எங்கள் வீட்டின் கொல்லைப்புற மதில் சுவர் எங்களுடையது இல்லை.
இப்படித்தான் அதில் தினமும் வந்து தங்கும் மயிலாண் (ஆண் மயில்) சொல்லித்திரிகிறான், சில வருடங்களாய்.
வெகு சிநேகமாய் எங்களை அவன் உலகோடு பிணைத்துக்கொண்டவன். புதிதாய் யாராவது வந்தால் மட்டுமே தாவிப்பறந்து மறைவான். மற்றபடி அவன் நிம்மதியாக இளைப்பாறும் இடம் அது.
லியோவுக்கும் போக்கோவுக்கும் (நான்கு கால் குழந்தைகள்) மதில் சுவர் மேல் அமர்ந்திருக்கும் மயிலாணோடு விளையாடுவது மிகப்பிடித்த பொழுதுபோக்கு. எங்களுக்கும்தான்.
லியோ இங்கு வரும் முன்னே அந்த மதில் மயிலாணோடது ஆகிவிட்டது.
ஒரே ஒரு முறை லியோ மயிலாணின் இறகு பிடிக்க முயல, மயிலாண் லியோவின் முன் நெற்றியில் மெலிதாய் தன் மூக்கினால் கொத்தி.. அந்த இடம் சொட்டையாகி லியோ சொட்டையுடனே சில வாரங்கள் ஓடிக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாய் நினைவில்.
சில தினங்கள் முன்பு வீட்டருகில் எங்கெங்கோ மயில்களின் அகவல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.
லியோவும் போக்கோவும்கூட இயல்புநிலையிலிருந்து விலகி அங்குமிங்கும் அலைவதை கண்டோம். ஆனால் வேலைகள் நிறைந்த நாளென்பதால் மறந்துபோனோம்.
மாலையில் எங்கள் நகரின் தகவல் பகிரும் குழுவில் (Whatsapp group) சில குறுஞ்செய்திகள் வந்தது;
"
செய்தி 1:
இன்று காலை சுமார் 7.30 மணிக்கு ______________தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஒரு பெண் மயில் அமர்ந்ததால் ஷாக் அடித்து இறந்து விட்டது. அதைத்தொடர்ந்து ஒரு ஆண் மயில் பெண் மயிலை விடுவிக்க போராடி அதுவும் ஷாக் அடித்து கீழே விழுந்து இறந்து விட்டது. உடனே நாம் மாநகராட்சி சூப்பர்வைசர் க்கு தகவல் கொடுத்தோம் அவர் தனது மேலதிகாரியின் நம்பரை கொடுத்து பேச சொன்னார்.அந்த மேலதிகாரி ஒரு நம்பரை கொடுத்து கம்ப்ளைன்ட் செய்யுமாறு கூறினார் அந்த நம்பருக்கு கூப்பிட்டால் உங்கள் பகுதி எங்கள் சர்க்கிளில் வராது என்று கூறிவிட்டார். பின்பு ஒரு அதிகாரி Zoo director இடம் பேசுமாறு நம்பர் கொடுத்தார். அவருக்கு அழைத்தால் அவரும் பேசவில்லை. இப்படியே மதியம் வரை நீடித்தது பின்பு நண்பர் __________ அவர்கள் வனத்துறையின் Toll free நம்பருக்கு அழைத்துப் பார்த்தார். அவர்களும் எடுக்கவில்லை பின்பு அவர் ஒரு பழைய துணியை எடுத்து வந்து இரண்டு மயில்களையும் சேர்த்து போர்த்தி வைத்தார்...😔
2: மீண்டும் மாலை சுமார் 3.30 மணி அளவில் வனத்துறையின் நம்பருக்கு கூப்பிட்டோம். அப்போதுதான் அவர்கள் விலாசம் மற்றும் போன் நம்பர் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். பின்பு உடனே வேறு ஒருவர் கூப்பிட்டு Current location share செய்யுமாறு கூறினார். பின்பு அரை மணி நேரம் கழித்து இருவர் வந்து அந்த மயில்களை எடுத்துச் சென்றனர்.
3: காலை 7.30 ஆரம்பித்த போராட்டம் மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது.
4: *இறந்த* மயில்களை அப்புறப்படுத்த வனத்துறையினருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.
