நிற்கும் இடமெல்லாம் மழை மறித்து குடைபிடிக்கும் மரம்
மழை நின்றபின் தன் வேரடிக்கு மட்டும் மழை பொழிந்துகொள்ளும் அதிசயம் நிகழும் ஒவ்வொரு மழையிலும்.
எந்த வேருக்கு எவ்வளவு நீர் தேவை என்பதை மரம் அறியும்;
சல்லி வேர்கள் மண்ணடி ஈரத்தில் மூழ்கி குளிர,
ஆணி வேருக்கு மிடறு மிடறாய் போதுமென்பதை மரம் அறியும்.
மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி, மழை நின்றபின்பு உள்வடியும் மழைநீரில் சிரம் நனைந்து உடல் நனைந்து உயிர் நனையும் அதிசய உணர்வனுபவம், மரம் மட்டுமே தரக்கூடிய வாழ்வனுபவம்.
அதிலும் அகலக்குடை பிடிக்கும் மரத்திற்கு அளவாய் மட்டுமே வேரடி நீர் என்றும் இடைவெளி நிறைந்த ஓட்டைக்குடை பிடிக்கும் மரத்திற்கு கூடுதலாய் நீரென்றும் எதுவோ என்றோ வகுத்த விதி, மாறாமல் சுமந்து நிற்குது மரம் இன்றும்!
மரத்தி்ற்குள் சூட்சுமம் பொதித்தது எதுவோ அதுவே மண் உண்ணும் நீரின் அளவையும் மண்ணுள்ளே பொதி்த்து வைத்திருக்குது ரகசியமாய்.
உயிருள்ள அனைத்தையுமே ஜடப்பொருளாய் கற்பிதம் செய்வதையே நம் வாழ்வியல் தூக்கிப்பிடிக்க, நமக்குள்ளேயும் பொதிந்திருக்கும் ஏராளமான சூட்சுமங்கள் உணரப்படாமலே நமக்குள்ளே நித்தமொன்றாய் மரித்துப்போக, புதை நிலங்களாய் செயற்கை தாகத்தோடு நாம்.
மரத்தின் சிரி்ப்பு ஒரு நாள் எல்லோர் காதிலும் கேட்கும், அதற்கான மறை சூட்சுமம் நமக்குள்ளே மரிக்காதிருந்தால் அதுவரை.
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக