நேற்று தோட்டத்திலிருந்து கொடுக்காப்புளி பழங்கள் பறித்து வந்திருந்தேன்.
அப்பாவுக்கு எண்பது+
அம்மாவும் 80ஐ தொட்டுவிடும் தூரத்தில்.
பழங்களை பகிர்ந்து உண்டோம்.
அதன் பின், 'எப்படி இருந்தது சுவை?' என்றேன்.
அவர்களது விடை நான் சற்றும் எதிர்பாரதது...
'பள்ளிக்கூடம் போம்போது மத்யான சாப்பாடு டப்பாவ காலி பண்ணிட்டு மதிய உணவு இடைவேளயில வேட்டைக்கு போவோம். அப்பல்லாம் பையில அரையணா இருந்தாலே பெரிசு... கொடுக்காப்புளி, நெல்லிக்கா, மாங்கா, பாலாப்பழம், வெள்ளரிப்பத்தை, எலந்தை, எலந்த வடை எல்லாம் பள்ளிக்கூட வாசல்லயே கிடைக்கும். பெரும்பாலும் வயசான பெண்கள்தான் கூறு கட்டி வச்சிட்டு உக்காந்திருப்பாங்க. வாங்கி தின்னுட்டு வாய்க்கா பக்கம் போனா அங்கே ஈச்சம்பழம் காச்சிரிக்கும். இப்ப கிடைக்கிற பேரிச்சை இல்ல அது. குத்துச்செடி மாதிரி இருக்கும். அதில் ஆரஞ்சு இல்லன்னா சிவப்பு வண்ணத்தில ஈச்சம்பழம் இருக்கும். பேரிச்சைல பாதிக்கும் பாதிதான் அதோட அளவு. அப்புறம் பாலாப்பழம் விப்பாங்க. சின்னதா வெள்ளை நிறத்தில சதையும் வெள்ளையாவே இருக்கும். அத சாப்பிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கு வகை வகையா பழங்க. வேப்பம்பழம் கூட தின்னுருக்கோம். கசப்பா இருக்குங்கிறதால சாப்பிட விரும்பமாட்டோம். இதெல்லாம் தாண்டி கமர்கட்டும் கிடைக்கும்' என்றார்கள்.
சொல்லுக்கு சொல் கொடுக்காப்புளியின் சுவையில் ஊறிக்கோர்த்த நினைவு ரயில் வண்டியாக அந்தப்பழம் என் கண்முன்னே ஒரு சில மாய நொடிகளில் ஓடி மறைந்தது. அதில் பயணித்த மனிதர்களில் என் சிறு வயது தகப்பனின் முகமும் தாயின் முகமும் முகத்தை குறுக்காய் கோடிட்ட பெருஞ்சிறிப்போடு இரு சன்னலோரங்களில் காற்றில் தலைமயிர் பறக்க தாண்டி மறைந்தது...
விவசாயம் எப்படி ஒரு வாழ்வியலேயோ (Agri Culture) அது போலவே நம் உணவுகளும் ஒரு வாழ்வியலே (Food Culture).
இவை இரண்டும் பெருவணிமெனும் ஒற்றைத்தண்டவாளத்தில் ஏறி பயணம் தொடங்கி அரை நூற்றாண்டு தாண்டியாச்சி. இலக்கற்ற பயணம்... என் கண் முன்னே தோன்றி மறைந்த அந்த கொடுக்காப்ளி ரயில் இந்த தடத்தில் ஒருபோதும் பயணிக்காது!
மலையாளக்கவிஞர் முஹாத் வெம்பாயத்தின் இந்தக்கவிதையை ஒரு பாடல் மூலம் என் மனதுக்கு மிக நெருக்கமாக ஆக்கிய, ஆனால் என் இருப்பு அறியாத, தோழர் ராஸ்மி சதீஷின் குரலில் முதல்முதலாய் கேட்டபோதும் இப்படித்தான் ஒரு மாய ரயில் என் கண் முன்னே ஓடி மறைந்தது. இதை வாசிக்கையில் உங்களுக்குள்ளும் கண்டிப்பாய் அந்த ரயில் ஓடும், பேரதிர்வோடு...
இதோ அந்தக்கவிதை:
பண்டெங்ஙாண்டொரு நாடொண்டார்ன்னே; ஆ நாட்டிலு பொழயொண்டார்ன்னே ...
பொழ நெறயெ மீனொண்டார்ன்னே; மீனினு முங்ஙான் குளிருண்டார்ன்னே ...
அன்னவிடொரு வயலொண்டார்ன்னே; வயல் முழுவன் கதிரொண்டார்ன்னே ...
கதிர் கொத்தான் கிளி வருமார்ன்னே; கிளிகளு பாடண பாட்டொண்டார்ன்னே ...
ஆ நாட்டில் தணலுண்டார்ன்னே; மண் வழியில் மரமுண்டார்ன்னே ...
மரமூட்டில் களிசிரி பறயான் சங்ஙாதிகள் நூறுண்டார்ன்னே ...
நல்லமழப் பெய்த்துண்டார்ன்னே; நரகத்தீச் சூடில்லார்ன்னே ...
தீவெட்டிக் களவில்லார்ன்னே; தின்னணதொன்னும்ʼ வெஷமல்லார்ன்னே ...
ஒருவீட்டிலடுப்ப் புகஞ்ஞா மறுவீட்டிலு பஶியில்லார்ன்னே ...
ஒரு கண்ணு கலஞ்ஞு நிறஞ்ஞால் ஓடிவரான் பலருண்டார்ன்னே ...
நாடெங்ஙும்ʼ மதிலில்லார்ன்னே; நடவழி யிடவழி நூறுண்டார்ன்னே ...
நாலுமணிப் பூவுண்டார்ன்னே’ நல்லோர் சொல்லினு விலயொண்டார்ன்னே ...
அன்னும்ʼ பல மதமுண்டார்ன்னே; அதிலப்புறம் அன்புண்டார்ன்னே ...
நின்றெ படச்சோன் என்றெ படச்சோன் என்னுள்ளொரு தல்லில்லார்ன்னே ...
ஆ நாடினெ கண்டவருண்டோ? எங்ஙோட்டத் போய் அறிவுண்டோ ?
ஆ நாட் மரிச்சே போயோ? அதொ வெறுமொரு கனவாருன்னோ?
அதொ வெறுமொரு கனவாருன்னோ? அதொ வெறுமொரு கனவாருன்னோ?
------
என்ன தொலைச்சோம்? எங்க? எப்படி?ன்னெல்லாம் நமக்கு நல்லாவே தெரியும். ஆனா ஒரு மொபைல் ஃபோன் தொலைஞ்சா நாம தேடுகிற மெனக்கெடலைக்கூட நாம தொலைச்ச விலைமதிக்க முடியாத உணவு-வாழ்வியல தேடுறதில காண்பிக்கலன்னா எப்படி?
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக