ஏன் மரபீனிக்கடுகு வேண்டாம் என்கிறோம்?
மரபீனிக் கடுகு = இயற்கை கடுகுக்கு அறுவைச்சிகிச்சை செய்து, மூன்று மரபணுக்களை உள்ளே வைத்து தைத்து உண்டாக்கப்பட்டது.
இந்த மூன்று மரபணுக்கள், மண்ணில் இருக்கும் பேசில்லஸ் அமைலொ லிக்யுபாசியன்ஸ் என்ற பாக்டீரியாவை அறுவைச்சிகிச்சை செய்து அதிலிருந்து பிடுங்கப்பட்டவை. ‘பர்னாஸ்’, ‘பர்ஸ்டர்’, மற்றும் ‘பார்’ என்பதே அவற்றின் பெயர்கள்.
பர்னாஸ் ஜீன் - ஆண் பூக்களுக்கு வளர்ச்சி ஊக்கி.
பர்ஸ்டர் ஜீன், ஆண் பூக்கள் மலடாவதை தடுக்கும். பெண்பூக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
பார் ஜீன், குளுஃபோசினேட் என்ற களைக் கொல்லியை பயிர்கள் மீது தெளிக்கும்போது கடுகுப்பயிரை மட்டும் காக்கும்.
DMH-11 = இயற்கை கடுகு + பார் ஜீன் + பர்னாஸ் ஜீன் + பர்ஸ்டர் ஜீன்.
கோவணம் கூட தேவையற்ற கடுகுக்கு இத்தனை ஜீன்ஸ் தேவையா?! நியாயமா?!
இனி DMH-11 வளருமிடமெல்லாம் குளுஃபோசினேட் தெளிப்பும் வளருமே! பல்லுயிரை சிதைக்குமே! தேவையா? நியாயமா?!
உயிர்ப்பண்மயம் என்பது அவசரமாக அவசியமாக பாதுகாக்கப்படவேண்டிய நேரத்தில் குளுஃபோசினேட் உயிர்க்கொல்லியை தெளித்து நமக்கு வேண்டாத அனைத்தையும் அழித்து (களை எனப்படும் ஏனைய உயிரிகளுக்கான உணவை அழித்தால் அந்த உயிரிகளும்தானே அழியும்? இதுவும் genocide தானே?!) மரபீனி கடுகை மட்டும் காப்பாற்ற அறிவியல் வணிகத்ததுக்கு ஏன் அமோக ஆர்வம்?!
நம்மாழ்வார் ஐயா சொன்னது போல நாமெல்லோருமே ஒரு விதத்தில் அரிசி, கோதுமை என இரு பயிர்களை மட்டுமே உண்ணும் பூச்சிகள்தானே? நம்மிடமிருந்து இந்த பயிர்களை காக்க யாராவது நம் மீது பூச்சுக்கொல்லி எனச்சொல்லி நச்சு தெளித்தால் சரியா??!!
வணிக அறிவியல் நம்மை நோயின்றி நலமுடன் வாழவும் விடாது, நோய் தந்து ஆனால் நோயினால் விரைவில் சாகவும் விடாது நட்பே. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் ஒற்றைப்பயிரானாலும் இவர்களுக்கு பணப்பயிரே! நாம் சிறு வயதிலேயே நச்சு பாதிப்புகளால் நோயுற்று நீண்ட நாள் நோயுடனே வாழவேண்டும் என்கிற இவர்களது உயரிய நோக்கம் நம் சிற்றறிவுக்கு எல்லாம் எட்டுமா என்ன?! மரபீனிக்கடுகு மட்டுமல்ல, மரபீனி விதைகள் அனைத்துமே இந்த வணிகப்பொருளாதாரத்தில் நம்மை மென்மேலும் சிக்கவைக்கும் கண்ணிகள்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
சிந்திப்போமா?
கருத்துகள்
கருத்துரையிடுக