கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடையில் விழித்திருக்கும் நொடியிலெல்லாம் துரத்துது என்னை, என் பதின்பருவ கனவு ஒன்று.
பாலகுமாரன் போதித்த காதல் வேதங்களும் தி.ஜா காண்பித்த உன்னத பெண்களும் என் மனதில் கட்டியெழுப்பிய என் தேவதைப்பெண்ணுக்கு மணியம் செல்வனின் ஓவியங்கள் உயிரூட்ட, தேடல் தேடல் சதா தேடல்...
கண்ணில் காண்கின்ற பெண்களெல்லாம் எங்கோ பொருந்தி எதிலோ பொருந்தாமல் போக, இளமையென்னும் இழையொன்றில் நான் விரைந்து இங்குமங்கும் அலைய, காலமென்னும் மாய மை மெல்ல மெல்ல ஓவியத்தின் கோடுகளை அழிக்க, இன்று கூட என்னை கடந்து போன பெண்ணின் நெற்றி மட்டும் அதே ஓவிய நெற்றி. இன்னொரு நாளில் என்னிடம் பேசிச்சென்ற இன்னொரு பெண்ணில் அந்த கண்கள் மட்டும்...
அழிந்து போன கோடுகள் விட்டுச்சென்ற உணர்வுகள் மட்டும் மனதில் அலையெழுப்பி தளும்ப தளும்ப, கோடுகள் அழிந்த அந்த இடைவெளி அனைத்தையும் இட்டு நிரப்பும் பேராசையில் சில முகங்களை ஏனோ திரும்ப திரும்ப பார்க்கத்தோன்றும்.
எத்தனை முகங்கள் கண்டாலும் அந்த முகம் ஆகாது எந்த முகமும்...
காதலுக்கு முகமெதற்கு? என்ற புரிதல் வருவதற்கே தேவைப்பட்டது ஆண்டு அரை நூறு.
நினைவில் எங்கோ காற்றில் நெற்றியில் புரளும் முடிக்கற்றையில், அமைதியாய் நேசத்தோடு சம்மதம் தேடும் கரு விழிகளில், அதிகாலையில் கலைந்த இருளில் புதிது போல தோன்றும் கை ரேகையொன்றில், ஆட்களற்ற சாலையொன்றில் இன்றும் உதிர்ந்து கிடக்கும் நம் உரையாடலின் சிறு விள்ளலில், இன்று பூத்த மலர் போல சிரித்தபடி என்னை கடந்து போகும் அந்த சிறுமியின் சிரிப்பில் என இன்றும் நினைவூட்டி... என்றோ ஒரு நாளில் ஒரு நொடிப்பொழுதில் இந்தக்கனவு வாழ்விலிருந்து விழித்தெழுந்து நான் காணப்போகும் என் கனவு முகம் உனதாகவும் இருக்கலாம் சகி்...
ஆழிசூழ் உலகில் என் படகின் பாய்மரம், என் திசைகாட்டி, என் நங்கூரம் நீ என ஏதேதோ கற்பனைகள் தாலாட்ட, உன் நினைவுகளின் வெம்மையில், உறைகுளிரில், மழைச்சாறலில் உறங்கப்போகும் முன், நாளைய என் தினத்தின் திசையறிய எனக்கு நானே எழுதி வைக்கும் நாட்குறிப்பு இது.
என் தேடல் தொடரும், நாளையும் அதன் பின்னான மற்றைய தினங்களிலும்.
- சகா.
கருத்துகள்
கருத்துரையிடுக