முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலை காதலிப்போம்!



அவள் பேரழகி. 


வானெங்கும் தங்க விண்மீன்கள் கண்கள் மூடி கடல் குளிக்க சூரியன் கண்விழித்தெழும் நேரம்...


நட்புகளுடன் கடற்கரையோர தங்கநிறப்பொழுதொன்றில் களிநடனமாடி, வீடு திரும்ப சாலையில் நான்கு சக்கர வாகனத்தை உச்சத்தில் முடுக்க... விபத்து நிகழ்கிறது.

அழகிக்கு தலையில் அடி. நிகழ்கால நினைவுகள் மறந்துபோய் செயல் அளவில் சின்னஞ்சிறுமியின் மன முதிர்வோடு மட்டும் கண் விழிக்கிறாள்.

ஒரு நாள் கவனிப்பின்றி திறந்திருந்த மருத்துவமனை வாயில் வழி வெளியேறி பெருநகர சாலையில் கால் பதிக்க, நகரின் கோரக்கரமொன்று அவளை பாலியல் தொழில் நடக்கும் விடுதியொன்றில் விற்றுவிடுகிறது.


அவன் பேரழகன். 

அனாதை. தி்ருமணம் ஆகாதவன், ஊட்டியில் ஒரு பள்ளியின் தலைமைப்பொறுப்பில். ஆனாலும் அவனது விருப்பு வெறுப்புகளை மென்மையாக மட்டுமே வெளிப்படுத்துபவன். ஒரு விடுமுறையில் அதே பெருநகரில் நண்பனை சந்தித்து... நண்பனின் தூண்டுதலால் மதுவருந்தி பின் நண்பனின் இழுப்பிற்கு தலையாட்டி அவனுடன் ஒரு பாலியல் விடுதிக்கு செல்கிறான்.



பேரழகி-பேரழகன் சந்திப்பு:

பாலியல் விடுதியில் அந்த குமரி வடிவம்-குழந்தை உள்ளம் கொண்ட பேரழகியை சந்திக்கிறான். அந்த இரவு அவளுடன் தங்கி, அவளால் தலையில் ஒரு நீர்க்கோப்பையால் தாக்கப்படுகிறான். அவளது உருவத்திற்கும் மனநிலைக்கும் தொடர்பற்றிருப்பதையும் அவள் எத்தகைய ஆபத்தில் இருக்கிறாள் என்பதையும் உணர்ந்தவன், அவளுக்கு உதவ நினைக்கிறான்.  அவளால் அவளது வீட்டு முகவரி, பெற்றோர் விபரங்களை கூட சொல்லத்தெரியாததை கண்டு அவளை காப்பாற்ற எண்ணுகிறான்.


தப்பித்தல், தொலைந்துபோதல்:

பேரழகன், சீனு, தன் நண்பனிடம் எண்ணத்தை பகிர்ந்து பின் மன உறுதியுடன் மறுபடி ஒரு இரவில் விடுதிக்கு சென்று அவளை ஒரு இரவுக்கென நிறைய பணம் கொடுத்து வெளியில் அழைத்துச்சென்று அழைத்துச்சென்று, விடுதி உரிமையாளருக்கு தெரியாமல் தன் நண்பனின் உதவியால் ஊட்டிக்கு உடனே ரயிலேறுகிறான் அவளோடு. அவனது சிந்தனை அவளை அன்றுமட்டும் காப்பாற்றுவது அல்ல, வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவது! 


பேரழகி பாக்யாவின் பெற்றோர்கள் காவல்துறை உதவியுடன் அவளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.



பழைய பூமி, புதிய வாழ்வு:

பூங்காற்று புதிரானது, புது வாழ்வு சதிராடுது, இரண்டு...உயிரை...இணைத்து... விளையாடும்...

