பல வருடங்கள் முன்பு ஒரு BBC Channel programme இல் விலங்குகள் நம்மோடு உரையாடும் மொழி பற்றி விவரித்தார்கள்.
ஒரு குதிரை லாயத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் குதிரையின் அருகில் புதியவர் ஒருவர் செல்கிறார். குதிரை உடனே விலகி நகர்கிறது.
மீண்டும் அவர் அதே செயலை செய்ய, குதிரை மறுபடியும் விலகி நகர்கிறது.
மூன்றாவது முறையும் அப்படியே.
தன் செயலை அத்துடன் நிறுத்திய அந்த மனிதர், சற்றே விலகி நிற்க... குதிரை தானாகவே அவரை மெல்ல நெருங்கி அவரை முகர்ந்து பார்க்கிறது!
இப்பொழுது இவர் நம்மைப்பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்; 'எங்களது உரையாடல் மொழி உங்கள் காதில் விழவில்லை அல்லவா? ஆனாலும் நாங்கள் உரையாடினோம்தானே?!'
மனிதர்கள் தங்களுக்குள்ளே உரையாடுவதற்கு வேண்டுமானால் மொழி தேவையாக இருக்கலாம், ஏனைய உயிர்களோடு அவர்கள் உரையாட மொழி தேவையில்லை.
எங்கள் வீட்டின் பின்புறம் மூன்று ஆண்டுகள் முன்பு நான் ஊன்றிய விதையிலிருந்து ஒரு பப்பாளி மரம் முளைத்தது. ஒரு ஆண்டுக்குள் நல்ல வளர்த்தி. காய்க்கவும் தொடங்கியது.
ஒரு புள்ளியில் அந்த மரம் என் பச்சை பசுமை ஒளிப்படங்களின் இன்றியமையாத வண்ணமுமாகிப்போனது.
பல நாட்கள் பல நேரங்களில் நான் அதன் வண்ணத்தை வியந்தவண்ணம் பலப்பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். மனதில் நன்றிகள் பலவும் தெரிவித்திருக்கிறேன் அம்மரத்திற்கு.
சுவைமிகு பழங்கள், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பிற உயிரிகளுக்கும் போக எஞ்சியது எங்களுக்கு. விதைகள் என்னவோ பெட்டி பெட்டியாய் பொதிந்திருக்கும்!
இந்த விதைகள் கொண்டு தோட்டத்திலும் இதன் சந்ததி வளர்கிறது.
போன மாத இறுதி வரை நல்ல காய்ப்பு.
சென்ற வாரம் அதன் அருகில் வழக்கம்போல அமர்ந்துகொண்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன்.
"நான் போகிறேன்!" என்கிற எண்ணம், எப்படி திடீரென என் மனதில் நுழைந்தது எனத்தெரியவில்லை.
'என்ன இது!?' என்று சிந்திக்கக்கூட இடைவெளியின்றி கண்கள் முதலில் நோக்கியது இம்மரத்தின் உச்சியை.
கொண்டை சிறுத்து, இலைகள் வாடியுதிரும் நிலை.போன
பல மரங்கள் உள்ள அந்த இடத்தில், எது என்னை அந்த மரத்தை மட்டும் பார்க்கத்தூண்டியது என இப்போதுகூட எனக்கு தெரியாது...
மறுநாள் முதல் அந்த மரம் மெல்ல இறக்கத்தொடங்கியது.
என்னால் மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
மரங்கள் பேசுமா?
உங்கள் வாழ்விடத்தில்/அருகில் உள்ள மரம் ஒன்றுடன் உரையாடிப்பாருங்களேன்!
பின் குறிப்பு: என்னோடு மரங்கள் உரையாடுவது இது முதல் முறையல்ல :-)
தொட்டால் சிணுங்கி தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்டுகிறதே.
பதிலளிநீக்கு