February 14: Happy Lupercalia!
வெகுகாலத்துக்கு முன்பு ரோமாபுரியில் பிப்ரவரி 7 என்பது வசந்த காலத்தின் தொடக்க தினம். மேற்கத்திக்காற்று மழைமேகங்களை ரோமாபுரியின் நிலங்கள் மீது திசை திருப்பும் நாளாக இது கணிக்கப்பட்டிருக்கிறது.
நிலங்களை சீர்திருத்துதல், பயிர்களில் களையெடுத்தல், கவாத்து செய்தல், பழைய தாவரக்கழிவுகளை எரியூட்டுதல் (அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் மீண்டும் விளை நிலங்களுக்கு உரமாகும்) போன்ற வேலைகளை அன்றைய விவசாயிகள் தொடங்கி, அந்த மாதம் 15 ஆம் நாள் ஒரு மிகப்பெரிய 'கிடா வெட்டு, சாமி கும்பிடு' விழா நடத்தி, வெட்டிய கிடாக்களின் தோலை உரித்து அந்த தோலினால் எதிர்வரும் பெண்களை வலிக்காது அடித்து (அப்படி அடி வாங்கியவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டுமாம், நிறைய குழந்தைகள் பிறக்குமாம். ஐதீகம்) ஆனந்தமாய் கழியும் அந்த நாள்.
ரோமப்பேரரசின் முதல் அரச சகோதரர்களை உயிர்காத்து வளர்த்த ஓநாய் ஒன்றை கடவுளாய் வழிபட்டு அதன் குகையில் தொடங்கும் இந்த விழா.
கிரிஸ்தவ மதம் ரோமப்பேரரசுக்கு எதிராக மெல்ல மெல்ல காலூன்றி, உயிர்த்தியாகங்கள் செய்து பின்னர் ஒரு ரோமப்பேரரசனே கிறிஸ்தவ மதத்துக்கு மாறியபின் தழைத்தோங்கி...'இனி பிதா சுதன் பரிசுத்த ஆவி மட்டுமே இறை. உங்களது சிறுதெய்வங்கள் எதுவும் தெய்வங்களே அல்ல!' என கட்டளையிட்டு, அழிக்க முடிந்த சிறு தெய்வ சுவடுகளை / விழாக்களை அழித்து, அழிக்க இயலாத தெய்வங்களை / விழாக்களை கிரிஸ்தவத்தில் இணைத்துக்கொண்டு...பாகன் என அறியப்படும் 'பல கடவுளர் வழிபாட்டை' சிதைத்து... பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் 3 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வேலன்டைன் என்கிற கிறிஸ்தவ துறவியை 'புனிதர்' என 14 ஆம் நூற்றாண்டில் பிப்ரவரி 14 இல் அறிவித்து... தொடக்கத்தில் அவர் புனித அன்பின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டு அதன் பின்பு பயணங்களின் காவலர், வலிப்பு நோய் வராது தடுப்பவர், தேனீக்களை பாதுகாப்பவர் என அடுத்து வந்த பல நூறாண்டுகளில் அவரது பணிச்சுமை பெருகிக்கொண்டே போய்...இது முடிவற்ற வரலாறு.
இது எதுவும் அறியாத நாம், உலகளாவிய பெரு நுகர்வு பெரு வணிக மாயையில் சிக்கிக்கொண்டு காதலன்/காதலிக்கு ரோஜாப்பூக்கள், பூங்கொத்துகள், ஒற்றை மெழுகுவர்த்தி டின்னர் என மல்டி பில்லியன் வணிகமாக்கி... பணத்தை இறைத்து ஆல் போல வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
நானும் வாலன்டைன்ஸ் டே கொண்டாடுவேன், அந்த ஒற்றை மெழுகுபோல அந்த மண்ணில் வாழ்ந்த ஆதி விவசாயிகளின் விழாவென மதித்து.
February 14: Happy Lupercalia!
பின் குறிப்பு:
ஒற்றை நிலம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இறை - இது எதுவுமே பூமிக்கு புதிதல்ல!
Punch is at the end-P.S. Well said.
பதிலளிநீக்கு