ஒவ்வொரு முறையும் ரயில் பயணம் வீட்டிலிருந்து கிளம்பும்போதே அனுபவமும் தொடங்கிவிடும்.
இந்தமுறை அருண் என்கிற தேனி வட்டார மனிதர் வாகனம் ஓட்டினார்.
அப்பா போலீசாக இருந்து ஓய்வு பெற்று தேனியில் அம்மாவோடு. இவர் இங்கே கோவையில். போலீஸ்காரர் மகன் என்பதால் பயந்த சுபாவ குரலோ என தோணுமளவிற்கு அவரது குரல்.
டிப்ளமோ படிப்பு, சில காலம் படித்த நகரிலேயே பணி. பல காலம் சவுதி வாசம். ஊர் திரும்பி கல்யாணம் முடித்து இப்போது வாடகை டாக்சி நிறுவனமொன்றில் பணி.
வீரபாண்டி தேர் திருவிழா பற்றி பேசிக்கொண்டே ரயில் நிலையம் வந்துவிட்டது. ஊரான ஊரில் கூட்டமான கூட்டமாம், திருவிழாவான திருவிழாவாம். ஏழு நாட்கள் அங்காளி பங்காளி அமளி துமளியாம்.
அவர்களது ஏரியாவில் கல்யாணம் முடிப்பது மட்டும் ஈஸ்வரன் கோவிலில் என்றும் மற்றபடி தெற்கு தமிழகம் எங்கும் அம்மன் ஆட்சிதான் என்றார். அவரது கண்களில் வீரபாண்டியின் தேர் நகர்வது தெரிந்தது.
ஊரில் இருக்கும் விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டாச்சாம். தேனி, போடி, கம்பம் பகுதிகளில் கேரள சேட்டன்கள் நிறைய வயல்களை குத்தகைக்கு எடுத்து தோட்டங்கள் செய்வதாகவும் அவர்களுக்கெல்லாம் 'ஒன்றை இரண்டாக்கும் வித்தை' தெளிவாக தெரிந்திருப்பதாகவும், குத்தகையில் சம்பாதித்து தோட்டத்தையே விலைக்கு வாங்கி ரிமோட் மேனேஜ்மென்டிலேயே உள்ளூர் மக்களை வைத்து நிர்வாகம் செய்கிறார்கள் என்றும் பகிர்ந்தார்.
'அப்போ நீங்க?' என்றேன்.
"ஐரோப்பால மச்சினர் இருக்கார் சார். கொஞ்ச மாசம் கழிச்சி கூப்டுக்கிறேன்ருக்கார்" என்றார். வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பினேன்.
கோவிட் வந்துபோன நகரின் அடையாளமாக mask அணிந்த முகங்கள் மட்டுமே. மற்றபடி எதுவும் மாறவில்லை. 'ஹலோ! சோசியல் டிஸ்டன்ஸ்' என முடிப்பதற்குள் இடித்து நகரும் கூட்டம் எப்போதும் போலவே.
ரயில் பெட்டிகளின் positional order ஐ ஒரு வசீகர குரல் மைக்கில் தெரிவித்தாலும் அறிவிப்பில் நமது பெட்டி எண் வரும்போது மட்டும் ambient noise அதிகமாகி கரைக்கும் :-)
பக்கத்து ட்ராக்கில் விடைபெற்று நகரும் ஒரு ரயிலின் ஜன்னல் சீட்டிலிருந்து ஓரு பிஞ்சுக்கரம் வெளியே நீள, ஒரு முதியவர் ஆதுரமாய் அந்த கையை பற்றிக்கொண்டே ப்ளாட்பாரத்தில் சில நிமிடங்கள் நடந்த காட்சி எனது நாளை வளமாக்கியது. இரு கரங்களுமே ஆசீர்வதிக்கப்பட்டிருப்பவை என்று கவிதையெல்லாம் எழுதத்தோன்றியது.
காட்சி மாற, காத்திருப்போர் இருக்கையில் கைக்குழந்தையை மடியில் கிடத்தி கொள்ளுப்பாட்டி சீராட்ட அருகில் மகள், பேத்தி - அந்த குழந்தையின் அம்மாவான சிறு பெண் என நாலு தலைமுறை உறவு வட்டம். மனித குழந்தைகள் போல போற்றி பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் வேறு உயிரினங்களில் உண்டா என தெரியவில்லை. ஆனால் இதே குழந்தைகள் வளர்ந்தபிறகு இவர்களில் சிலர் செய்யும் செயல்களை வேறு எந்த உயிரனமும் செய்யாது என உறுதியாய் நம்புகிறேன்!