சீனுவும் பாக்யாவும் ஊட்டிக்கு வந்தாச்சு. சீனுவால் பாக்யாவின் கடந்த காலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் வசிக்கும் பகுதி மக்கள் இவர்களை ஏற்று அணைத்துக்கொள்ள, சுப்பிரமணி என்கிற நாய்க்குட்டியும் சேர்ந்துகொள்ள, சீனு அவளுக்கு எல்லாமும் ஆகிப்போகிறான். பாக்யா அவனது உலகம் என வாழ்வை அமைத்துக்கொள்கிறான். அவளை சிரிக்க வைப்பதற்காக குரங்கு வித்தைக்காரனின் குரங்காகவும் ஆகிப்போகிறான்.

கண்ணே கலைமானே...கண்ணின் மணி என...கண்டேன் உனை நானே... என தாலாட்டி உறங்கப்பண்ணும் தாயாகவும் ஆகிறான்.


காமப்பொறி:

பொன்மேனி... உருகுதே... என் ஆசை... பெருகுதே!

சீனு தலைமை ஆசிரியராக பணி புரியும் பள்ளியின் நிறுவனர் 58 வயதுக்காரர், மிக இளைய மனைவி. மனைவி மீது ஏராளமான அன்பு ஆனால் "கூட" உடல் ஒத்துழைப்பதில்லை. 

அவளது சிந்தனை சீனுவின் மீது குவிய, நெருங்கி நெருக்க, வாழ்வில் இரண்டாம் முறையாக சீனு ஒரு சுய சிந்தனை முடிவெடுத்து அவளை மெல்ல ஒதுக்கி நகர்கிறான், உப்பிட்டவருக்கு துரோகம் செய்யக்கூடாது என்கிற உறுதியுடன்.


வெறி நாய்:

சுப்பிரமணிக்கு பெல்ட் கட்டாவிட்டால் போலீஸ் சுடும் என பயமுறுத்தி, தன் வீட்டில் உள்ள பெல்ட்டை தருவதாக நைச்சியம் பேசி நட்ராஜ் எனும் வெறிநாய் ஒன்று பாக்யாவை (சீனு பள்ளியில் இருக்கும் நேரத்தில்) அழைத்துச்சென்று தன் இச்சையை தீர்க்க முயல, பாக்யா தப்பி ஓடி விடுகிறாள். நடந்ததை அறிந்த சீனு நட்ராஜை நையப்புடைத்து துரத்திவிடுகிறான்.

ஒரு இரவில் உறக்கம் வராது தவிக்கும் பாக்யாவிற்கு முன்பு ஒரு காலத்தில முருக மல காட்டுக்குள்ள வாழ்ந்த தந்திரக்கார நரிக்கதை நடித்துக்காட்டி உறங்க வைக்கும் கூத்தாடியும் ஆகிறான்.

பாக்யாவின் பெற்றோர் செய்தித்தாள்களில் தந்திருந்த "காணவில்லை" விளம்பரங்கள் மெல்லப்பரவி ஊட்டி மலைமீதும் ஏறுகிறது.


இவர்களது வாழ்வை தடம் புரட்டிப்போடப்போகும் புது நம்பிக்கை:

அவர்கள் வசிக்கும் பகுதிப்பெண் ஒருவர், 'சித்தப்பிரமையை மூலிகைகள் கொண்டு ஒரே பகல் பொழுதில் சரி செய்யும் வைத்தியர் ஒருவரைப்பற்றிய தகவலை சீனுவிடம் பகிற, அவன் விஜி என பெயரிட்டு உறவு கொண்டாடும் பாக்யா நலம் பெற்றால் போதும் என்கிற ஒரே நோக்கில், பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் சீனு அவளை மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறான்.

அதே நாளில் சென்னையின் காவலர்களும் பாக்யாவின் பெற்றோரும் ஊட்டியின் கேத்தியில் வந்திறங்கி சீனுவின் வீட்டுக்கதவை தட்டி... அந்தப்பகுதி மக்களின் வழிகாட்டுதலில் மூலிகை வைத்தியரின் குடிலை அடைகிறார்கள், ஏராளமான காவலர்கள் சீனுவை தேடத்தொடங்க...பாக்யா மாலையில் கண்விழித்தெழும் நேரத்தில் சீனுவுக்கு காவலர் கூட்டத்தின் மீதுள்ள அச்சத்தினால் ( எங்கு தொடங்கி என்னவென்று எடுத்துச்சொல்வது? நம்பாவிட்டால்????) அங்கு செல்ல இயலவில்லை. பாக்யாவின் பெற்றோர் பாக்யாவை அங்கு சந்திக்க, தன் சுய வயது நினைவிற்கு மீண்ட பாக்யாவுக்கு, அந்த தொடக்க விபத்தின் பின்னான நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லை... 

