முதல்முதலாய் உங்களது கனவுப்பிரதேசத்துக்கு பயணம் செல்கிறீர்கள். அந்த இடம் வரை பஸ்ஸோ ரயிலோ செல்லும் என்பதை தவிற வேறொன்றும் தெரியாது உங்களுக்கு.
அந்த ஊர் போனதும் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? அதற்கெல்லாம் என்னென்ன தகவல்கள் வேண்டியிருக்கும்?
சுச்சூ, கக்கா போவதற்கான இடம் முதல், என்னென்ன காணலாம்? எங்கெங்கு காணலாம்? எந்த வாகனத்தில் போகமுடியும்? எப்போ? நல்ல உணவு எங்கு கிடைக்கும்? நல்ல தேநீர் / சிற்றுண்டி எங்கு கிடைக்கும்? நல்ல விடுதி எங்குள்ளது? நினைவுப்பரிசுகள் எந்த கடைகளில் நன்றாக இருக்கும்?
எத்தனை எத்தனை கேள்விகள்? எத்தனை பேரிடம் விசாரித்திருப்போம்? எவ்வளவு உறவுகளை / நட்புகளை புதுப்பித்திருப்போம்? எத்தனை புதிய மனிதர்களுடன் உரையாடியிருப்போம்?
இவை எல்லாம் அல்லது இவை எதுவுமே இல்லாத நவயுக டிஜிடல் முகங்களும் குரல்களும், நமக்கு அறிமுகமே இல்லாத முகங்களும் குரல்களும், தரும் தகவல்களை நம்பி செய்யும் பயண அனுபவங்கள்... மெய்யாலுமே experiential events தானா?!
டிஜிடல் "துணைவருடன்" உலகெங்கும் செல்லலாம், ஏற்கனவே பலரும் மென்று துப்பியதை நம்பி சென்று ஏமாறலாம் அல்லது அவர்களது வழிகாட்டுதல்தான் உச்ச அனுபவம் என்று அவர்களது அனுபவங்கள் வழி மட்டுமே பயணித்து அதற்குள்ளே முடங்கிக்கொண்டு படங்களெடுத்து ஊடக சமூகங்களில் பகிர்ந்து, லைக்ஸ் பல வந்தால் தம் பயணம் நற்பயணமென்றும் இல்லாவிட்டால் இல்லை என்றும் முடிவுசெய்து... தனியே தன்னந்தனியே என எங்கு சுற்றியும் மகிழ்வற்றிருப்பதுதான் experiential livingஆ?
இதற்கு பதில்கூட கூகுளாண்டவனத்தான் கேட்போமோ?!
கேரளாவில் இருந்து வேண்டுதல்களை நிறைவேற்ற ஒரு ஆம்னி பஸ்ஸில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு வேளாங்கன்னி, கன்னியகுமரி வந்த ஜேம்ஸ், அதே பேருந்தில் உறவுகளோடு ஊர் திரும்பும்மோது மட்டமதியான வெயிலில் அனைவரோடும் சேர்ந்து அயர்ந்து உறங்குகிறார். நண்பகல் வெயில் தகிக்கிறது. திடீரென கண்விழிக்கும் ஜேம்ஸ், ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி இறங்குகிறார். மொபைல் டவருக்கு கூட தெரியாத அத்துவானக்காடு அது.
இயற்கைக்கடனை கழிப்பதற்காக என்று எண்ணி வண்டியில் அனைவரும் காத்திருக்க, ஜேம்ஸ் அவர் பாட்டுக்கு மிகப்பழகிய வயல்கள் போல நடந்து சென்று ஒரு கிராமத்தை அடைந்து நேராக அங்கு உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து கொடியில் காயந்ந்து கொண்டிருக்கும் லுங்கியை கட்டிக்கொண்டு வேட்டியை உருவி கொடியில் போட்டு, அலமாரி திறந்து முழுக்கை சட்டை ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு அந்த வீட்டிலிருக்கும் பெண்ணை பெயர் சொல்லி அழைத்து தேநீர் கேட்கிறார்.
அந்தச்சிறுகிராம வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து அவரை பார்க்க, அவர் மிக இயல்பாய் மாட்டுக்கு தீவனம் வைத்துவிட்டு வாசலில் நின்றிருக்கும் டிவிஎஸ் மோப்பெட்டை எடுத்துக்கொண்டு மளிகைப்பொருட்கள் வாங்க செல்கிறார்.
