முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தி ஜானகிராமனும் மாருதி ஜிப்சியும்!


பின் 1980களில் இதயத்தை திருடாதே படம் கேஜி தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கையில் எனக்குள் தோன்றிய சங்கல்பம், 'ஒரு நாள் மாருதி ஜிப்சி வண்டிய வாங்கறோம். லைஃப் பார்ட்னர பக்கத்தில உக்கார்த்தி வச்சி ஊட்டிய ரவுண்டு சுத்துறோம். இது சத்தியம்!'


நாகார்ஜீனா, கிரிஜா, மாருதி ஜிப்சி + ஊட்டியின் குளிரில் நனைந்த வர்ணஜாலம் எல்லாம் சேர்ந்து இந்த சங்கல்பத்தை உரம் போட்டு வளர்த்தன.


படிப்பு முடிந்ததும் அமெரிக்க மேற்படிப்பு கனவில் கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாவற்றையும் அரைமனதோடு அட்டெண்ட் செய்து, "ஏண்டா இன்னொருத்தனோட வாய்ப்ப கெடுக்கிற? ஆர்வமில்லன்னா அட்டெண்ட் பண்ணாத" என தலைமை பேராசிரியர் அன்பாய் கடிந்த பின் அவற்றையும் புறக்கணித்து... அவரது அட்வைசின்படி அதே என் கல்லூரியிலேயே விரிவுரையாளராக சேர்ந்து, பாடமும் நடத்திக்கொண்டு அப்ளிகேஷன்களையும் நிரப்பி அனுப்பிக்கொண்டே இருந்தேன். பின் ஒரு நன்னாளில் அமெரிக்க கல்லூரி ஒன்றில் மேற்படிப்புக்கு சொற்ப ஸ்டைஃபெண்டுடன் அழைப்பு வர, இரு முறை அமெரிக்க எம்பசி வாசலில் கால் கடுக்க க்யூவில் நின்று உள்ளே சென்று...'உன்னால சொந்த செலவில படிக்க முடியாதுன்னு உங்கப்பாவோட பேங்க் பேலன்ஸ் சொல்லுது யங் மேன்! அப்படியே கடன் வாங்கி படிச்சி முடிச்சின்னா நீ வாங்கின கடன அடைக்க அங்கயே செட்டில் ஆவ்றது கன்ஃபைர்மா தெரிது. சோ, வி ரிஜக்ட் யுவர் அப்ளிகேஷன்' என பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தி அந்த எம்பசியின் நாஸ்ட்ரடாமஸ் கணித்து வெளியே அனுப்ப, அவமானமாயிருந்தது.


அந்த பேலன்சையும் திரட்ட அப்பா பட்ட பாடும், 'மகனின் கனவை எப்படி நிறைவேற்றுவது?' என்கிற கவலையில் பல மாத இரவுகள் தூங்காததால் முதிர்ந்த அவரது முகம் நினைவில் வந்து வந்து போனது.


அடுத்த சில மாதங்கள் தவம் போல வேலை தேடி, இந்தியாவின் முண்ணனி மென்பொருள் நிறுவனத்தில் அழைப்பு வந்து சேர்ந்து...திரும்பிப்பார்ப்பதற்குள் வெளிநாட்டுப்பயணம், வெளி நாட்டு வாழ்வு, சொகுசான பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டேஷன், திருமணம், குழந்தைகள் என வாழ்வு என்னை ஆராதித்தாலும், மாருதி ஜிப்சி என் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் புழுதி படிய நின்றுகொண்டே இருந்தது.


பல ஆண்டுகள் சென்றபின் தாயகம் திரும்பி  வேளாண் வாழ்வியலை விரும்பி நுழைந்து... நவீன கார்கள் ஓட்டி, லோ வீல் க்ளியரன்சினால் கார்களின் அடிப்பாகங்கள் அடுத்தடுத்து அடி வாங்கவும் ஜிப்சி கனவு மீண்டும் விழித்துக்கொண்டது. ஆனால் பல வருடங்கள் முன்பே மாருதி நிறுவனம் ஜிப்சி உற்பத்தியை நிறுத்திவிட்டது வருத்தமளித்தது.


மறுபடி ஒரு தவம் போல மார்க்கெட்டில் பழைய ஜிப்சி கிடைக்குமா என சல்லடை வைத்து சலித்து தேடி, கடைசியில் ஆறு மாதங்கள் முன்பு என் கனவு ஜிப்சி ஒன்று என் வசப்பட்டது. 


சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்து வரவழைத்து, '2004 மாடல், நிறைய மேம்படுத்தல்கள்' என ஈர்ப்பு குறையாமல் முதல் முறையாக நாகார்ஜீனா தோரணையில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.


அடுத்த அரை மணி நேரம் போல கடினமான சாலைப்பயணம் எனக்கு அதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை! அவ்வளவு கடினமாக ரைடுக்கு நானும் துளியும் ஆயத்தமாக இல்லை என்பதை சில நொடிகளிலேயே மூளை தெளிவாய் உணர்த்த, மனதில் கலவரம் படர, பல்லாண்டு ட்ரைவிங் தந்த அனுபவத்தில் செய்கூலி சேதாரமின்றி வண்டியை வீட்டுக்கு ஓட்டி வந்ததையும் ஒரு தவம் போலவே செய்யவேண்டியதாயிற்று! ஜிப்சியில் குறையேதுமில்லை கோவிந்தா, நான் நவீன சொகுசு வண்டிகளுக்கு பழகிவிட்டேனே கோவிந்தா!


அதன்பின்னர்தான் தி ஜானகிராமன் மனதில் வந்தார், மெள்ள நகைத்தார்!


அந்த நொடியில் அவரது சி்ரிப்பின் பொருள் சட்டென சிந்தனையில் உரைத்தது, முகத்தில் அறைந்தது. அடடா, அவனா நானு!!!


யார் அவன்? 


தெரிந்து கொள்ள அவரது 'தவம்' என்கிற சிறுகதையின் சாரத்தை இதோ தருகிறேன் (வேறொரு வலைப்பூவில் பதியப்பட்டிருந்த சாரத்தை சற்றே தி்ருத்தி) :-)


செல்லுர் சொர்ணாம்பாவின் அழகு அக்கரைச் சீமை வரை பிரபலம். சிங்கப்பூரில் இருக்கும் கோவிந்த வன்னி அங்கு வரக்காரணமே அச்சொர்ணாம்பா. 


அவளோடு உல்லாசமாய் இருக்க வந்த ஒரு பண்ணையாரின் வாகன ஓட்டி கோவிந்த வன்னி, அவளது அழகில் பித்தாகி, 'இவளோடு ஒரே ஒரு இரவு வாழ்ந்தாலே போதும். இதுவே என் லட்சியம்' என முடிவு செய்து, அதற்கு தேவையான பொருளீட்ட சிங்கப்பூரில் உழைக்கிறான்.


அவளின் ஒரு நாள் பணத்தை சம்பாதிக்க சிங்கப்பூர் வந்த கோவிந்தன் அதை சம்பாதித்து முடிக்க பத்து வருடங்கள் ஆகிவிட்டன. "ஒரு நாளுக்காக பத்து வருட உழைப்பா? அந்த ஒரு நாளுக்கு பின் மீண்டும் அதே உழைப்பிற்கு திரும்ப வேண்டுமே" என்று கூறும் நண்பரிடம் "அப்புறம் உயிர் வாழணும்தான் என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?" என்னுமளவிற்கு அவளின் நினைவு. திரும்பி வந்து பார்க்கும் போது, அவளுக்கு அறுபது வயது. அவனது தவத்தின் தரிசனம் விபரீதமாகிவிட்டது. 'இதற்கா என் வாழ்வின் பத்தாண்டுகளை இழந்தேன்' என நொந்து திரும்புவதாக முடியும் தவம்.

:-)


பின் குறிப்பு: கடைசி தகவலின்படி இந்த ஜிப்சியை வேறு ஏதோ ஒரு ஊரில் இன்னொரு கோவிந்த வன்னி (என்னிடம் இருந்து வாங்கி) இப்போது ஓட்டிக்கொண்டிருக்கிறார்!


மாருதி நிறுவனம் மீண்டும் ஜிப்சியை நவீன வடிவத்தில் சந்தைப்படுத்தினால் க்யூவில் முதல் ஆளாய் நான் நிற்க உத்தேசம் :-) 

(ஜிம்னி - ஜிப்சி ஆகாது!)


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்