அவள் தன் பெற்றோருடன் சென்னைக்கு ரயிலேற கேத்தி ரயில் நிலையம் செல்கிறாள்.


ஓ சீனு!

பித்த நிலையில் சீனு தன் விஜியை (அவள் பழைய பாக்யலஷ்மியாக மாறிப்போனதை அறியாமல்) சந்திக்க கேத்தி ரயில் நிலையம் விரைய...

உள்ளே நுழைய முடியாத அளவு கட்சிக்கார கூட்டம், தம் தலைவரை வழியனுப்ப திரண்டு வந்திருப்கிறது.

சனத்திரளின் ஊடாக சீனு விஜியின் இருக்கையை கண்டுபிடித்து நெருங்க, ரயில் நிலையத்தை விட்டு மெ ல் ல  ந க ர ...

'விஜீ! விஜீ! நா ஒன் சீனு விஜீ!' என ஆன்மாவின் துயரில் தோய்ந்த காதல் குரல் வழி கசிய மன்றாட, அவள் முகத்தில் அவனை தெரிந்ததற்கான எந்த சலனமும் இல்லை. "இந்த" பாக்யாவுக்கு சீனுவை தெரியாது.

இது தெரியாத சீனு, ரயில் நிலைய இரும்புத்தூண் ஒன்றில் கண்மண் தெரியாமல் முட்டி வீழ்ந்து... அங்கிருக்கும் நசுங்கின அலுமினிய பானை ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு தன் விஜிக்கு தெரிந்த, மிகவும் பிடித்த குரங்கு சேஷ்டைகள் செய்து குட்டிக்கரணங்கள் அடித்து அடித்து எழ... யாரோ பாவம் மனநிலை சரியில்லாதவன் என பாக்யா அவனை நோக்கி உணவுப்பொட்டலம்  ஒன்றை வீச....அந்த ரயில் கேத்தி நிலையத்திலிருந்து மெல்ல மெல்ல நகர்கிறது.



பாலு மகேந்திரா என்கிற, இயற்கையையும் காதலையும் ஆராதித்த, ஒரு ஒப்பற்ற கலைஞன் நம் வாழ்வியலுக்கு விட்டுச்சென்றிருக்கும் இந்த மூன்றாம் பிறை என்றென்றும் ஒளி வீசும்!


கல்லூரிப்பருவத்தில் பார்த்து தூக்கங்கெட்டு... பின் வந்த காலங்களில் தூக்கம் தொலைத்த இரவுகளில் எல்லாம் என்னைத்தாலாட்டும் 'கண்ணே கலைமானே' என்கிற அந்தப்பாடல்... கண்மூடிக்கேட்கும்போதெல்லாம் அந்த நொடியிலேயே என்னை ஊட்டிக்குளிர் இரவொன்றிற்கு தூக்கிச்சென்று... என்னை இசையின் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்கவைக்கும் மந்திரக்கம்பளம், கால எந்திரம்! பல ஆண்டுகள் பல சூழல்களில் இந்த்த்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன். அத்தனை முறை பார்த்தும் நான் கவனிக்கத்தவறிய ஒரு Frame, சென்ற ஞாயிறு பார்க்கும்போதுதான் கவனித்தேன். என்ன ஒரு மகத்தான கலைஞன் இந்த பாலு என வியந்தேன். வியப்பு தந்த தூண்டுதலில், காதலர் தினத்தன்று இதோ இந்தப்பதிவு.


அந்த Frame? அதுதான் இந்தப்பதிவை அலங்கரிக்கும் ஒற்றைப்படம்.

