இன்று உழைப்பாளர் தினம்.
பேராசைப்பெருவணிகத்தின் வளம் மேலும் கொழிக்க பல்வேறு வகைகளில் கடுமையாய் உழைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்தப்பதிவு அர்ப்பணம்!
இழந்த ஆற்றலை மீண்டும் பெற அரியவகை மூலிகைகள் போல அரசியலில் இறையின் பயன்பாடு ஆகிக்கொண்டிருக்கிறது உலகம் முழுவதும்.
உலகம் முழுவதும் அடக்கியாண்டவர்களும் அடிமைப்பட்டுக்கிடந்தவர்களும் இன்று ஒரே மேசையில் ஷாம்ப்பெயின் / வோட்கா குடித்து புரிந்துணர்வு ஒப்பத்தங்கள் செய்கிறோம்.
ஷாம்ப்பெயின் / வோட்கா போதை தெளிந்ததும் உள்ளூரில் நமக்கு வேண்டாதவரை அவரவர் வணங்கும் இறைவழி கட்டம் கட்டி "1100இலே, 1300 இலே நம்மை அடிமைகளாக்கி இவர்களெல்லாம் என்னென்ன கொடுமைகள் எல்லாம் செய்தார்கள் மக்களே! இவர்களுக்கு நாம் சரியான பதில் தரவேண்டாமா?" என குற்றப்பரம்பரை முத்திரை குத்தி ஏழாம் தலைமுறையையும் சந்தேகத்தின் வழிமட்டுமே பார்க்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்வோம்.
சரித்திரத்தில் நிகழ்ந்த சில அநியாயங்கள் காலப்போக்கில் சரிசெய்யப்படும், செய்யப்படவேண்டும். அதுதான் மனிதகுல வளர்ச்சி. இது முஸ்லீம் கிறிஸ்துவ காலனியாதிக்கத்தின் விளைவு என்கிற புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறோம் நம் விவாதங்களை...
யார் இந்து?
பிரிட்டிஷ் நிர்வாக அதிகாரிகளுக்கு இந்திய அனுபவத்திற்கு முன் தெரிந்திருந்த பெரிய மதங்கள் கிரிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மட்டுமே. எனவே நம் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பை முதல்முதலாய் அவர்கள் செய்தபொழுது "நீ கிரிஸ்தவனா?" "நீ முஸ்லிமா?" என்கிற இரண்டு கேள்விகளுக்கும் 'இல்லை' என்று விடையளித்தவர்கள் அனைவரையும் "இந்து" என கணக்கில் ஏற்றியது வரலாறு.
முஸ்லீம்கள் அல்லாத கிரிஸ்தவர்கள் அல்லாத இந்திய நிலப்பரப்புவாசிகள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் நிறுத்தியபின் அதில் பலர் பசித்த வயிறு, ஒட்டிய கண்களுடன் நிற்கையில் சிலர் மட்டும் மோதகங்கள் சுவைத்து கோமேதகங்கள் சேர்த்து என...கால்வாசி குடை மக்களுக்கு மட்டும் வெயில் மழை காற்று எதுவும் அண்டாது, எஞ்சிய கிழிந்த முக்கால் குடை வாசிகள் வெயிலில் காய்ந்து மழையில் நடுங்கி குளிரில் விரைத்து...
குடை, அதன் வேலையை ஒழுங்காய் செய்யவில்லையென்றால் சரிசெய்ய பார்ப்பதும் சரியாகவில்லையென்றால் வேறு குடை ஏகுவதும் மனித இயல்பு.
ஆனால் எப்போதாவது, கால்வாசி குடை மனிதர்கள் கருணையுடன் சில நிமிடங்களாவது தங்களது பாதுகாப்பான இடத்தை நனைந்த மனிதர் ஒருவருக்காவது தற்காலிகமாவது தந்தது உண்டா?
வெயிலில் காய்ந்த முக்காலில் ஓருவராவது இந்த கால்வாசிக்கு 'மதம் மாறிய' நிகழ்வு சரித்திரத்தில் இருக்கிறதா?
முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் அடிப்படையில் பொருளாதார வாய்ப்பின்மையினால் வர்ணம் மாற்றிக்கொண்ட "நம்முடைய" கீழ்வர்ண மக்கள்தானே? அது மொகலாயர் காலம் தொடங்கி பிரிட்டிஷ் காலம் தாண்டி இன்று வரை நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது?
ஒரு தரித்திர பிராமணர் முஸ்லீமாக ஆகலாம் கிரிஸ்தவராக ஆகலாம், பொருளாதார தூண்டுதலினால். ஆனால் ஒரே ஒரு கிரிஸ்தவ பிராமணரோ அல்லது இஸ்லாமிய பிராமணரோ மீண்டும் பிராமணராவது சாத்தியமா?
வர்ணாசிரம பேதங்களால் தண்டிக்கப்பட்டவர்களை இந்து என்கிற ஒற்றைப்போர்வை கொண்டு மூடிவிட்டால் மட்டும் வர்ணபேதம் உடைபட்டு சமதளமாகிவிடுமா? அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எது நியாயம்?
வால்மீகி இனத்தவர் மட்டுமே வட இந்தியாவில் மலக்குழிகளை சுத்தம் செய்யவேண்டிய அவலம் ஏன் இன்றும் தொடர்கிறது?
முஸ்லீம்கள் கிருஸ்தவர்களுக்கெதிராக நாம் அடுக்கும் நியாயங்களை வர்ண பேத இடுக்குகளுக்கு ஏன் நாம் பொருத்த மறுக்கிறோம்?
அனுபவம் நிறைந்த பெருமக்களும் இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்தால் equitable life as enshrined in our constitution எப்படி அடித்தட்டு வர்ணங்களுக்கு கிடைக்கும்?
பிரித்தாளும் சூழ்ச்சியினால் நாட்டை பிடித்த பிரிட்டிஷ்க்கு எதிராக எந்த போராட்டமும் தனித்தனி குழுக்களாக இன மொழி மத சாதி அடிப்படையில் நடந்தால் அனைவர்க்கும் அவர்களிடமிருந்து விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதனால்தான் காந்தி, ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று தொடங்கி, அம்பேத்கரின் தலித் போராட்டங்களையும் இணைத்துக்கொள்ளத்தானே ஹரிஜன் பற்றி பேச ஆரம்பித்தார்? சபர்மதி ஆசிரமத்தில் அவரவர் மலக்குழியை அவரவரே சுத்தம் செய்யப்பணித்தார்? அவரும் செய்தார்?
(காந்தீய போராட்டத்திற்கு முன் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பல்வேறு மாகாணங்களில் இயக்கங்களில் சித்தாந்தங்களில் தனித்தனியே நடந்த போராட்டங்கள் ஒன்றுகூட வெற்றி பெறவில்லை).
அவரது முயற்சியின் இலக்கு சுதந்திரம் மட்டுமே. அதற்கு தடையாக இருந்த அனைத்தையும் அவர்வழியில் தீர்வு கண்டதால்தான் அது ஓரளவு சாத்தியமானது, பூரணமாய் அல்ல!
சுதந்திரம் என நாம் நினைத்துக்கொண்டிருந்த ஒன்றை நாம் அடைந்த பின், "அவர் கையாண்ட முறைகள் தவறு, எனவே நமக்கு அவர் தேவையில்லை" என்று "அனுப்பி" வைத்தோம், இன்றும் அனுப்ப முயல்கிறோம். அவர்தான் போக மறுக்கிறார், ஆவியாய் சிலர் பலரை நித்தநித்தம் பயமுறுத்துகிறார்...
ஆவிகள் பற்றி ஒரு கதையுண்டு. ஆவிகள் உறங்கவே உறங்காதாம். நிறைவேறாத கனவுகளுடன் இறந்துபோனவர்கள்தான் ஆவியாய் அலைவார்களாம். தம் கனவுகளுக்கு தடையாய் இருந்தவர்களில் கனவுகளில் தோன்றி அவர்களது தூக்கத்தையும் கெடுப்பார்களாம்.
