பூமி தொடா பிள்ளைப்பாதம்
பூமி தொடாமல் வளர முடியாது.
பூமி தொட்டு விரல் விரித்து பாதம் பதித்து பாதம் புதைத்து பாதம் நனைத்து பாதம் கொதித்து பாதம் குளிர்ந்து என உணர்வின் வழி உடலில் ஏறும் பூமியின் ஆதி அன்பு.
பிள்ளை தவழ்ந்து கைகளூடாகவும் புவியன்பு சேர்த்து பின்பு நின்று நடந்து ஓடி தாவி பறந்து... பூமியில் மட்டுமே இயல்பாய் எளிதாய் எவர் உதவியுமின்றி கால் பதிக்க முடியும், வேறெந்த கோள்களிலும் இன்றுவரை வாய்ப்பில்லை.
கனவுகளை விற்கும் தொழில்நுட்ப மேகங்களில் முகம் புதைத்து நனவு மறந்து இறகு முளைத்ததாய் கற்பிதம் செய்து ஓரிடத்தில் நில்லாது ஆனால் பூமி தொடாது காலணிகளால் பாதங்களை காத்து கையுறை அணிந்து உணவருந்தி முக கவசமனிந்து சுவாசித்து முகமூடி அணிந்து வாழ்ந்து என இயல்பை தொலைத்து பூமியுடனான அத்தனை தொடுபுள்ளிகளையும் நிராகரித்து மதி மயங்கி... விழுந்து கண்விழித்து பார்த்தால்... சுற்றிலும் முக கவசமணிந்த கையுறைகள் தரித்த முகங்களும் ஆடைகளற்ற இயந்திரங்களும் மட்டுமே சூழ்ந்திருக்கும்.
கவசங்களற்ற முகங்கள், அதன் நீட்சியாய் கையுறையற்ற விரல்கள், அதனுள்ளே பொதிந்திருக்கும் வெதுவெதுப்பான உயிர்ச்சூடு, அது ஆற்றும் வாழ்வின் ரணங்கள், தரும் வாழ்நாள் நம்பிக்கைகள்... மறந்துபோன முதல் தலைமுறை நமதாக இருக்கும்...
இந்த ஒரு நொடி ஸ்பரிசம் இன்று நம் உலகின் அரிதினும் அரிதான ஒன்றாகிப்போனது மனித குல வளர்ச்சியின் உச்ச சாதனை.
புறக்கணிப்பின் நிச்சயத்தன்மையால் கல்போல இறுகிப்போன எத்தனையோ உயிர்க்குடுவைகள் இந்த ஸ்பரிசத்திற்காய் காத்திருப்பது அவற்றை கடந்து செல்லும் மானிட இறையின் உறையணிந்த விரல்களுக்கு தெரிந்துதான் இருக்கிறது.
வாழ்வதற்கு நேரமின்றி விரையும் கூட்டம் அறியுமா அது எதைத்தேடி விரைகிறதென்று?? எத்தைத்தின்று தெளியும் இந்த பித்தம்?
கையுறைகளையும் கவசங்களையும் முக-மூடிகளையும் தொலைப்பதற்கு நாம் காசிக்கெல்லாம் கூட செல்லவேண்டியது இல்லை. சக உயிர்களை உயிரன்போடு கனிந்து நோக்கி புன்னகைத்தாலே போதும். இந்த சிறு குறிப்புக்காய் காத்திருக்கும் பேராற்றலொன்று மற்றதை பார்த்துக்கொள்ளும்.
மனிதம் தவிர மற்ற அனைத்தும் வணிகமான உலகை மீட்க இது ஒன்று மட்டுமே உதவும்.
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக