கடன்பட்டார் நெஞ்சம் போல...
என் பெற்றோரின் சிற்றூரில் வயல்வெளிகளிலும் தோப்புகளிலும்தான் காலைக்கடன், மதியக்கடன், மாலைக்கடன், இரவுக்கடன் எல்லாமே.
கடன் முடித்ததும் மண்ணைக்கொண்டு மூடிவிடுவது அனிச்சைச்செயல் போல அவர்கள் செய்யும் கடமை, ரத்தத்தில் ஊறிப்போனது. அப்படி செய்வதால் நாளடைவில் வாடையின்றி மட்கிப்போகி அங்கேயே உரமாகும் பின்னொரு நாளின் வெள்ளாமைக்கு.
வரும் வழியில் நீர் நிலை ஒன்றில் சுத்தம் செய்து வீடு திரும்புவர். நான் பள்ளி கோடை விடுமுறையில் இது பழகியிருக்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த பால்ய கால ஊரில் கழிவறை என் வீட்டுக்கு பின்புறம் சில நூறு அடிகள் தள்ளி இருந்தது. பாம்பே லெட்ரின் என அழைக்கப்படும் அந்த அறையில் ஒரு சிமென்ட் மேடை, அதன் நடுவில் அரை அடி அளவில் ஒரு துளை (என நினைவு). சிமென்ட் மேடையின் மேல்புறம் தடுப்பு சுவரும் உச்சியில் கூரையும் இருக்கும். ஆனால் மேடையின் கீழ் பின்புற சுவர் இல்லை.
கழிவறையின் பின்னால் ஒரு வாய்க்கால், அதன் வழியே பன்றிகள் வந்து... உண்டு செல்லும்.
கழித்தபின் கொல்லைப்புறத்திலிருந்து வீட்டுக்குள் வரும் பாதையில் ஒரு அடி பம்ப் இருக்கும். அதை வலு கூட்டி இயக்கி, தேவைக்கு நீர் தூக்கித்தள்ளி, அதைக்கொண்டு அவ்விடமே சுத்தம் செய்து வருவோம்.
பிராமண மற்றும் சௌராஷ்டிர சமூகங்களால் நிரம்பிய என் தெருவில் அவர்களது வீடுகளுக்கு வாரத்திற்கு சில முறை கைகளில் பெரிய வாளிகள் சுமந்து ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வந்து பன்றிகள் அகற்றாத கழிவுகளை எடுத்துச்செல்வர். இவர்களது சமூக பெயரை சொன்னால் வடக்கில் யாராவது என்னை கோர்ட்டுக்கு இழுக்கக்கூடும் என்பதால் பெயரை தவிர்க்கிறேன் :-)
அடுத்தடுத்து அப்பாவுக்கு பணியிட மாற்றம் காரணமாக வெவ்வேறு ஊர்களில் (டவுன்) வசிக்க நேர்ந்தபோதெல்லாம் நவீன பாம்பே லெட்ரின் எனப்படும் 'மனித மண்டையோட்டை தட்டையாக்கி இரு புறமும் கால் பதிக்க காது போன்ற அமைப்புகளுடைய' கழிப்புக்கருவி பழக்கமானது. அங்கெல்லாம் கழிப்பறையிலேயே சிறிய வாளியில் பெரியவர்கள் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். கூடவே ஒரு குவளையும் அதில் மிதக்கும்.
பின்னர் கல்லூரிப்பருவத்திலும் மாணவர்கள் நாங்கள் வசிக்கும் இல்லங்களில் (ஹாஸ்டல்) இந்த அமைப்பு தொடர்ந்தது. ஆனால் இயந்திரங்கள் கொண்டு மாடிக்கூரைத்தொட்டியில் ஏற்றப்பட்ட தண்ணீர், கழிவறை வரை குழாய் வழியே வந்து அங்கு குழாயைத்திறந்தால் தண்ணீர் வந்தது. எனவே எளிதான மெனக்கெடலிலேயே சுத்தம் செய்வது சாத்தியமாயிற்று.
கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து பெரு நகரங்களில் பணி செய்யும்பொழுது மேலை நாட்டுத்தொழில்நுட்ப உதவியோடு ஆசனம் போன்றதொரு அமைப்பின்மீது 'உட்காரப்'பழகிக்கொண்டோம். பின்சுவரில் தலைக்கு மேலே ஒரு பீங்கான் தொட்டியில் எப்பொழுதும் நீர் நிரம்பியிருக்கும். அத்தொட்டியின் அடிப்பகுதியில் கைப்பிடியுடன் கூடிய நீண்ட மெல்லிய சங்கிலி ஒன்று தொங்கும். அதை பிடித்து மெல்ல இழுத்தால் போதும், கழித்தது கீழ்நோக்கி தள்ளப்பட்டு நிலத்தடி தொட்டியில் சேரும். ஆசனத்திற்கு பக்கத்தில் இருக்கும் குழாயைத்திறந்து நீர் நிரப்பி சுத்தம் செய்து கொள்ளலாம்.
