முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடல் இனி மெல்லச்சாகும்!

ஹேமமாலினி கன்னம் ஏன் இப்படி ஆச்சி?

லாலு பீகார் முதல்வராக தந்த ஒரு வாக்குறுதி, 'எங்கள் சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல வழவழப்பாய் அமைப்போம்'.

இது தேசம் முழுதும் வைரலாகி நாம் இழைத்து இழைத்து (ஒரு ஊத்தப்ப மாவில் நான்கு ரோஸ்டுகள் என்பதாக) மழித்து மழித்து சாலைகள் அமைத்தோம் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு.

மழித்த ரோமங்களை நீர்நிலைகள், ஏரிகள், குளங்களில் இட்டு நிரப்பி அவற்றின்மீதும் ரோமாபுரியை நினைவுபடுத்தும் எழில்மிகு தூண்களும் மாட கோபுரங்களும் கொண்ட பல்லாயிர குடியிருப்புகளை வடித்தோம்.

பெருவணிகத்தின் துணையோடு இத்தனை குடியிருப்புகளும் வாங்கிக்குவித்து "வடித்ததை" கடலுக்கனுப்புவதற்கு புதிதாய் சுரங்கக்கால்வாய்கள் செய்தோம். அவற்றிலும் நெகிழி கழிவுகள் கவனமாய் கொட்டி அடைத்தோம்.

அடைப்பு பெருகப்பெருக நம் பொருளாதாரமும் வளர்வதாய் கண்டு 'ஒப்பிலாதொரு பொருளாதாரம் உலகத்திற்கொரு புதுமை!' என மார்தட்டி நம் வாழ்வின் தரமும் உயருவதாய் மகிழ்ந்து வெளி தேசங்களின் மதுக்குடுவைகளோடு உருண்டோம். உருண்ட குடுவைகளும் சுரங்கக்குழாய்களில் சரணடைய, அடைப்பும் வணிகமும் பொருளாதாரமும் பெருகுமுகமாகவே ஏறிப்போக, உலகின் கழிவுகளனைத்தையும் ஈர்க்கும் தனிப்பெரும் நிலப்பரப்பாய் நம் வரலாறு புவியியலை மாற்றியமைத்தோம்.


இத்தனை இடர்களையும் சகித்திருந்த இயற்கை எரிமலையாய் குமுறி, கடல்கொண்டு மூழ்கவைத்து, தீப்பொறிகள் கொண்டு காடெரித்து வீடெரித்து மெல்ல மெல்ல போரில் இறங்கியபோதும், "நமது தேரை ஓட்டுவது பெருவணிக கடவுளல்லவா, அவரிருக்க பயமேன்!" என இருமாந்திருந்தோம்.

கண்ணுக்குத்தெரியும் எதிரிகளை கண்டும் அஞ்சாது திரியும் அற்ப மனிதர்களின் அற்பத்தனத்தை உடைக்க, கொம்புகள் பல கொண்ட ஒரு நுண்ணுயிர் 'உள் நுழைந்து' தகர்த்தபோதும் கவசங்கள் அணிந்து வியூகங்களை மாற்றியமைத்தோம், அமைத்துக்கொண்டிருக்கிறோம், மேலும் மேலும் நெகிழிகள் கொண்டு இயற்கையின் சுவாசத்தை அடைக்க முயல்கிறோம், போரென்னவோ ஓய்வதாயில்லை.

பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து ஊழிமழையை இயற்கை அணுப்ப, ஜன்னி கண்டு நம் சாலைகள் கதற, இப்பொழுதும் பொறுப்பாய் இயற்கை கழுவிக்கொண்டிருக்குது நம் அழுக்குகளை.


மேட்டுப்பகுதியில் தேங்கிய நீரை "மேட்டு"க்குடிகள் நிலம் வகுந்து வழிந்தோடவைக்க, அந்த நீர் நடுக்குடிகளின் வீடு புகுந்து பிழிந்து போட, அவர்களும் அவசரமாய் நிலம் வகுந்து இன்னும் கீழே நீரனுப்ப, ஓட பாதைகளில்லா நிலப்பரப்பில் குடிசைகள் கட்டி வாழும் அடிக்குடிகள், 'குடி' போதையில் தப்பிப்பிழைத்த அடிக்குடிகள், சுமக்க முடிந்த சுமைகளை மட்டும் அவசரமாய் சேகரித்து மேட்டுநிலம் நோக்கி விரைய, நீரடித்துச்செல்லும் குடிசைகளின் கோபுரங்களிலெல்லாம் நெகிழிப்பாய்கள்.

பாய்விரித்து கப்பலோட்டி கடலாண்ட நிலப்பரப்பு இன்று கடலுக்கனுப்புவதெல்லாம் அழிக்க இயலா நெகிழிப்பாய்களும் நெகிழிக்குப்பைகளும் மட்டுமே, அவை கூட போராடி வென்றால் மட்டுமே அடைபட்ட சுரங்கப்பாதைகளை சுத்திகரித்து கடல்சேர இயலும்.


அது சரி, கடல் சேர்ந்த குப்பைகள் என்ன ஆகும்?

கடல் நீரை மாசுபடுத்தும், கடல் வாழ் உயிரிகளின் நாசிகளை, நுரையீரல்களை, வயிறுகளை நெகிழி கொண்டு அடைத்து திணறத்திணற கொல்லும். எஞ்சிய உயிரகளை பெருவணிக இழுவை மடிகள் ஆழ்கடலிலும் துரத்தி வலைக்குள் தள்ளி கரை சேர்த்து வணிகம் வளர்க்கும்.

கடைசி உயிரி நெகிழியில் திணறி மாளும் வரையில், கடைசி உயிரி இழுவை மடியில் சிக்கி சிதையும் வரையில் இவை தொடரும்.

அதன் பின் வணிகத்திற்கு அங்கென்ன வேலை? எனவே பெருவணிகம் வேறிடம் ஏகும். நெகிழி படர்ந்து மூடிய நீர்ப்பரப்பு சூரிய ஒளியை திருப்பியனுப்பும், புவிச்சூடு வளர்க்கும், நீரின் சுவாசத்தை நசுக்கும், நீர் ஆவியாகும் சுழற்சியை நிறுத்தும். அதுவரையில் கடலில் உருவாகி கரைவந்த மழையும் மரித்துப்போகும்.

மழையற்ற உலகு செய்ய நம் மனிதகுலம் எத்தனை எத்தனை உத்திகளை செயல்படுத்தவேண்டியிருக்கிறது?

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் எனப்போற்றிய உலகும், Rain Rain Go Away என்கிற உலகும் ஒன்றாய் 'பெருவணிக புரிந்துணர்வு ஒப்பந்த'த்தில் கெயொப்பமிட்டு கொண்டாடிய பெருநுகர்வுத்திருவிழா முடிந்தபின்னான, குப்பைகள் குவிந்த, நம் நிலப்பரப்பின் வரலாறு இப்படித்தான் இருக்கப்போகிறதென்றால் அதை எழுத யார் 'இருப்பார்?'

வேற்றுக்கிரக கல்லூரிகளில் நம் வாரிசுகள் எவரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் ஒரு வேளை அவர்கள் எழுதலாம்...




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்