கண் முன்னே வாழ்வின் தடம் பிறழ்வதை கவனிக்கும் வயது இல்லாவிட்டாலும் தன்னைச்சுற்றி ஏதோ தவறாகிக்கொண்டிருப்பதை இவனால் சிறு வயதிலேயே உணர முடிந்திருந்தது, ஆனால் பகிற, வினா எழுப்ப, விடை தர, உரையாட யாருமில்லை. இத்தனைக்கும் அவன் வசித்த ஊரில் அவன் வயது சிறுவர்கள் ஏராளமாய் இருந்தாலும் இவன் பேச முயன்ற முரண்கள் யாருக்கும் புரிபடவில்லை. எனவே தனிமையில் தன்னோடு தானே உரையாடத்தொடங்கினான்.
அன்று தொடங்கியது, பல ஆண்டுகள் தொடர்ந்தது. ஒவ்வொரு கனத்த சிக்கலும் சமூகத்தில் முளைத்து வளரும்போதெல்லாம் எங்காவது ஒரு தேநீர் விடுதியில் இவன் தனியே ஆழ்ந்த சிந்தனையில் மௌனமாய் உரையாடிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.அப்படி சந்தித்திருந்தாலும் மனதில் பதியாமல் நீங்கள் நகர்ந்து, கடந்து சென்றிருக்கவே வாய்ப்பு மிகுதி.
பல காலம் விலையின்றி கிடைத்த அனைத்தும் இன்று விலை தந்தாலும் கிடைக்காதது, விலையுயர்ந்தவை என அறிமுகமானவை பல விலை மலிவாய் அனைவர்க்கும் கிடைப்பது... தன்னைச்சுற்றியுள்ள சமூகத்தில் பெரும்பான்மையினர் எப்பொழுதும் இயல்பற்ற தவிப்போடு / கவலையோடு / வன்மத்தோடு / வருத்தத்தோடு / ஏதாவது ஒரு மயக்கத்தில் உழல்வது என பலப்பல சிக்கல்கள். இவை அனைத்திற்கும் இவனே கண்டுபிடித்த விடைகள் மிக எளிதானவை, இவன் கடைப்பிடிப்பவையும் கூட. ஆனாலும் இவன் சொல்வது எதையும் கேட்பதற்கோ நம்புவதற்கோ யாருமில்லை, அவர்களுக்கு நேரமுமில்லை.
நல்ல நாள் கெட்ட நாள் அடைமொழிகளின்றி நகர்ந்த ஏதோ ஒரு நாளில் நல்ல நேரம் கெட்ட நேரமற்ற ஒரு பொழுதில் இவன் காணாமல் போனதைக்கூட யாரும் பெரிதாய் பொருட்படுத்தவில்லை.
பிறிதொரு நாளில் உலகின் அனைத்து வழிபாட்டிடங்களிலும் உள்ள நிர்வாகிகளின் கனவில் அவரவர் கடவுள்கள் தோன்றி வேறொரு நாளை குறிப்பிட்டு அன்று ஒவ்வொரு வழிபாட்டிடங்களிலும் கடவுள்கள் தோன்றி ஒரு அவசரமான, அவசியமான தகவலை மக்களிடம் பகிரப்போவதாக சொல்லி மறைய, உலக மக்களனைவரும் சமூக ஊடகங்களின் "கவுண்ட் டவுன்" பரபர அறிவிப்புகளால் பித்த நிலை ஏகி தம் தம் வழிபாட்டிடங்களுக்கு விரைய, "கடவுளில்லை" என்கிற நிலைப்பாட்டில் இருப்பவர்களும் ஆர்வம் உந்த மாறுவேடங்களில் அருகிலுள்ள வழிபாட்டிடங்களை நாட, குறிப்பிட்ட அந்த நாளின் அந்த நிமிடமும் வந்தது.
அவரவர் கடவுள்கள் தங்களுக்கென மக்கள் கட்டிவைத்திருந்த வழிபாட்டிடங்களில் ஒரே நேரத்தில் தோன்றினர்.
