நானும் நீயும் நாமாகி பல்கிப்பெருகி பூமி முழுதும் நம் குழந்தைகளை இட்டு நிரப்பி...
ஒற்றை வான் கூரையின் கீழ் ஒற்றைக்கதிரவன் ஒற்றை நிலவின் வெளிச்ச வழிகாட்டுதலில் சுழலும் ஒற்றை பூமியில்தான் நாமிருக்கிறோம், நமது குழந்தைகளும்தான்.
ஆனாலும்...
உனக்கென ஒரு பூமி
எனக்கென ஒரு பூமி
உனக்கென ஒரு வானம்
எனக்கென ஒரு வானம்
உனக்கென ஒரு கதிரோன்
எனக்கென ஒரு கதிரோன்
உனக்கென ஒரு நிலவு
எனக்கென ஒரு நிலவு
இன்று நம் ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு ஆயிரமாயிரம் பூமி, வானம், கதிரவன், நிலவு...
ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி பின்பு பலவாகி பின்பு ஒன்றாகி...
ஒற்றைக்கதிரவனும் ஒற்றை நிலவும் வானமும் பூமியும்கூட ஒற்றைக்கருந்துளை கக்கிய எச்சம்தானாம்.
அந்த ஒற்றைக்கருந்துளையை கக்கியதெதுவோ அதுவே இறையோ?
அறிவியலின் எல்லைக்கு வெகு தொலைவில் எங்கோ இருந்தபடி இருந்து பார்த்துக்கொண்டிருக்கிற அந்த இறையை நாம் கற்பிதம் கூட செய்யமுடியாத அண்ட பேரண்டக்கோவிலில் அமர்த்தி வைத்தது யாரோ?!
அந்த இறையின் துகள்களாய் என் நிலப்பரப்பெங்கும் ஈர இரவுகளின் கருமைக்கு அழகூட்டி மின்னி மின்னி நடனமாடிய அத்தனை சிற்றுயிரும் ஓடி ஒளிந்தது எங்கே?!
இதற்கு விடை எனது புலனுக்கு எட்டாதிருக்கலாம். ஆனால் இதனை காரணம் காட்டி நான் எனது வெளிச்சத்தை நிறுத்தப்போவதில்லை. ஏனெனில் என்றோ ஒரு சிறு வால் வெளிச்சம் எனது பால்ய கண்களில் விதைத்த வாழ்வு பற்றிய பெருங்கனவை எனது வெளிச்சமும் இங்கு ஏதாவது சில ஜோடிக்கண்களில் விதைக்கக்கூடும். அது மீண்டும் நம் ஈரக்கருமை நிலங்களில் மின்மினியின் சுடராட்டத்தை சாத்தியமாக்கக்கூடும்...
பேரன்புடன்,
பாபுஜி
Image: I generated this using an AI tool

கருத்துகள்
கருத்துரையிடுக