காந்தியின் சுதந்திர கனவு, நிறைவேறா கனவு.
நம் சாலைகளில் என்று ஒரு இளம்பெண் நகைகள் அணிந்து தனியே நள்ளிரவில் இயல்பாய் பாதுகாப்பாய் நடமாட முடிகிறதோ அன்றே அவர் கனவு கண்ட சுதந்திரம், நிசமான சுதந்திரம் கிடைத்த நாளாகுமாம். இதுதான் பலரது கனவிலும் அவரது ஆவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் ஒரே செய்தியாம்!
(Why women? Why jewel? Why midnight?
Gandhi has been grossly underestimated for what he actually stood for!
Start from Criminal Tribes Act enacted by Brits, travel through economic hardships brought by them and how people's trust on gold as storehouse of their wealth went up dramatically and how women became easy fungible targets as wealth store and also as a dice that got molested in every pitch and throw of feudalism driven inter caste clashes...
If such a 'thing' can walk ALONE fear-free at midnight bedecked with jewels, what kind of society that must have been rallying around to make it happen? True Freedom! Right?!)
நிறைவேறா கனவு....ஆவியாய் அலைகிறார்!
ஒதுக்கப்பட்ட மக்களது தேவைகளும் மற்றவர்களது தேவைகளும் ஒன்றுதானே?
ஒரு பிடி சோறு, எண்சாண் உடை, ஆறடி நிலம் - இவை தொடங்கி, வாழ்வின் அடுத்தடுத்த உயர்தளங்களுக்கு முன்னேறும் ஆவலும் அனைவர்க்கும் பொதுதானே? மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் இவர்களுக்காகத்தானே உழைக்கவேண்டும்?!
சரித்திரத்தில் நிகழ்ந்த சில அநியாயங்கள் காலப்போக்கில் சரிசெய்யப்படும், செய்யப்படவேண்டும். அதுதான் மனிதகுல வளர்ச்சி. இது முஸ்லீம் கிறிஸ்துவ காலனியாதிக்கம் என்பதோடு நில்லாமல் இன்றும் கொஞ்சம் முன்னோக்கி செல்வோமா?
கானகங்கள், நம் வாழ்வின் குவி மையங்கள். அங்கிருந்த ஆதிகுடிகள் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்ன மாதிரியான பொருளாதார சூழலில் வாழ்கிறார்கள்?
நான்கு வர்ணங்களும் நம்மீது தெளிக்கப்பட்டு நாம் நமக்குள்ளே வேற்றுமை வளர்க்கும் வரையில் நாமெல்லோருமே ஆதிகுடிகளாய் கானகங்களில் வசித்தவர்கள்தானே? ஆனால் இப்போது நாமே "ப்ளடி ட்ரைபல்ஸ்! காட்டை விட்டு நகர்ந்தாங்கன்னா எவ்ளோ ரிசோர்சஸ் எடுக்கலாம்?! எவ்ளோ டெவ்லப்மெண்ட் பண்லாம்! ப்ளடி ட்ரைபல்ஸ்!!" என்கிற மனப்பான்மையில்தானே சிக்குண்டு கிடக்கிறோம்?
அடிமை வாழ்வு பிடிக்கவில்ல என குமுறி கொந்தளித்து கொடி பிடித்து / துப்பாக்கி ஏந்தி... பிடிபட்டு அடிபட்டு மிதிபட்டு உதிரம் சிந்தி... "ஹா! சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!" என கனவில் குதூகலிக்கும் அடிமைகளாகத்தான், பேராசைப்பெருவணிகத்தின் அடிமைகளாகத்தானே இன்றுவரை தூக்கத்தில் வாழ்கிறோம்?!
வாழ்வதே அடிமை வாழ்க்கை, இதில் என்ன நிறப்பிரிகை? இதிலென்ன வர்ணபேதம்?!
கருத்துகள்
கருத்துரையிடுக