முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெந்து தணிந்தது காடு

 


சோலைவனம் பாலையானதே!



மெட்ராஸ் சென்னை ஆயாச்சி.

பாம்பே மும்பை ஆயாச்சி.

கல்கத்தா கொல்கொத்தா ஆயாச்சி.

பேங்களூர் பங்களூரு ஆயாச்சி.

நியூ டெல்ஹி நயீ தில்லி ஆயாச்சி.

பிரிட்டிஷ் அடிமைத்தளைகளில் இருந்து விடுபட்டபின் நாம் செய்த இந்த பெயர் மாற்றங்கள் நாம் நம் வேர்களை மீட்டெடுக்க முனைப்புடன் இருப்பதை உலகுக்கு உணர்த்தியது.

ஏனோ தெரியவில்லை, நாம் நம் சுய அடையாளத்தை மீட்டெடுப்பது இந்த பெயர் மாற்றங்களுடன் நின்றுபோய்விட்டது...

அடிமை ஆதிக்கத்தின் அடையாளங்களை அழிக்க நினைத்து, வெறும் தோல் அளவிலேயே மாற்றங்கள் நிகழ்த்தி, "இதுதான் புதிய இந்தியா, தேச பக்தி இந்தியா" என மார் தட்டி, தேச பக்தியை பெருக்க பீட்சாவும் பர்கரும் கோலாவும் உண்டு வல்லரசுக்கனவில் நம் நாடும் அமெரிக்கா போல, நம் மக்களும் அமெரிக்கர்கள் போல எல்லா விதங்களிலும் மாறிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வு, அதன் பின் சில காலம் கோலா பர்கர் பீட்சா வேண்டாமென மயான வைராக்யம். போராட்டத்தின் ஈர்ப்பு குறைந்தவுடன் மீண்டும் பர்கர் கோலா பீட்ஸா ஷவர்மா என ஓடிக்கொண்டிருக்கிறோம்.

சுதந்திர இந்தியாவின் மலைத்தொடர்கள், நமது நுரையீரலான மலைத்தொடர்கள் ஏனோ இன்னும் அடிமைத்தளையிலேலே சிக்குண்டு கிடக்கின்றன.

நம் மலை முகடுகளையும் சரிவுகளையும் போர்த்தியிருந்த சோலைக்காடுகள் பெருவணிக சபையில் உருவப்பட்டு நீச்சலுடை வலுக்கட்டாயமாக (தேயிலை போன்ற வணிக ஆடைகள்) அணிவிக்கப்பட்டு இன்று வரை தன் மானம் காத்திட காத்திருக்குது நம் கிருஷ்ணனுக்காக.

சிறு தானியங்கள் நம் தேசத்தின் ஆதி உணவு. மண்ணுக்கு பாரமின்றி நீர்த்தேவை அதிகமின்றி வளரும் பயிர்கள்.

சுதந்திர இந்தியாவில் பசுமைப்புரட்சியால் வெள்ளை குள்ள நெல்லாலும் மெக்சிகன் கோதுமையாலும் ஓட ஓட விரட்டப்பட்டு நையப்புடைக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கோவில் கலசங்களிலும் ஏழை மக்களின் துண்டு நிலங்களிலும் அடுக்களை மண் சட்டிகளிலும் ஒளிந்து வாழ்ந்த இப்பயிர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த ஒரு ஓசையற்ற புரட்சியால் (Organic revolution) மீண்டு மெல்லப்பெருகி இன்று நம் உணவுத்தட்டுகளில் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன மீண்டும் எங்கு ஒளியலாம் என.

ஏனெனில் வணிக ஒட்டகங்கள் நுழைந்த பல ஆதி உணவுக்கொட்டகைகளின் வீழ்ச்சியை பல்லாண்டு காலம் பார்த்திருந்த பயிர்கள் இவை.

மானாவாரி சிறு தானியங்கள் பெருவணிகத்தால் உலகப்பயிராக மாற்றப்படும்போது இங்குள்ள விளைச்சல், அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ விளைவிக்கப்படும்போது குறையலாம். விளம்பரங்கள் ஏற்படுத்திய தா(க்)கத்தால் அந்நாட்டு மக்கள் 'இன்னும் வேண்டும் வேண்டும்' என கேட்க, இந்த சிறு தானிய விதைகளும் பன்னாட்டு ஆய்வகங்களில் அறுத்து தைக்கப்பட்டு வீரிய விதைகளாக, உயிர்க்கொல்லி வேதிச்சாரல்களை 'தாங்கி வளரும்' ஆற்றல் பெற்ற விதைகளாக உருவெடுத்து நம் நிலங்களை அழிக்க மீண்டும் நம் நாட்டுக்கு பயணப்படலாம், மரபீணிப்பருத்தி போல, மரபீணிக்கடுகு போல...

ஏழைகளின் அடுக்களை சட்டிகளில் தலைமறைவாகி வாழ்ந்து உயிர் நீட்டித்த சிறு தானியங்களை இன்று 'உலகின் உணவுப்பஞ்சம் தீர்க்கவந்த நல்முத்துக்கள்' என மேற்குலகம் கொண்டாடிக்கூத்தாடி போட்டுடைக்கட்டும், அவர்களது கொண்டாடாட்ட ஓசைகளை ஒதுக்கி நாம் வேறொரு விடுதலைக்காக போராட வேண்டிய நேரமிது.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்கிறியே, நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே என ஒரு பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு நம் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்.

நம் மலையன்னையை யாரோ மானபங்கப்படுத்தி அணிவித்த நீச்சல் உடையை களைந்து அவளுக்கு புத்தம்புதிதாய் அவளது வண்ணமிகு, வாழ்வு மிகு கானக ஆடைகளை அணிவிக்க நம் இறையாண்மை நெசவுத்தறி என்ன செய்யப்போகிறது? நாம் என்ன செய்யப்போகிறோம்?

உயிர் வாழ இன்றியமையாத மூச்சுக்காற்றை ஒரு கோப்பைத்தேநீருக்காக சுதந்திர இந்தியாவில் பெரு வணிகத்திடம் விட்ட நமக்கும், தம் தேசத்தை அடிமைப்படுத்திய மக்களிடம் ஒரு டாலர் மதிப்பில் நியூயார்க் நகரை விற்ற அமெரிக்க செவ்வந்திய பூர்வ குடிக்கும் ஒரு மிகப்பெரிய வேற்றுமை உண்டு.

நகரம் போனால் குறையொன்றுமில்லை கோபாலா ஆனால் மலைகளின் பல்லுயிர்ச்சூழல் போனால் நாம் சுவாசிக்க காற்றிருக்காது கோபாலா!

கானகங்கள் மலைகளில் இருந்து தேயிலைத்தோட்ட வன்முறையில் தப்பிப்பிழைத்து பள்ளத்தாக்குகளிலும் சமவெளிகளிலும் தஞ்சமடைந்தால் நாம் இங்கும் அவற்றை வதைத்து  பெருநகரங்களும் நூறுவழி இணைப்புச்சாலைகளும் கானக மயானங்களில் மேல் எழுப்பிக்கொண்டே இருக்கிறோம்.

இது போதாதென்று எஞ்சிய நம் விளை நிலங்களையும் பாலையாக்குகிறோம்.

பல ஆண்டுகள் முன்பு திரு. நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஈரோடு-கோபி-அந்தியூர் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தோம்.

மனதை மயக்கும் பசுமை சாலையின் இருபக்கமும். கார் சன்னல்களின் வழியே மெல்லிய குளிர் காற்று வீச, மாலை வானை பொன்னாக்கி சூரியன் தன் பணி முடித்நு வீடு திரும்பும் வேளையில் கவிதையான இந்தக்காட்சியால் மனம் தளும்ப, 'என்ன அற்புதமான காட்சி இது!' என நெற்பயிரில் தொங்கிய பொன்சூரியக்கதிரை அவரிடம் காட்ட, "இது அத்தனையும் பாலை நிலமய்யா!' என வருந்தினார்!

