூகலித்து, கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லித்தந்து, இறைபுகழ் பாடும் கதாகாலாட்சேபங்கள் கேட்கவைத்து, சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று நொந்து, வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ என வாழ்வின் நிலையாமையை உணர்த்தி, இத்தனை இசைக்கூவல்களுக்கு இடையில் (லவுட் ஸ்பீக்கர் ஐ மீன்!) நல்ல கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் என கவனமாய் வளர்த்து, இயற்கை வளங்களை இறைக்கு சமமாய் போற்றி, மணப்பாறை மாடு கட்டி என விவசாயத்தை போற்றி...
ராமேசுவரசுவாமி கோவிலில் தீர்த்தமாட கூடும் கூட்டம் வேளாங்கண்ணி திருவிழாவிற்கும் செல்லும், நாகூரின் சந்தனக்கூடையும் தரிசிக்கும், திருச்செந்தூரின் சூரசம்ஹாரத்திற்கும் ஆர்ப்பரிக்கும்.
இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களும் முயற்சிக்காத இந்த மாடலுக்கு திராவிட மாடல் என பெயரிட்டு அழைப்பதை விட 'மானுட மாடல்' என அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
"அது என்ன இந்த வாழ்வியலை தக்க வைக்க இப்போது போராடத்துவங்கியுள்ளதுன்னு பொசுக்குன்னு சொல்லீட்டீக?" என்று கேட்போருக்கு,
பெருவணிகமெனும் ஒட்டகம், மானுட மாடல் புழங்கும் நம் நிலப்பரப்பில் மெல்ல தலை நுழைத்து இப்போது கூடாரத்தையே அரசியல் வழி அசைக்க முயல்வதின் தாக்கந்தேன்!
விளை நிலங்களை ஊடறுத்து எட்டுவழிச்சாலைகள், சூரிய மின்னறுவடை பூங்காக்கள், காற்றாலைகள் என ஒட்டகங்களின் குளம்பொலிகள் நம் நிலப்பரப்பு முழுதும் எதிரொலிப்பது உங்கள் காதுகளை எட்டவில்லையா?
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக