உருண்டையாய. அல்லது நீளுருண்டையாய், வழவழப்பாய் அல்லது சற்றே சொரசொரப்பாய், பலப்பல வண்ணங்களில்.
கூழாங்கற்களை பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்கமுடியுமா என்ன?!
இந்தக்கற்களின் மீது நடப்பதும், இவற்றை உள்ளங்கைகளில் பொதித்து வைப்பதும் நம்மை பால்யத்தி்ற்கு தூக்கிச்செல்லும் மந்திரக்கதவுகள் அல்லவா?
நட்சத்திர வெடிப்பின் துகள்கள், தூசிகள், மெல்ல மெல்ல்ல்ல திட வடிவம் பெற்று பல லட்சம் கோடி ஆண்டுகள் தவம் செய்து புவியின் ஓடாகி... பூமிப்பாறைகள் அவ்வப்போது ஒட்டி உரசுகையில் உரசலின் சூடும் அழுத்தமும் இவற்றை குழம்பாக்கி பிளந்த ஓட்டின் வழி வான் நோக்கி கக்க, கக்கியது குளிர்ந்து இறுகி பாறையாய், மலையாய், மலைத்தொடர்களாய்...
இப்படி உருவான மலையொன்றின் செதிள் போல ஒரு துண்டு மட்டும் நீரரித்த வேதனையில் உதிர்ந்து உருண்டு... உருண்டு உருண்டு மலையிறங்கி தரையோடு ஓடடைந்து பள்ளமிறங்கி நீருக்குள் நழுவி 'தொபுக்' என விழுந்த தருணத்தில் அதனுள் இறங்கிய குளிர் சிலிர்ப்பு அதுவரை படிந்திருந்த நினைவுகள் அனைத்தையும் கழுவித்துடைக்க... ஆனந்தமாய் நீரோடு அது வாழும்.
கூழாங்கல்லின் ஆதி கதை இது.
ஒவ்வொரு கூழாங்கல்லும் கோடி வருடங்கள் முன்னான பெரு வெடிப்பில், ஒளி ஜோதியில் பிறந்து பலப்பல இன்னல்கள், பேரிடர்கள் வழி பயணித்து... நம் கைகளில் சேரும்போது அது நமக்கு தருவதென்னவோ குளிர் நீரின் தண்மை மட்டுமே!
இது போன்ற மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் இவர்கள் கடந்து வந்த பாதையின் வலிச்சுவடுகளின் தகிப்பை நம் உள்ளங்கைகளில் குவித்து பொசுக்குவதில்லை.
தண்மை, தண்மை, தண்மை மட்டுமே!
வைர இழைகளால் பின்னப்பட்ட கனவுகளை அணிந்திருக்கும் மனிதர்கள் ஏனோ கூழாங்கற்களை தேடுவதே இல்லை.
நாம் தேடுவோம் வாருங்கள், கூழாங்கற்களை. வைரங்கள் நமக்கு வேண்டாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக