தாகங்கொண்ட மேகமொன்று
நீரருந்த இடம் தேடி காற்றில் விரைய,
படபடப்பாய் கீழாடுது ஆயிரம் உயிர்.
'மேகத்துக்கே தாகமென்றால்
நம் வேரெல்லாம் நனைவதெப்போ?'
என தகிப்பாய் மரங்களின் சூடு மூச்சு. பல்லாயிரம் இலையற்ற கிளை வழியே ஆயிரம் மூச்சு.
உயிர்த்தவிப்பு தணிக்கும் பேராவலில் மூச்சுக்காற்றின் உந்துதலில் விரைந்த மேகத்தை சோகமாய் தடுத்து நிறுத்தியது நெடிய மலை ஒன்று.
மலையெங்கும் மனிதர்கள் கட்டிடங்கள் வாகனங்கள் கரும்புகை இரைச்சல்... இடையிடையே தப்பி நிற்கும் பெருமரங்களும் வெயிலில் நோக,
'எமைக்காக்க விரைந்து நீரோடு வா
பெரும் படையாக வா' என மலை இறைஞ்ச,
மரமனைத்தும் கடல் திசையில் தலையாட்டி மேகத்துக்கு வழிகாட்ட, மனச்சுமைகூடி தள்ளாடி மேகமழுதது வான்மழையாய், வான்சூட்டில் தரைதொடுமுன் ஆவியாகிப்போன மழையாய்...
மேகத்தின் கண்ணீரை கண்டவருண்டோ!
சேயழுகை கேட்ட தாய்போல கடல்மடி கலங்கி அலையெழும்பி அலை வீழ்ந்து அலை பரவி... தெறித்த நீர்த்திவலையெல்லாம் அலைதந்த காற்றிலேறி கரை நோக்கி விரைய, அள்ளி வந்த நீரெல்லாம் வானிலேயே ஆவியாவதற்குள் மலைக்கு அப்பாலும் தவிக்கும் மரங்களின் ஆவி ஆகிவிடும் பேரன்பில் விரையுது கடலிலெழுந்த நீர்மேகம்.
முடிவற்ற தொடர் ஓட்டமாய் சிறு குழந்தைகள் ஓட்டை குடுவையில் நீர் அள்ளி திரும்புவதுபோல கடல் மேகங்கள் நிலம் நோக்கி ரயில் தொடராய் விரைய...'எங்காவது ஒரு நிலப்பரப்பில் என்றாவது ஒரு நாள் மரமொன்றின் உயிர்நனைக்க மட்டுமே வீழ்வேன் நான்' என வீறுகொண்டெழுந்த மேகங்கள் சிலமட்டும் இடரனைத்தும் கடந்து குனிந்து பார்த்தால் வெந்து தணிந்திருந்த நிலப்பரப்பில் சிறு கங்குகள் மட்டுமே மரங்களின் எச்சமாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய்.
கங்குகளெல்லாம் நீரருந்தி விடைபெற காத்திருக்க, பெய்யென்று சொல்ல மரங்களற்ற நிலப்பரப்பில் பெய்தது பெருமழை மேகத்தின் கதறலாய்.
பற்றியெரிந்த கானகத்தின் மேல், அதன் மீது கொட்டுகின்ற மழைமீதுகூட பற்றின்றி பதறி விலகிய கூட்டம் எல்லாம் தொலைதூர குளிர் அறைகளிலே கவலையாய் தீட்டுது திட்டம் பல திட்டம், "முப்பதே ஆண்டுகளில் காடு பெருக்கி புவிச்சூடு குறைப்பது எப்படி?"
இது எதுவும் அறியாது தீவெந்த மண்ணடியில் மண்மடியில் கதகதப்பாய் உறங்குதொரு விதைப்பெருங்கூட்டம், பின்னொரு நாளில் கண்விழிக்கப்போகும் பழங்கூட்டம்.
நெருப்பென்னவோ மனித 'கவனிப்பால்'தான் என்றாலும் கானகங்கள் இயற்கையின் கவனிப்பால் அல்லவா?
உதிர்ந்த மயிரைக்கூட மறுபடி வளர்க்க இயலா மனிதக்கூட்டமா காடு வளர்க்கப்போகிறது? புவிச்சூடு குறைக்கப்போகிறது?! இயற்கை நகைக்கிறது கடல் சீற்றமாய், எரிமலையாய், பேரிடராய். கேட்பதற்கு ஒருநாள் மனிதக்காதுகளே இல்லாது போகும். அந்த நாளில் மேகங்களின் தாகமும் தீர்ந்துபோகும்.
பேரன்புடன்,
பாபுஜி
சிறந்த சொல்லாடல். கனல் போன்ற கருத்துக்கள்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅண்ணா,
பதிலளிநீக்குமனக்கண்ணில் திரை கட்டி ஒரு படத்தை பார்த்த உணர்வு. இதை படிக்கும் யாவருக்கும் இயற்கையை நிச்சயமாக பாதுகாக்க உந்துதல் கொடுக்கும்.
நன்றி ப்ரகாஷ்.
நீக்குகருத்துகள் மிக அருமை நண்பரே! நாமும் வாய்ப்பேச்சோடு நின்று விடாமல் நம் அங்கலாய்ப்பனைத்தையும் ஒன்று கூட்டி பேரியக்கமொன்றை உருவாக்கல் வேண்டும். கடும் முனைப்புடன் காடு வளர்த்தால்தான் நாம் நம் சந்ததி காக்க முடியும். இங்கு காடென்று நான் பகர்ந்தது வீடு தோறும், தெருக்கள் தோறும் மற்றும் காணும் இடங்கள் தோறும் ஒரு மரமேனும் நட வேண்டும். பின்னொரு நாளில் எங்கு நோக்கினும் அடர் வனமாய்க் காட்சி தரும் ! நம் சந்ததி நமக்கு நன்றி கூறும்!
பதிலளிநீக்குநன்றி! பேரியக்கங்கள் எல்லாமே ஒற்றை மனிதரிடமிருந்தே தொடங்குபவை. விதையாக நாமிருப்போம். செயல் பரப்புவோம். உங்கள் அனைவரையும் வரவேற்க பெரியதோட்டம் காத்திருக்குது :-)
நீக்கு