அதையும் மீறி பொதுமக்களோ, மாநகராட்சி ஊழியர்களோ அப்புறப்படுத்தினால் அவர்களை கைது செய்து ஜாமினில் வெளியே வர முடியாத அளவிற்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது...😔
"
இந்த செய்திகளையும் படங்களையும் பார்த்தபின்பு திடீரென என் மனம் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது; 'மயிலாண பாத்தியா இன்னைக்கு?'
காலையில் மனதை நெருடிய சில நிகழ்வுகள் மறுபடி நினைவில் வந்து போயின.
"அப்டீல்லாம் இருக்காது!" என ஆசுவாசப்படுத்திக்கொண்டு அன்றிரவு உறங்கிப்போனேன்.
அதன் பின் வந்த சில நாட்களுக்கு மயிலாண் தட்டுப்படவில்லை...
"கண்டா வரச்சொல்லுங்க, அவன கையோட கூட்டியாருங்க" என என் கண்ணில் கண்ட உயிர்களிடமெல்லாம் (மனிதர் தவிர) மானசீகமாய் குறுஞ்செய்தி அனுப்பத்தொடங்கினேன்.
நான்கு நாட்களாகியும் காணவில்லை. மென்சோகம் மனதில் படரத்தொடங்கி, 'ஒரு வேளை அந்த ஆண் மயில் அவனாக இருக்குமோ?!' என்ற கவலையும் சேர்ந்துகொள்ள, நினைவுகளின் கனம் கூடிக்கொண்டே போனது.
இன்று காலை லியோவும் போக்கோவும் வெயிலில் உரப்பம் போட்டு உறங்கிக்கொண்டிருந்த வேளையில் நான் கையில் காபி கோப்பையோடு வழக்கமாய் மயிலாண் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி தன்னிச்சையாக நகர, அங்கே அவன் மீண்டும் அமர்ந்திருந்தான்!
"வந்துட்டேன்னு சொல்லு!" என மனம் ஆர்ப்பரிக்க... மெல்ல அணுகி, 'பயந்தே போய்ட்டேன்டா!' என்றேன்.
என் குரல் கேட்டு என்னுடன் குதித்தோடி விளையாட வந்த லியோவும் போக்கோவும், மயிலாணைக்கண்டு என்னை மறந்து உற்சாகத்துள்ளல் போட்டு மதில் சுவர் மேல் தாவ, மயிலாண் வழக்கம் போலவே நகராமல் சிநேகத்தோடு கழுத்து வளைத்து அவர்களை பார்க்கத்தொடங்கினான்.
"இனிது இனிது வாழ்வு இனிது" என மெல்ல நான் வீட்டுக்குள் நுழையும்போது மனது அவசரமாக இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பியது; "அவன் கண்ணுல ஒரு சோகம் இருக்கு கவனிச்சியா?!'
மனிதர்கள் மட்டுமே dramatic ஆனவர்கள் என்று நினைத்துக்கொண்டு புன்னகையோடு நகர்ந்தேன்.
(நரிகள் இருந்தவரை மயில்கள் பெருக்கம் கட்டுக்குள்தான் இருந்தது. நரிகள், மயில்களின் முட்டைகளை கவர்ந்து உண்டு 'குடும்பக்கட்டுப்பாடு செய்யும்' உயிர்க்கண்ணிகள். நரிகளை நாம் வேட்டையாடி அழித்தபின்பு இன்று மயில்கள் ஏராளமாய் பெருகி, விளை நிலங்களில் உணவு பொறுக்கி சேதம் செய்து, பாதிக்கப்பட்ட சில ஈரோட்டு விவசாயிகள் அவற்றை விஷம் வைத்து கொன்று, கைதாகி சிறை சென்று...என சிக்கலின் நுனியை " கண்டுகொள்ளாமல்" விட்டு (நரிகளை பெருக்குதலே எளிதான தீர்வு) சிக்கலை இன்னும் இன்னும் நாமே பெரிதாக்கிக்கொண்டிருப்பது மயிலாணுக்கு தெரியாது!)
சூப்பர்...
பதிலளிநீக்குலியோவும் போக்கோ என்றால் என்ன என்று எங்களுக்கு விளங்கவில்லை.
வளர்ப்பு நாய்க்குட்டிகள் :-)
நீக்கு