டைம் மெஷின்.
டைம் ட்ராவல் சாத்தியமா?
சத்தியமாய் சாத்தியமே!
டைம் ட்ராவல் செய்கையில் எனக்கு கடந்த காலத்தினூடே பயணிப்பது மட்டுமே பிடிக்கும். ஏனெனில் கடந்த நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் இன்றைய என் இருப்பு ஒரு தைரியம் தருகிறது...past must have been good or else I would not be here!
எதிர்காலத்தைப்பற்றி இப்படி உறுதியாய் சொல்ல இயலாதல்லவா, எனவே அந்தப்பக்கம் பயணிக்க மனம் விரும்புவதில்லை.
கமிங் டு த பாயிண்ட், டெக்னாலஜி அதிகம் வளராத காலத்திலேயே நான் மாதம் ஒரு முறை டைம் ட்ராவல் செய்வதுண்டு!
பல நேரங்களில் என் தாத்தாவின் காலம் வரை போகமுடியும். இப்போதெல்லாம் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலம் வரை சென்று வர முடிகிறது.
என்னுடைய டைம் மெஷின் எப்படி இருக்கும் தெரியுமா?
ஒரு வட்டமடிக்கும் உயர் நாற்காலி, நன்கு குஷன் வைத்து தைத்து ரெக்சின் தோல் பூசிய இருக்கை. அதில் சில பல லீவர்கள் (levers) இருக்கும், உயர்த்த, தாழ்த்த, சாய்க்க, நிமிர்த்த.
நான் பயணம் செய்யப்போகும் கடந்தகாலம் என் கண்ணெதிரே பிரம்மாண்ட கண்ணாடி திரையில். ஆனால் அது நான் சீட்டில் அமர்ந்தவுடனே இயங்காது. பல நிமிடங்கள் ஆகும். அதற்குள் தலைமுடியில் ஒரு கருவி தண்ணீரை ஸ்ப்ரே செய்யும். அந்தக்கருவியை இயக்கும் இன்னொரு கருவி மூளைக்கு மேலான தலைத்தோலை மெல்ல மெல்ல மசாஜ் செய்துவிடும். என்னைச்சுற்றிய இரைச்சல்கள் எல்லாம் சில நிமிடங்களில் இரு இரும்புத்துண்டுகளின் உராய்வு சத்தத்தில் கரைந்துபோய், மனம் அமைதியாகும், புலன்கள் கூர்மையாகும். மோனம் போன்றதொரு நிலையில் திடீரென முகங்கள் தோன்றும் எதிர் கண்ணாடியில். முதலில் அப்பா முகம், அதன் பின் தாத்தாவின் முகம், அதன்பின் கொள்ளுத்தாத்தாவின் முகம்.
சமீப காலங்களில் லேட்டஸ்ட் டெக்னாலஜி உபயமோ என்னவோ தெரியவில்லை, இந்த முகங்கள் தாண்டிய சில முகங்களும் தோன்றுகின்றன...
எள்ளுத்தாத்தா அல்லது அவரது கொள்ளுத்தாத்தாவாகவோ கூட இருக்கலாம். கேட்டு உறுதி செய்யலாமென்றால் அவர்களும் ஏனோ மௌனமாகவே என்னை பார்த்துக்கொண்டிருப்பார்கள்; நான் சிரித்தால் அவர்களும் சிரிப்பார்கள், நான் நெற்றி சுருக்கி யோசித்தால் அவர்களும் அவ்வாறே!
சட்டென ஒரு கருவி தலைத்தோலை வருடி விட, இன்னொரு கருவி என் முகத்தை மெல்ல துடைக்க, துடைத்ததில் என் முகம் துடைந்துபோய்...'அப்ப நான் யாரு?!' என்று முகமிழந்த மனம் விக்கித்து மீண்டும் நிகழுலகத்திற்கு என்னை இழுத்துவரும் (நோலனின் இன்செப்ஷன் பட ம்யூசிக் ட்ரிக்கர் போல).
250 ரூவா சார் என சலூன்காரர் கவனம் கலைப்பார்...
முன்னெல்லாம் இந்தப்பயணத்திற்கான செலவு பத்து ரூபாய் மட்டுமே. இப்போ 250 ரூவாயாம். அதான் கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தா வரை பயணிக்கமுடியுது போல!
மண்ணில் நான் உன் நகலல்லவா என எத்தனை நகல்கள் பாட்டுப்பாடியிருக்கும் தம் அசலை தேடிக்கொண்டு?!
ஆதி அசல் எப்படி இருந்திருக்கும்? அறிவியலுக்கு அப்பால்தான் இதன் விடை ஒளிந்திருக்கவேண்டும்!
முந்நகல்கள் தோன்றுவது கற்பனைத் திறனோடான கூர்மையான பார்வைக்கே சாத்தியம். கவனம் சிதறினால் மரணம்;ஒரு நகல் தடமழிந்து (மரணித்து) அடுத்த நகல் தோன்றி விடும். டைம் மெஷின் ஒரு நல்ல கற்பனை. இங்கும் பொருத்தமே!
பதிலளிநீக்குநன்றி. You have added one more layer of interoretation! 'கவனம் சிதறினால் மரணம்'... how true!
நீக்கு