"You stay, I go" was my last words.
"Ishi என்பது உனது பெயர்" என்றார் அந்த யாங்க்கீ (வெள்ளைக்காரர்).
மௌனமாய் தலையசைத்தேன்.
பெயரில் என்ன இருக்கு? இதை இவருக்கு நான் எப்படி புரிய வைப்பேன்?
என்னைச்சுற்றி எல்லோரும் யாங்க்கிகள். என் நிறத்தை ஒத்த, என் உருவத்தை ஒட்டிய யாரையும் நான் நெடுநாட்களாக கண்டதில்லை.
கானகங்களின் பாதுகாப்பில் நான் வாழ்ந்த காலங்கள் மீண்டும் வருமா?
அன்றொரு நாள், என் எஞ்சிய உறவுகள் மூவருடன் நான் அமைதியாய் உணவருந்த அமர்ந்திருந்தபோது திடீரென எங்களை யாங்க்கிகள் பலர் சுற்றி வளைக்க, நாங்கள் விலகி ஓடினோம், உடல் நலம் குன்றியிருந்த எம் மக்கள் ஒருவரை வேறு வழியின்றி விட்டு விட்டு.
ஆளுக்கொரு திசையாய் பிரிந்து இருளிலும் உறை பனியிலும் அடர்காடுகளில் திரிந்து உயிர் வளர்த்தோம் அதன் பின்னர்.
இதோ இன்று காலையில் உணவு தேடி நான் இந்த கானக எல்லை வீட்டின் குதிரை லாயம் அருகே ஒளிந்திருந்தேன் ஏதேனும் உணவு கிடைக்கும் என.
பிடிபட்டேன்.
தவறு என்ன செய்தேன் நான்?
தெரியவில்லை.
தவறு என்ன செய்தோம் நாங்கள்? பல நூறு ஆண்டுகளாய் எங்கள் மண்ணின் மடியில், மடிக்கு சற்றும் பாரமில்லாது வாழ்ந்த மேன்மையான குடியினர் நாங்கள்.
நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கடல் வழியே அந்த மனிதன் எங்கள் நிலத்தில் கால் பதிக்கும் வரை. அவன் பெயர் கொலம்பஸ்.
அவனும் அவன் வழி வந்தவர்களும் அன்று விரட்டத்தொடங்கினர் எங்களை.
அன்று ஓடத்தொடங்கிய எம் மூத்தோர் ஓடிக்களைத்து, மீண்டும் ஓடி மாண்டு, இனம் சிறுத்து, இதோ இன்று என் இனத்தின் கடைசி மனிதன், நான், நானும் பிடிபட்டேன்.
நானூறு ஆண்டுகளாய் என் முன்னோர்கள் கேட்ட கேள்வி, காற்றில் அலைந்துகொண்டிருந்த கேள்வி, இன்று நானும் கேட்கும் கேள்வி, 'என்ன தவறு செய்தேன் நான்?'.
நூற்றுக்கணக்கான யாங்க்கிகள் சூழ்ந்து என்னை வேடிக்கை பார்க்கத்தொடங்கினர். கிண்டலும் கேளியுமாய், வியப்பும் திகைப்புமாய் அவர்கள் என்னை நொடிகூட இடைவெளியின்றி வேடிக்கை பார்க்க, சீருடை அணிந்த சில யாங்ககிகள் என்னை அங்கிருந்து எங்கெங்கோ அழைத்துச்சென்றனர்.
இதோ இப்போது நான் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்த இடம், கற்களால் வேயப்பட்ட பெரிய கட்டிடம். கனிந்த முகங்கள் கொண்ட யாங்க்கிகள் சிலர் என்னுடன் உரையாடத்தொடங்கினர், மொழி இடைவெளி தாண்டி.
அவர்கள், மனிதர்களைப்பற்றியும் அவர்களது வரலாறு பற்றியும் படிக்கும் மனிதர்களாம். என்னைப்போன்றதொரு மனிதனை இதுவரை கண்டதே இல்லையாம்.
நான் இப்போது தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு அரும்பொருள் காட்சியகமாம். இங்கு இறந்த பொருட்கள் மட்டுமே உயிருள்ளவர்கள் பார்த்து மகிழவும், பார்த்து கற்கவும் காட்சியில் வைக்கப்படுமாம். இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒரே உயிருள்ள காட்சிப்பொருள் நான் மட்டும்தானாம். என் பெயர் என்ன என்று தெரிந்தால் பெயர் சொல்லி அழைக்க உதவியாக இருக்குமாம்.
நான் சொன்னேன், "எனக்கு பெயர் இல்லை. ஏனெனில் என்னை பெயர் சொல்லி அழைக்க என் மக்கள் எவரும் இல்லை".
எனது பண்பாட்டில் பெயர் என்பது மற்றவர்கள் நம்மை அழைப்பதற்கு மட்டும்தானே தவிர ஒருபோதும் நாமே சொல்லிக்கொள்ள அல்ல.
அந்த யாங்க்கிக்கு இது சுத்தமாக புரியவே இல்லை. வெகுநேரம் வியப்பினால் உறைந்துபோயிருந்தவர், வியப்பு தெளிந்தபின் மெல்ல சொன்னார், 'எங்கள் பண்பாட்டில் பெயரே எல்லாவற்றிற்கும் ஆதி மூலம். பெயர் கதவுகளை திறக்கும், கதவுகளை மூடும். இங்கு பெயரின்றி அசையாது எதுவும். எனவே உனக்கும் ஒரு பெயர் தேவை. நான் உனக்கு Ishi என்று பெயர் இடுகிறேன்'.
(When asked his name, he said: "I have none, because there were no people to name me," meaning that there was no other Yahi to speak his name on his behalf.)
நான் யார்? எங்கிருந்து வருகிறேன்? என் வரலாறு, புவி இயல், பண்பாடு அனைத்தையும் அறிய ஆர்வமாக உள்ளார்களாம். அவர் பேசிக்கொண்டே போனார்.
"அடப்பாவிகளா! நானூறு ஆண்டுகள் முன்பு உங்களது முன்னோர்கள் எங்களை முதல் முதலாய் சந்தித்தபோது இந்தக்கேள்விகளை கேட்டிருந்தால் கொண்டாடி மகிழ்ந்து பகிர்ந்திருப்பார்களே? கண்கூடாய் கண்டு குறிப்புகள் எடுத்திருக்கலாமே?!"
அவர் 'தவறு செய்ததை உணர்ந்தவரின் விழிகள் போன்ற' வலி நிறைந்த விழிகள் வழியே என்னை பார்த்தார். மெல்ல தலை குனிந்து மன்னிப்பு வேண்டினார்.
ஐந்து ஆண்டுகளில் என்னால் பகிர முடிந்தவை அனைத்தும் பகிர்ந்தேன்.
இயல்பிலேயே நல்ல உடல் வளத்துடன் வாழ்ந்த எங்கள் உலகில் தொற்றுக்கள் அதிகமில்லை. ஆனால் நான் இப்போது வந்து சேர்ந்த உலக தொற்றுக்களின் கூடாரம்! விரைவிலேயே அவற்றுள் ஒன்று என்னை தொற்றலாம். என் விடையறியாத கேள்வி, விடை காணாமலே மீண்டும் காற்றில் அலையலாம். அதற்குள் என்னை சந்தித்ததற்கும் என் கதையை கேட்டதற்கும் நன்றிகள் பல!
Ishi, as named by an anthropologist, died because of tuberculosis shortly after becoming an exhibit (The Last Wild Indian!) in a civilized society, in the year 1916 (California, USA).
"You stay. I go" was apparently his last spoken words.
Though his tribe treated human body as sacred in life and in death, he was cut open amidst protests by those intellects he won over during his stay, his brain removed and preserved in Smithsonian institute to this day, for us the living to "see".
Darn, why wasn't I taught about these as part of world history I learned in institutions meant for teaching them?????
(Top image was the day he was taken in as 'captive')
மனதைத் தொடும் பதிவு..
பதிலளிநீக்கு