விதைத்தவன் வெயில் அறுப்பான்!
திணை விதைத்தவன் திணையறுக்கையில்
வினை விதைத்தவன் வினையறுக்கையில்
வெயில் விதைத்தவன் வெயில் அறுத்துதானே ஆகவேண்டும்?!
மரங்களாலும் செடிகொடிகளாலும் இயற்கை நெய்த கானகங்கள் படர்ந்த மலைச்சரிவுகளை மானபங்கங்கப்படுத்தி தேயிலை, காபி, சில்வர் ஓக் என வகுந்து வகுந்து வகுத்து, இடையிடையே முழுதாய் மழித்து எஸ்டேட் பங்களாக்களும் ஆலைகளும் குடியிருப்புகளும் கட்டி...விதைத்ததெல்லாம் வெயில், வெயில் தவிர வேறில்லை...
கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணித்தபோது, குன்னூருக்கு சற்றுமுன் வரை என்னைப்போர்த்தியிருந்த கானகத்தை காலம் சட்டென உருவி தேயிலைப்பாலையின் நிர்வாண தரிசனம்...
ஆங்கிலேயருக்காக உருவப்பட்ட மலையரசியின் ஆடையை மறுபடி நெய்து போர்த்த சுதந்திர இந்தியாவில் தறிகளே இல்லையாம்!
உலக மற்றும் உள்ளூர் பெருவணிக சந்தைகள் தரும் ஊக்கத்தில் நாமும் நம் அரசி என்ன அற்புதமான பச்சையாடை உடுத்தியிருக்கிறாள் என ஆமோதித்துக்கொண்டிருக்கும்வரை இங்கு அவளது ஆடைக்கான நூல் கூட ஆயத்தமாகாது!
தொலைத்த கானகங்களை தொலைத்த இடத்திலேயே மீளுருவாக்கும் எளிதான செயலை புறம்தள்ளி வேறு எங்கெங்கோ காடுகளை நாம் வளர்த்தால் அவளது நிர்வாணத்தை மறைத்துவிடலாமாம் கார்பன் கிரடிட்டுகளால்!
தம் மலைகள் நிர்வாணமாய் இருக்கும் வரையில், மலையிறங்கிய சமவெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நாம் வெயிலை மட்டுமே அறுவடை செய்துகொண்டிருப்போம்.
வடதுருவ கண்டங்களில் குளில்காலத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் மக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வெயில் விநியோகம் செய்யலாம் வாருங்கள் மக்களே!
கார்பன் கிரடிட் சந்தை சாத்தியமானதுபோல இதுவும் விரைவில் சாத்தியமாகும்!
கருத்துகள்
கருத்துரையிடுக