திகைத்துப்போய் " ஏன் இது பாலை?" எனக்கேட்க அவர் சொன்னது, "பாலையில் கண்ணுக்கெட்டிய வரையில் மணல், மணல் மட்டுமே. அங்கு மணல் மட்டுமே என்றால் இங்கு நெல் மட்டுமே. அவ்வளவே வித்தியாசம். அதுவும் பாலை, இதுவும் பாலை என நம்மழ்வார் அடிக்கடி சொல்வார்' என்றார்.

நம் சோலைக்காடுகளை தேயிலை எனும் ஒற்றைப்பயிர் கொண்டு பாலையாக்கிவிட்டு இன்று நுரையீரல் வியாதிகளுக்கு கோடிக்கணக்கில் செலவழித்து இடையில் அங்கங்கே பெருவணிகம் துவங்கியிருக்கும் ஆக்சிஜன் பார்களில் காசு கொடுத்து சுவாசித்து, இதோ மீண்டும் ஓடத்தொடங்கிவிட்டோம் வல்லரசு இலக்கு நோக்கி!.

என்ன இருந்தாலும் தேயிலையின் ருசி அபாரம் என சாக்கு சொல்லாமல் நாம் ஒவ்வொருவரும் தேயிலையை புறக்கணித்தால் போதும். நம் ஒவ்வொரு புறக்கணிப்பும் ஒரு புத்தம்புது பல்லுயிர்ச்சூழல் இழையை உருவாக்கும். இந்த இழைகள் நம் இறையாண்மைத்தறியில் ஏறி... மலையன்னைக்கு மீண்டும் அவளது பழைய ஆடை புத்தாடையாக கிடைக்கும் காலம் வரும்.

Unlike Adani's "storm in a tea cup", this storm will 'break the cup and the shackles' that bind our hill-lungs to set us free; free to 'breathe the free air' in the real sense.

Jai Hind.


(PC: FAO organization web page)

கருத்துகள்

  1. அருமையாய் சிந்தனையில் ஒலிக்கும் பதிவு. ஆனால் எத்தனை அறிவு கிடைத்தாலும் எதுவுமே செய்ய இயலாது நிற்பதை எண்ணி வேதனையும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. we 'can' actually do something about it, just by refusing a single cup of tea / coffee, every single time we feel like drinking one. Market size will eventually be reduced by this single act and knock on effect will reduce plantation size, and at some point in time, plantations will leave for better markets... doable!

      நீக்கு
  2. அருமை...ஓங்கி உயரமாய் வளர்ந்த மரங்களை நான் ஊட்டியில் படிக்கும்போது பார்த்திருக்கிறேன். டீ இலை பயிரிடுவதற்காக அவைகள் அழிக்கப்படுகையில் அது சார்ந்த பல்லுயிர் சூழலும் அழிகிறது.

    நம்மாழ்வார் ஐயா வழி காட்டியது போல், நுகர்வதை குறைத்துக்கொள்ளவேண்டும். பூமி அளித்ததை திருப்பி அளிக்க வேண்டும்.
    -ராமச்சந்திரன் கோபால், சவுதி அரேபியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. we 'can' actually do something about it, just by refusing a single cup of tea / coffee, every single time we feel like drinking one. Market size will eventually be reduced by this single act and knock on effect will reduce plantation size, and at some point in time, plantations will leave for better markets... doable!

      நீக்கு
  3. ஆழமாக சிந்திக்க தெரிந்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய அருமையான கருத்து.....
    இது, நுனிப்புல் மேயும் நண்பர்களை சென்று அடையவது என்றோ ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...