வேலையில் விற்பன்னராகி வெளி நாடுகள் சென்றபொழுது குழாய் வாளி நீருக்கு பதிலாக காகிதச்சுருள்களை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தம்... பழகிக்கொண்டோம்.
சில ஆண்டுகள் சென்ற பின் Health+ எனும் faucetகள் (நீண்ட, வளையக்கூடிய குழாய் நுனியில் பூந்துளை அடைப்பானுடன் இருக்கும் கருவி, பூ வாளி நீர்ச்சொறிவது போல தண்ணீர் தரும்) அறிமுகமானது. இந்த தொழில்நுட்பம் எனக்கு மத்திய ஆசிய நாடுகளில் அறிமுகமான பின்னர் நெடுநாட்கள் கழித்துதான் மேலை நாடுகளில் அறிமுகமானது.
இப்போது நம் ஊர்களிலும் பரவலாக இது பயன்பாட்டுக்கு வந்தாச்சி.
அது போக சிற்றூர்கள்தோறும் கழிப்பறைகள் வீட்டுக்கு வீடு கட்டி நம் நாட்டையே திறந்த வெளிக்கழிப்பறை இல்லாத நாடாக மாற்றியாச்சி.
அது சரி, எதுக்கு இம்மாம்பெரிய பதிவு?
மனிதக்கழிவுகள் பற்றிய சரியான புரிதல் நம் நாட்டினருக்கும், குறிப்பாக சட்டங்களை இயற்றி செயல்படுத்தும் துறையினருக்கும் இல்லாமல் இருப்பதை விளக்கவே இப்பதிவு.
மனிதன் உள்பட விலங்குகள் அனைத்துமே நினைவில் கூட தம் வயிற்றில் காடு சுமந்து திரியும் உயிர்கள்தானே. நாம் மட்டும் ஏன் விலகிப்போனோம்?
யானைகள் நடக்கும் தடமெங்கும் சில வருடங்களிலேயே யானைக்கழிவுகளின் வழியே காடுகள் உருவானதும் இப்படித்தானே. பல்லாயிரங்கோடி உயிரினங்கள் வாழும் காடுகளில் கழிப்பறைகள் ஏதுமின்றி அவை கழிக்கின்றனவே ஆனாலும் அக்காடுகள் நம் பெரு நகரங்கள் போல நாற்றமெடுப்பதில்லையே!
இன்று வரை விலங்குகளின் கழிவுகளை நம் விவசாயத்திற்கு எருவாக பயன்படுத்தும் நாட்டில் நம் கழிவுகள் மட்டும் ஏன் நவீன வாகனங்களேறி தொலை தூரம் பயணித்து எங்கோ மனிதர்கள் யாருக்கும் பயன்படாத நிலத்தில், நீர் நிலைகளில் யாருக்கும் பயனின்றி கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன? இதற்காக மக்களும் அரசுகளும் செய்யும் செலவு கோடி கோடி!
140 கோடி மக்களும் அனுதினமும் கழித்துக்கொண்டே இருக்கும் கழிவுகளை சிந்தாமல் சிதறாமல் அங்கங்கேயே இயற்கை உரங்களாக மாற்றலாமே? உரத்தயாரிப்பு நிறுவனங்கள் அத்தனைக்கும் இம்மூலப்பொருளை இலவசமாய் தரலாமே?!
இயற்கை விவசாயம், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் என மேடைகள் தோறும் முழங்கும் எவரும் இந்த சிக்கலுக்கு இதுவரை தீர்வு எதையும் முன்வைக்கவில்லையே!
ஒரு கழிவின் பயணம்:
நம் வயிற்றிலிருந்து கழிப்பறை குழாய்கள் வழியே
1.பூமிக்குக்கீழுள்ள சேமிப்புக்கிடங்கு (சிற்றூர்கள் + பாதாள சாக்கடை இல்லாத மற்ற நகர / பெரு நகரங்களில்)
சிற்றூர்களில் - சேமிப்புக்கிடங்கில் இருந்து அவர்கள் வாழும் பூமியிலேயே நிலத்தடியில் மெல்ல மெல்ல கசிந்து வெளியேறுதல். இதனால் அங்குள்ள நீர் நிலைகள் என்ன ஆகுமோ!
சிறு நிகரங்களில் மற்றும் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் - கிடங்கிலிருந்து வாகனங்கள் உறிஞ்சு குழாய் பதித்து உறிஞ்சி, வாகன கலனில் ஏறி பயணித்து, மையப்படுத்தப்பட்ட கிடங்குகளில் சேர்ப்பு அல்லது ஊர் எல்லை தாண்டி பயணித்து ஏதாவதொரு புறம்போக்கு நிலத்தில் அல்லது நீர்நிலையில் சேர்ப்பு.
2. பாதாள சாக்கடைகள் இணைக்கப்பட்ட பெருநகரங்களில் - நேரடியாக பாதாள சாக்கடைகளில் இறங்கி, ஊர்க்கழிவு மொத்தமும் சுமக்கும் அச்சாக்கடைகள் பலவும் இறுதியில் சிலவாகி அவற்றில் வரும் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, எஞ்சிய நீர் சுத்திகரிக்கப்பட்டோ படாமலோ கடலில் சேர்கின்றன அல்லது மறு சுழற்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன.
அகற்றப்பட்ட திடக்கழிவுகள்?
அவை பெருநகரங்களில் உரமாக்கப்பட்டு விவசாயிகளைத்தேடி வாகனமேறி மீண்டும் தொலைதூரம் விரைகின்றன.
140 கோடி மக்கள் கொண்ட நாட்டில் எவ்வளவு டன் மனிதக்கழிவுகள் தினமும் அகற்றப்படுகின்றன? அகற்றுவதற்கு ஆகும் செலவு என்ன? அகற்றிய கழிவுகளில் எத்தனை டன் உரமாக மாறுகின்றன? அதற்கு ஆகும் செலவு என்ன? திரவக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு எத்தனை மில்லியன் லிட்டர்கள் மறு பயன்பாட்டிற்கு வருகின்றன? அதற்கு ஆகும் செலவு என்ன?
மனிதக்கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உரங்களை வாங்குபவர்களுக்கு அரசுகள் மானியம் வழங்குகின்றனவா? இல்லையென்றால் ஏன்?
இத்தனை கேள்விகளுக்கும் விடை கிட்டுமா எனத்தெரியவில்லை. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, மனிதக்கழிவுகளை அகற்றவேண்டுமென அரசுகள் முயற்சிகளை தொடங்கியபோதே அக்கழிவுகள் எங்கு என்னவாக மாறி யாருக்கு பயன்படுகின்றன என்றும் திடக்கழிவு மேலாண்மை முறையை அறிமுகப்படுத்தினால் அதற்கு முன்பு அவற்றை பயன்படுத்திய பயனர்களுக்கு அதே விலையில் அல்லது அதற்கு குறைவான விலையில் உரங்கள் கிட்டுமா என்கிற Cost Benefit Analysis எதுவுமின்றியும் (வரவு செலவு கணக்கு) திட்டங்களை வகுத்து, மேல் நாட்டு தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்து, ஏராளமான பொருட்செலவில் சொற்பமான பலனுடன் என முதல் கோணல் முற்றிலும் கோணலாக...
நமக்கு தொழில்நுட்பம் + நிதி தந்து கழிப்பறைகளையும் மனிதக்கழிவு மேலாண்மை ஆலைகளையும் நிறுவி நடத்த உதவிய மேலை நாடுகள் இன்று Night Soil என மனிதக்கழிவுகளை கொண்டாடி அவற்றை பயன்படுத்தி மலிவு விலையில் சமையல் எரி வாயுவும் இயற்கை உரங்களும் தயாரித்து பயன்படுத்திக்கொண்டிருப்பது நம் அரசுகளுக்கு தெரியமா?!
'நாம்பாட்டுக்கு சிவனேன்னு இங்கனயேதானடா குந்தி எழுந்தேன்? அதெல்லாம் இங்கனயேதானடா பைசா செலவில்லாம உரமாயி எனக்கு வெள்ளாமைக்கு உதவிச்சு? என்னைய அப்படி குந்தக்கூடாதுன்னு சொன்ன நீங்க, குந்தினதால இலவசமா கிடைச்ச பலனயெல்லாம் பிடுங்கிட்டு இன்னக்கி கம்பேணி உரங்கள நான் வாங்க கடன் பட்டு கடன் பட்டு மீளமுடியாத கடனாளியா மாத்தீட்டீங்களேடா? என் பூமியையும் தண்ணியையும் நாறடிச்சிட்டீங்களேடா?'' என ஒரு சிற்றூரின் மனிதரொருவர் இன்று கேட்டால் எந்த அரசுகளிடமும் பதில் கிடைக்காது!
மறுபடியும் நாம் அனைவரும் நம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே குந்தி எழ வேண்டுமென்று நான் சொல்லவில்லை. மாற்று ஏற்பாடென ஏராளமான பொருட்செலவில் நாம் புதிது புதிதாய் சிக்கல்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம் என விளக்கத்தான் இந்த நீண்ட பதிவு. சிக்கல்கள் தீரவேண்டுமென்றால் மனிதக்கழிவுகள் பற்றிய நம் அசூயை விலகவேண்டும் முதலில். இது நிகழ்ந்தால் கோணலை சரிசெய்ய ஏராளமான வாய்ப்புகளை நாமே உருவாக்க இயலும். இது நிகழ்ந்தால் மட்டுமே இது சாத்தியம்.
பேரன்புடன்,
பாபுஜி
PC: Encyclopedia Britannica
கருத்துகள்
கருத்துரையிடுக