அவரவர் கடவுளை அவரவர் கற்பனை வடிவிலேயே நேரில் முதல் முதலாய் பார்த்த பரவசத்தில் பேச்சற்று நின்றனர் மக்கள் உலகெங்கும்.
ஒட்டு மொத்த கடவுள்களும் அன்று சொன்னது ஒற்றைச்செய்தி, உலக மக்கள் அனைவருக்கும் ஒரே செய்தி.
"இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஏக்கங்கள், கவலைகள், வருத்தங்கள், பயங்களினூடாகவே உலகை அணுகும் குழந்தைகள் போல,
ஆனாலும் எங்களை "வன்மம் வளர்க்கும் கருவிகளாகவே" பயன்படுத்தி எங்கள் பெயரால் நீங்கள் உலகெங்கும் சக மனிதர்களையும் ஏனைய உயிர்களையும் வெறுப்பதையும் அழிப்பதையும் தொடர்ந்து காணப்பொறுக்காது உங்களை திருத்த நினைத்து இந்த நூற்றாண்டில் உங்கள் வடிவிலேயே பல பிறவிகள் எடுத்து உங்களிடையே பயணித்தோம்.
"இவன்" என்பவன், கடவுளின் வடிவமே.
உலகின் மூலை முடுக்குகள் எங்கும் சில நூறு பேருக்கு ஒரு "இவன்" என நாங்கள் ஊடுருவி நன்மைகள் உணர்த்த எவ்வளவு முயன்றாலும் கேட்பதற்குக்கூட நீங்கள் ஆயத்தமாக இல்லையே!
எங்கள் முயற்சி முற்றிலும் தோற்றதை காணச்சகியாது எங்கள் மானுட வடிவங்களை நாங்கள் திரும்ப அழைத்துக்கொண்டோம். நேற்றுவரை உங்களிடையே இருந்த ஒருவன் திடீரென காணாமல் போனதைக்கூட கவனிக்க இயலாத அளவு மயக்கத்திலுள்ள உங்களிடம் இறுதியாக ஒன்றை சொல்லிச்செல்லவே வந்தோம்...
கடவுள்களின் பூமியில் தங்கிச்செல்ல வந்த நீங்கள் அனைவரும் இந்த பூமியை ஒரு மிகச்சிறிய காலவெளியிலேயே கடவுள்கள் வசிக்க இயலாத பூமியாக மாற்றி விட்டீர்கள். எனவே நாங்கள் இங்கிருந்து நாங்கள் படைத்த பேரண்டத்தில் மனிதர்கள் இல்லாத வேறு வீடு போகிறோம்.
இங்கு நாங்கள் திரும்பி வரப்போவதில்லை. உங்களுக்கு இந்த பூமியை விட்டால் வேறு போக்கிடமில்லை.
போகிறோம்.
"
எழுநூற்று சொச்ச கோடி மக்களும் அமைதியில் உறைந்து நின்றது சில நொடிகள் மட்டுமே. அந்த அமைதியை திடீரென கூட்டத்துள் எழுந்த ஒரு குரல் உடைத்தது. "ஹேய், இவர்கள் கடவுள் மறுப்பாளர்கள்! மாறு வேடங்களில் நுழைந்திருக்கிறார்கள். நம்மிடையே பிரிவினை வளர்ப்பதற்காக!!" என ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரை நோக்கி கை காட்டி முழங்க, அடுத்த நொடியில் உலக மக்கள் தம் இயல்பு வன்மத்திற்கு மீள... மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பேரண்ட ஒற்றை இறையின் முகத்தில் புன்னகை ஒன்று படர்ந்து மறைந்தது.
அன்றிலிருந்து நம் பூமி, "இறை மறுப்பாளர்கள் மட்டுமே வாழும் கோளம்" என பால் வீதியில் அறியப்படலாயிற்று.
எப்படி வரும்?
மற்றுமொரு ஆழமான சிந்தனை தூண்டும் பதிலீடு. நன்றி
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு