கவிதைக்காரன் செல்லுமிடமெல்லாம்
காத்திருப்பு அவனுக்கு முன்பே காத்திருக்கும்.
கவிதைக்காரனுக்கு எழுத தாள்களோ
மை நிரம்பிய பேனாவோ தரப்படுவதில்லை
அவன் எதிர்பார்ப்பதுமில்லை
அவனது கவிதை ஒருபோதும்
தாள்களில் உதிப்பதில்லை.
அவன் காணும் உலகில்
கண நொடி வெளிச்சத்தில்
கண்ணில் படும் அத்தனையும்
கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை.
யாரும் காண மறுப்பதை காண்பவன் அவன்
கண்டதை பதிவுசெய்பவன் அவன்
இடைப்பட்ட நேரங்களில் அவனுக்கும்
அன்றாட வாழ்வு உண்டு
அதில் அவன் தச்சனாகவோ
நாவிதனாகவோ பிச்சாந்தேகியாகவோ
அல்லது நாம் கவனம் கொள்ள மறுக்கும்
ஏதாவதொன்றாகவோ அவனது
அன்றாட வாழ்வை நகர்த்துபவன்.
கவிதைக்காரனை யாருக்கும் தெரிவதில்லை
அவனது கவிதைகளைக்கூடத்தான்
என்றாவது ஒரு நாள் அவன் கண்ட
கவிதையொன்றில் இளைப்பாறிச்சென்ற
தேவதையொருத்தி அதன்பின்னான
அவனது நாட்களின் உந்துவிசையாக இருப்பாள், அடுத்த தேவதை அவனது கவிதையொன்றில் இளைப்பாறும் வரை.
கவிதைக்காரனை இப்போதெல்லாம்
அதிகமாய் காணமுடிவதில்லை.
எங்கோ ஒரு மரக்கிளையில் ஏதோ ஒரு இலைக்குடையின்கீழ் ஒரு நாள் உறங்கச்சென்றதாகவும் அவனது உறக்கம் கலைக்க விரும்பாத தேவதையொருத்தி அவன் காதில் மௌனமாய் சொல்லிச்சென்ற கவிதையொன்றை அவன் கனவிலேயே பதிவு செய்துகொண்டிருப்பதாகவும் அந்த குடையில் இருந்து உதிர்ந்த கவிதை ஒன்று சொல்லிச்சென்றது...
கருத்துகள்
கருத்துரையிடுக