இவர்களிடமிருந்து கவனம் கலைக்கவென்றே ஒரு இளம் கணவன் மனைவி, 'எங்கே விழுந்ததுன்னு தெரியாம இன்னும் எங்கெல்லாம் தேடுறது' என கணவனின் புலம்பலை கேட்டபடி தொலைந்த கைக்கடிகாரத்தை தரையில் பார்வை தேட கவலையாய் நடக்கும் மனைவி.
'சார், கானே கே லியே குச் தோ சார்' என ஒரு குரல். ஆஜானுபாகுவான உருவம், காவி சட்டை, தூய வெள்ளையில் கரை வைத்த வேஷ்டி, ஒரு துணிப்பையில் சில காலி ப்ளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள், காலில் functional செருப்பு.
சாப்பிட பணம் தந்து சாப்பாடு கிடைக்கும் இடத்தை சைகையில் காட்டுகையில் மனசில் ஏதேதோ நினைப்பு, 'பார்க்க பிச்சை மாதிரி தெரியலையே, ஒரு வேளை யாரவது சித்தராகவோ கடவுளாகவோ கூட இருக்குமோ?' என குதிரை போல சிந்தனை ஓட, நினைவில் அவற்றை பின் தொடர்ந்து நுழைந்த மனைவி 'அந்தாள பாத்தா நல்லாதான இருக்காரு? உடல் உழைச்சு பிழைக்கிறத விட்டு இப்படி ஈசியா வாழறாரு போல' என்றார் - கடவுளோ மனிதனோ ஏமாளியோ ஏமாற்றுபவனோ - எதுவும் கடந்து போகும் என நினைவு தாவிச்சென்றது எங்கள் ப்ளாட்பாரத்தில் அழுக்காய் நுழைந்துகொண்டிருந்த ரயிலின் மீது.
"தேனிக்கார மனிதர், சவுதியில் வேலை பார்த்து தாயகம் திரும்பியவர் வயலை எல்லாம் விட்டு மறுபடி ஐரோப்பா போக நினைக்கிறாரே... அவர் வாழ்க்கை அவர் பயணம்...போகட்டுமே" என நீள்கிறது நினைவின் நிழல்.
'சரி மக்கா, அவர் எங்கயோ போகட்டும். நான் வரும் வருடங்களிலாவது வீரபாண்டி திருவிழா காணவேண்டும்' என சங்கல்பம் செய்துகொண்டேன். அவருக்கு ஐரோப்பா, எனக்கு வீரபாண்டி!
வீரபாண்டி எனக்கு எதனால் special தெரியுமா?
விடை அறிய, ஒரு வாத்துக்காரி ஓட்டும் ஒரு பரிசலில் என்னோடு ஏறி இன்னொரு குட்டி ட்ரிப் போலாம் வாங்க. சுழல் எல்லாம் வரும் கெட்டியா பிடிச்சுக்கோங்க :-)
சுழியில படகுபோல என் மனசு...
இந்த மண்ணின் எழுத்து, இந்த மண்ணின் இசை, இந்த மண்ணின் உணர்வு... மூன்றும் சேர்ந்து தந்த இந்த முத்துப்பாடல்... One for the Ages, #onemoresong
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
(ராசாவே)
பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு
(ராசாவே)
காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு
-----------------------------------------------------
அமைதியான இரவில் எங்கோ தொலைவில் ஏதோ ஒரு வீட்டு மொட்டை மாடியிலிருந்து இந்தப்பாடல் கசிந்து உருவற்று காற்றில் பரவி காதில் அரைகுறையாய் நுழையும் தருணம் தரும் சிலிர்ப்பு... வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
'அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு'
...
காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு
...
ஒரு முழுப்படத்தின் கதையை மிகச்சில வரிகளில்... வேறு யாரேனும் தாக்கம் குறையாமல் ஒரு பாடலுக்காக எழுத முடியுமா? அதற்கான இசைக்கோவை, படமாக்கம் வேறு யாரேனும் இதற்கு மேல் சிறப்பாய் செய்திருக்க முடியுமா?!...
இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்வரையில் அந்தப்பெரிய மனுசனுக்கும் அந்தப்பரிசல்காரிக்கும் காதல் தழைத்தவண்ணமே இருக்கும், கேட்பவர் மனதில்.
இது வேற லெவல்!
பின்குறிப்பு: வீரபாண்டி, தேனியில் ஒரு ஆற்றங்கரை சிற்றூர். சித்திரை திருவிழாவில் அம்மன் கோவில் தேர் உலா மிக பாப்புலர். சென்று பாருங்கள் ஒரு முறை. பார்த்தபின் இந்தப்பாடலை மீண்டும் ஒருமுறை பாருங்கள். இந்த வரிக்கான காட்சியமைப்பில் சிவாஜி, வீரபாண்டி தேர் போல உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல :-)
கருத்துகள்
கருத்துரையிடுக