வீடற்றவனின் கூடு
அவன் சுமக்கும் நினைவுப்பொதி.
நினைவுகள், ஊறிப்போன நைந்துபோன புளித்துப்போன நினைவுகள், இடையிடையில் இனிப்பு கெடாத சிதறல்களும் கண்டிப்பாய் இருக்கும்...
இருபுறமும் விரையும் வாகனங்களில்
கடக்கும் மனிதர்களைவிட
இவன் அமைதியாகவே கடக்கிறான்,
நிதானமாய், கைகளால் சாலையை பிளந்து,
மெல்ல மெல்ல, இலக்கின்றி.
நமக்குத்தான் சாலையென்பது விதிகளுக்கும் விதிமீறல்களுக்கும் இடையில் ஊடாடும் கருப்பு நதி.
அவனுக்கு அது எதுவாகவும் இருக்காது...
காற்றைக்கிழித்து விரையும் பறவை போல அவன் காலத்தை கிழித்து மெல்ல நடைபோடும் ஒரு பயணி, சாலையும் காற்றும் அவனது உலகில் அவையவையாக இல்லாமலுமிருக்கலாம்.
வீடற்றவனின் கூடு அவனுக்கு சில நேரங்களில் தலைச்சுமை, சில நேரங்களில் தலைச்சுமையை தாங்கும் சுமை.
விழிப்பு, உறக்கம், பசி, தூக்கம் இவை எதுவுமே அண்டாத ஒரு மோன வெளியில் அவன் இன்னும் கைகளை காற்றில் துழாவி நடந்துகொண்டிருக்கிறான்.
இந்தப்பயணத்தில் இவன் இப்போது ஞானத்திற்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறான் எவ்வளவு அருகிலிருக்கிறான் என்பது ஒரே ஒரு போதிமரத்திற்கு மட்டுமே தெரியும்.
அவனது அழுக்குப்பொதி இளைப்பாற அந்த மரத்தடி, இடத்தை ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறது.
விழிப்பு, உறக்கம், பசி, தூக்கம் இவை எதுவுமே அண்டாத ஒரு மோன வெளியில் அவன் இன்னும் கைகளை காற்றில் துழாவி நடந்துகொண்டே இருக்கிறான்.
புத்தனாலும் இயலாதது சித்தார்த்தனாய் இருப்பது!
கருத்துகள்
கருத்துரையிடுக