இரு முறை திரையில் வந்து போகும் இந்த frame மட்டுமே ஓராயிரம் கதை சொல்லுமே!

தனித்து நிற்கும் இந்த ஒற்றை இதய வடிவ மரத்தை அத்தனை பெரிய மலைக்காட்டில் தேடியலைந்து கண்டுபிடித்து திரையில் கொணர எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்? நாடி நரம்பெல்லாம் உணர்வில் மூழ்கி 'அழகை ரசிக்கும் மனதை' கொண்ட ஒருவரால்தானே இது சாத்தியம்? எத்தனை காதல் இது? என்ன மாதிரியான காதல் இது?!


அவர்போலவே கலைவெறி கொண்ட, தன் கலையை மட்டுமே சுவாசிக்கின்ற ஒரு சிறு கூட்டம் இந்த திரைப்படம் வழியே விட்டுச்சென்றிருக்கும் கால் தடம் மிகப்பெரிது!

அந்தக்கூட்டத்தின் பட்டியல் இதோ:

இயற்கை

காதல்

பாலு மகேந்திரா

கமல்

ஸ்ரீதேவி

கண்ணதாசன்

ஏசுதாஸ்

எஸ். பி. பாலசுப்ரமணியன்

எஸ். ஜானகி

வைரமுத்து

இளையராஜா!


ஆனாலும் பாலுவின் மூன்றாம் பிறை முடிந்த இடத்தில் "என்னுடைய" மூன்றாம் பிறை முடியவில்லை.


வாழ்வைத்தேடி:

சென்னை சென்றதும் பாக்யாவின் பெற்றோர் அவளிடம் நடந்தது அனைத்தையும் விளக்குகிறார்கள்.

அவள் மனதில் சில கேள்விகள் நெருடிக்கொண்டே இருக்கிறது; 'தன்னை சில மாதங்கள் பாதுகாத்த சீனு யார்? ரயில் நிலையத்தில் மன நோயாளி ஒருவன் என்னைப்பார்த்து ஏன் அப்படி செய்தான்? அவன் சொல்ல வந்தது என்ன?'

இவற்றை அவள் தன் பெற்றோரிடம் கேட்க, அவர்களும் தங்களது சந்தேகமொன்றை அவளிடம் முன் வைக்கின்றனர்! 'அத்தனை நாள் உன் சுய வயது நினைவின்றி அங்கு நீ இருக்கையில் உன்னை அவன் உடல் ரீதியாக ஏதாவது செய்திருக்கலாம் என அஞ்சுகிறோம். மருத்துவரை சந்திப்போம். பின் அடுத்த நிகழ்வை சிந்திப்போம்'.

அவர்களது அச்சம் பொய்யென்றால் உடனே சீனுவை சந்திக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன் பாக்யா சம்மதிக்கிறாள்.


சில நாட்கள் சென்றபின் ஒரு இரவில் சென்னையிலிருந்து கேத்திக்கு பாக்யா தனியே சீனுவை சந்திக்க பயணிக்கிறாள்.

அவளை உறங்கவிடாமல் செய்யுது ஆயிரம் கேள்விகள்...

சீனு பார்க்க எப்படி இருப்பான்? என்னை எங்கு சந்தித்தான்? கேத்திக்கு எப்படி வந்தேன்? அங்கு என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தேன்? அங்கு நான் இருந்த வீடு எப்படி இருக்கும்? நண்பர்கள்? ? இப்பொழுது சீனு என்ன செய்துகொண்டிருப்பான்? என்னை தொடர்பு கொள்ள வழி தேடி அலைந்துகொண்டிருக்கிறானா?

 எனக்கு அவனை பிடிக்காவிட்டால்?

எனக்கு அவனை பிடித்துவிட்டால்!


கேள்விகள் கேள்விகள் கேள்விகள்...


இந்தக்கதையை எப்படி முடிக்கலாம் நட்பே?!

அவரவருக்கு அவரவரது மூன்றாம் பிறை!!


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...