துருவம் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்!
இரான் நிலப்பகுதியை சேர்ந்த பலோச் (Baloch) இந்துக்கள்,
தமிழர்கள்,
பஞ்சாபிகள்,
நேபாளிகள்,
ஹிமாச்சல வாசிகள்,
அஸ்ஸாமியர்கள்,
பெங்காலிகள்,
ஒடிசர்கள் (அதாவது, ஒடிசா மக்கள்),
மணிபுரிகள்,
சிங்களர்கள்,
இலங்கை தமிழர்கள்,
துளு,
குடகு கன்னடர்கள்
மற்றும் தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகளிலும் இன்று புத்தாண்டு திருவிழாவாம்.
நிலநடுக்கோட்டை ஒட்டி உள்ள ஏனைய நாடுகளிலும் தை முதல் பங்குனி வரை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தினங்களில் புத்தாண்டு திருவிழாவாம்.
ஒப்பிலாத பழையநகரம் பாபிலோனிலும் (இன்றைய இரான், இராக்) இன்னும் பல பழைழைழைய நாகரீகங்களிலும் புத்தாண்டு விழாக்கள் மார்ச்-ஏப்ரல் காலத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலும் சில தென்னமெரிக்க நாடுகளிலும்கூட!
மார்ச் வரை தெற்கு திசையில் அண்டார்டிகா பயணித்த சூரியபகவான், அலுப்பு தட்டி, 'திருப்படா வண்டிய போலாருக்கு' என வடக்கு திரும்ப, வழியெங்கும் வசந்த உற்சவங்களாம்!
நிலநடுக்கோட்டு மக்களெல்லாம் அந்த ஆண்டுக்கான உணவு உற்பத்தியை திட்டமிட, வேலை தொடங்க, வட அரைக்கோள மக்கள் தாம் பதுங்கியிருந்த குளிராடைகளுக்குள்ளும், வெப்பமூட்டப்பட்ட வீடுகளில் இருந்தும் மெல்ல மெல்ல வெளியே எட்டிப்பார்க்கத்தொடங்குவர்.
தென் அரைக்கோளத்தில் வாழும், உணவு உற்பத்தி செய்யும் மக்களினங்கள் பெரும்பாலும் செப்டம்பர்-அக்டோபரில், அதாகப்பட்டது சூரியபகவான் லகானை சுண்டி மறுபடியும் குதிரைகளை சௌத் சலோ! என திருப்பியபின், கொண்டாடுகிறார்கள்! உதாரணம்: ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா!
மேலே குறிப்பிட்ட மக்களெல்லாம் பெரும்பாலும் வேளாண்மை செய்து உணவு உற்பத்தி செய்பவர்கள்.
வேளாண் சாராத நிலப்பரப்பு மக்கள்?
கடலே 'நிலமாய்' வாழும் மக்கள்?
Now, this becomes more interesting!
வட அரைக்கோள நிலங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வேளாண் சாராது, விலங்குகளை வளர்ப்பதும், அவற்றிலிருந்து உணவுப்பொருட்கள் தயாரிப்பதும், வெய்யிலடிக்கும்போது கொஞ்சமாய் வெள்ளாமையும்தான் இவர்களது வழக்கம். சூரியனின் ரதம் அவர்களது நிலம் தொடும் காலமே அவர்களுக்கு புத்தாண்டு! மாடுகள், குதிரைகளை வளர்ப்பவர்கள் முதல் மான்களை வளர்ப்பவர்கள் வரை இதுதான் இயல்பாயிருந்தது.
உலகெங்குமுள்ள உள்ள கடலோடிகளின் புத்தாண்டு, பெரும்பாலும் ஏதாவதொரு மீன் இனம் கடலிலிருந்து அவர்கள் வசிக்கும் ஆறுகளுக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது! (மீன்கள் கடல் நீரின் வெப்பம் குறைய குறைய, விருப்பமான வெப்பம்தேடி விரையும் சாலைகள் அவற்றின் ஆறுகள்!).
பாலைவன மக்களுக்கு, கொடுங்காற்று திரும்பி மழைக்காற்று தொடங்கும் காலம் புத்தாண்டு காலம்!
புத்தாண்டு வாழ்த்துகள் நட்பே!
பெருவணிக ஒட்டகம் நுழைந்த கூடாரம் போல ஐரோப்பிய ராசாக்களும் ராணிகளும் கப்பல், வெடி மருந்து, துப்பாக்கி கலாசாரத்துணையுடன் சூறையாடிய நிலமெங்கும் (வடக்கு வாழ்கிறது தெற்கு தாழ்கிறதுன்னெல்லாம் சல்லியடிக்காமல், வடக்கு தெற்கு பாகுபாடின்றி இரண்டு அரைக்கோளங்கள் எங்கும் இவர்களது காலணி பட்ட இடங்களெல்லாம் நலிந்த காலனி ராச்சியங்களாக ஆகி, இவர்கள் தம் ஆளுமைக்காக ஏற்படுத்திய "ஒருங்கிணைந்த" காலெண்டரில் சனவரி 1 - சிவில் கணக்கு துவங்கும் நாள் என அறிவித்தது மெல்ல மெல்ல அங்கெல்லாமிருந்த ஆயிரக்கணக்கான மக்களினங்களின் புத்தாண்டு கொண்டாட்ட தினங்களை விழுங்கி, எல்லோரும் சனவரி 1 க்கு மாறியாச்சு.
ப்யூட்டி என்னன்னா, இந்த நிலப்பரப்புகள் எல்லாவற்றிலும் இன்றுவரை அவரவர் புத்தாண்டு தினங்கள் மரபு வழி கொண்டாட்டங்களாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன, நீண்டுகொண்டுதான் இருக்கின்றன!
வாழ்க்கை ஒரு வட்டம். வாழ்வியலும் பொருளாதாரமும் அவ்வாறே. உலகின் பழைய நூல்களெல்லாம் சொல்வது, 'From Dust, to Dust' or some variations of the same.
வட்டத்திலிருந்து விலகி பயணிக்கத்தொடங்கினால், எங்காவது ஒரு புள்ளியில் கடும் குளிரில் / உறைபனியில் / தோலுரிக்கும் வெய்யிலில், 'நாம நடக்கிற பாதை ஊர் சேர்க்காது போலயே!' என்கிற பயமும் தெளிவாய் கண்டிப்பாய் வந்தே தீரும். விலகி நடந்தவர்களை அச்சமும் அறிவுத்தெளிவும் மறுபடி வட்டத்தில் சேர்க்கும்!
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் நட்பே!
பெருவணிக ஒட்டகங்களின் வால்களாய் மதங்கள்... இவை நுழையும் கூடாரங்களின் கதியும் இதுவே!
ஒட்டகத்திடம் இருந்து கற்றதை ஒட்டக வாலும் தெளிவாக செய்ய முயலும்தானே!
பெருவணிகம், பேரரசுகள், ராச்சியங்கள், மதங்களுக்கெல்லாம் முன்னிருந்த பழமையான பல்லாயிரம் வாழ்வியல்கள், இயற்கையென்னும் குவிமையத்தில் (focal point ங்கோ!) இணைந்திருக்கின்றன, இன்று வரையில். இதனால்தான் "உகந்த பருவ மாற்றங்கள்" அந்தந்த நிலப்பரப்புகளில் இன்றும் கொண்டாடப்படுகின்றன.
இந்தப்புரிதல் அனைவர்க்கும் வாய்க்க, குறிப்பாய் என் வட இந்திய 'அரைக்கோள' வாசிகளுக்கும் அவர்களது தென்னிந்திய அரைக்கோள அனுதாபிகளுக்கும் வாய்க்க வாழ்த்துகிறேன்!
In diversity we thrive!
கருத்துகள்
கருத்துரையிடுக