"ஏய், யாரோ ஒருத்தன் உங்க வீட்டு வாசல்ல இருந்த பைக்க எடுத்துட்டு போறானே!!!'" என ஊர் கூக்குரலிட்டு துரத்துகிறது. ஆளை காணோம்.
ஆம்னி பஸ் உறவினர்கள் பாதிப்பேர் இறங்கி ஜேம்சை தேடித்தேடி நிசமான மனிதர்களிடம் வழி விசாரித்து அதே சிற்றூரை அடைய (ஜேம்சி்ன் மனைவி + பதின்பருவ மகனும் இக்குழுவில்), அவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சி!
மூன்று ஆண்டுகள் முன்பு காணாமல் போன சுந்தரம் என்பவரது வீட்டில் ஜேம்ஸ் இயல்பாக சுந்தரத்தின் நடை உடை பாவனையிலேயே சுந்தரமாகவே வாழ்க்கையை 'விட்ட இடத்திலிருந்து' வாழத்துவங்க, ஜேம்சின் மனைவி அதிர்ச்சியில் மயக்கமாகித்தெளிய, காணாமல்போன சுந்தரத்தின் மனைவி நிலையோ அதைவிட கடினமான ஒன்றாக மாறிப்போக...
ஊரும் ஜேம்சின் உறவினர்களும் நடப்பது என்ன என உரையாடித்தெளிந்து, அவரை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டு செயல்பட...அவை எதற்கும் மசியாமல் ஜேம்ஸ் அந்த கிராமத்தமிழில் 'நான் இந்த ஊருக்காரன். என்ன வெளியேத்த யாராலும் முடியாது!' எனப்பொங்கி, ஊரிலுள்ள ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி பழசையெல்லாம் நினைவு படுத்தி மன்றாடி...ஒரு கட்டத்தில் தலை முடி வெட்டச்சென்ற கடையில் அவருக்கு தெரிந்த நாவிதர் காலமாகி ஆறு மாதமான செய்தியைக்கேட்டு 'கால வெளியை' கணிக்க முடியாமல் குழம்பி... பின்னர் ஒரு அயர்ச்சித்தூக்கம் தூங்கி எழுந்து முகம் காட்டும் கண்ணாடியை எடுத்துப்பார்க்க.......முதல் முதலாய் சுந்தரம் ஜேம்சை கண்ணாடியில் காணும் நொடி...pure acting bliss by Mammooka!
இரண்டு மணி நேரத்தில் அடுத்த ஒவ்வொரு நொடியிலும் ஒளிந்திருக்கும் ஏராளமான ஆச்சரியங்களை நாம் மம்முட்டி எனும் மகாநடிகனுடன் பயணம் செய்து அனுபவிக்கலாம்! இந்த மகத்தான பயணம் தரும் மனிதமும் மனித உறவுகளும் அவ்வளவு நிசம்!
ஜேம்ஸ் போல இல்லாது, அடுத்த முறை நீங்கள் தொலை தூரப்பயணம் செய்கையில், உங்களது திட்டத்தில் இல்லவே இல்லாத, ஒரு பெயர் தெரியாத சிற்றூர் சாலையில் சுய நினைவோடு சற்றே பயணம் செய்து, அங்கே கண்ணில் படும் மனிதரை விலங்குகளை மரங்களை பறவைகளை இன்ன பிற உயிர்களை 'நலமா?!' என்று கேட்டுத்தான் பாருங்களேன்!
நம் வாழ்வின் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கக்கூடிய ஆச்சரியங்கள் ஏராளம் என்றால் கொஞ்சம் unplannedness ம் கொஞ்சம் curiosity ம்தான் இந்த ஆச்சர்யங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் தேவதைகளாம் 😃
நான் பெரியதோட்டத்தை கண்டடைந்ததும் இப்படித்தான்! (PeriyaThottam is a little farm with a Big Heart 😃)
அகல்யாவை சிவசு சந்தித்ததும் இப்படித்தானே?!
சுந்தரத்தின் மனைவி "மீண்டும்" சுந்தரத்தை சந்தித்ததும் இப்படித்தானோ?
வாழ்வு பூமியில் முளைத்ததும் கூட இப்படித்தானோ?!
அருமையான உரையாடல். நீண்ட நாட்களாக முழுவதும் படிக்க முடியாமல் இன்று தான் படித்தேன். பல ஆண்டுகளாக ஒவ்வொரு பயணத்திலும் நான் ஏதாவது ஒரு நட்பை ஒட்டிக் கொண்டு தான் வருகிறேன். நன்றி
பதிலளிநீக்கு