சாலையின் ஒருபுறம் பாட்டி, மறுபுறம் அம்மா, நடுவில் தன்னைத்தானே தார்ச்சிலுவையில் ற மதுவால் அறைந்துகொண்ட 20+ வயது இளைஞன். ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி கைகள் இருபுறமும் நதிக்கிளைகள் போல நீள மல்லாந்து வானம் பார்த்து கண்கள் மூடி கிடந்தான்.
வீதிக்கு வீதி சாராயம் தள்ளாடுது தமிழகம் என்ற பாடல் கேட்டு கோவனை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய அரசு. கோவனுக்கு அன்று துணை நின்ற எதிர்க்கட்சி இன்று ஆட்சியில்.
கைது செய்யப்படவேண்டிய மதுபானமென்னவோ தடையின்றி "குடி" மகன்களை சென்றடைய புதிது புதிதாய் மதுக்கடைகள், எதிர்ப்பு போராட்டங்கள்...
கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவையில் இருந்து 25 கி.மீ தொலைவில் கரியாம்பாளையம் பிரிவு, அன்னூருக்கு சற்று முன்பாக. அந்த பிரிவில் இடதுபுறத்தில் இறங்கி விரையும் காரமடை சாலையில் ஆட்களற்ற தனிமையில் இரண்டு சிற்றூர்களுக்கு இடையில் 35° வெயிலில் நேற்று மதியம் குடிபோதையில் நினைவிழந்து விழுந்து கிடந்த வாட்டசாட்டமான மகனை இருவரும் சேர்ந்து இழுத்தும் கரை சேர்க்க முடியாமல் ஊருக்கு ஆட்களுக்கு சொல்லியனுப்பி காத்திருந்த அந்தப்பெண்களின் முகங்களில் கப்பியிருந்த கையறு நிலை துயரம் இன்னும் மனதை பிசைகிறது. சாலையின் ஒரு விளிம்பில் நின்றிருந்த பாட்டியின் கைகளில் அந்த இளைஞனின் லுங்கியும் சட்டையும். சாலையின் எதிர்விளிம்பில் அம்மா, தன் மகனை வெறித்து நோக்கியபடி.
இந்த காட்சி நம் இந்திய தேசம் முழுவதையும் இணைக்கும் "ஒரு சோறு பதம்". இவனைப்போல பொருளாதாரக்கடைநிலை மக்கள் பலரை நடுச்சாலையில் விழவைத்த மதுவின் "ஆற்றலில்"தான் இன்று பொருளாதாரக்கடைநிலை மக்கள் பலரின் வீடுகளில் மிக்சியும் க்ரைண்டரும் இரு சக்கர வாகனங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன...
சுற்றிலும் ஒதுங்கி விரைந்தன வாகனங்கள், நெடுஞ்சால நடுவில் அடிபட்டு தேய்ந்துகிடக்கும் நாய்பாபம் தம் சக்கரங்களை தீண்டக்கூடாதென கவனமாய் விலகிச்செல்லும் வாகனங்கள் போலவே.
அவனுக்கு இறங்கி கைகொடுக்க இயேசுவும் மறுத்திருப்பார் என்றே தோன்றியது.
ஊர்கூடி தேரிழுப்பது போல உள்ளூர் மக்கள் மெல்ல கூடி வடம் போல கால் பிடித்து இழுத்து/அழைத்துச்சென்றிருப்பார்கள் இன்னேரம்....
இவர்களை கரை சேர்க்க அரசுகள் ஏதாவது செய்யவேண்டும். செய்யவேண்டியது என்ன என அரசுகளுக்கு தெரியாமலில்லை...
"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?"
அதுக்கெல்லாம் நேரமில்ல பாரதி. சரக்கடிச்சி நடு ரோட்ல விழுந்து கிடக்கிற மக்களுக்கு உன் கவிதை எதுக்குங்கிறேன்?
கருத்துகள்
கருத்துரையிடுக