முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் பெயர் சுதந்திரம்


என் பெயர் சுதந்திரம்.

வயது - 50 இருக்கலாம். பிறந்த வருடம், தேதி... நினைவில்லை.

எனக்கு வீடு இல்லை, உறவு இல்லை.

தொழில் : இன்றைய தேதியில் இந்த நாட்டில் உன்னதமான தொழில். குப்பை பொறுக்குவது.


கண்ட இடமெல்லாம் குப்பை கொட்ட கோடிக்கணக்கானோர் வாழும் நாட்டில் எனக்கு குப்பைக்கு பஞ்சமில்லை.

அதிகாலை கொசுக்கடியில் / குளிரில் / புழுக்கத்தில் எழுந்து, சாலை ஓரங்களில் 'ஒதுங்கி'... எழுந்து தோளில் ஒரு பெரிய கித்தான் சாக்கோடு எனது பயணம் தொடங்கும், வயிறு வளர்க்க.

சாலை ஓரங்களெங்கும் குப்பைகள் குவிந்து என்னை வரவேற்கும். பொறுமையாய் ஒரு குச்சி வைத்து அவற்றை கிளறி ப்ளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள், உலோக கழிவுகள், மரத்துண்டுகள், அபூர்வமாய் கிடைக்கும் சில விலை உயர்ந்த பொருட்கள் என நிதானமாய் தேடி எடுத்து எனது சாக்கில் நிரப்பிக்கொள்வேன்.

இதுவரை நான் குடிக்க தண்ணீர் பாட்டில் சுமப்இதனால்லை. உணவுக்கு என்றோ டீ காஃபிக்கென்றோ, நொறுக்குத்தீனிக்கென்றோ வேலையில் இடைவேளை எடுத்ததில்லை.

இரவு வரும் பகலும் வரும் இரண்டும் ஒன்றுதான் என பருவநிலை மாற்றங்களின் ஊடாக நான் பொறுக்கியவற்றை சேர்த்து சேர்த்து ஒவ்வொரு முறை சாக்கு நிரம்பும்போதும் எனக்கு தெரிந்த ஒரு 'பழைய பொருட்கள் வாங்கும் கடை'யில் சென்று இறக்கி வைப்பேன்.

குப்பைகளின் மதிப்பு பொறுத்து ஐம்பதோ நூறோ கிடைக்கும்.

ஒரு நாளில் சில முறை சாக்கு நிரம்பும்.

அந்தி சாய இருள் சேர, ஏதாவது ஒரு பூட்டிய கடையின் முன் தளத்தில் இராத்தங்கல்.

நாளின் கடுமை, கிளறிய குப்பைகளின் அடி வயிற்று நாற்றம் ஊறிய நாசி, கடுமையான அழுக்கில் நுழைந்தெழும் கைகள், நாளின் தனிமை, இரவின் தனிமை... கைக்கு வந்த சில நூறும் சாராயமாய் மாறி வயிறு நிரப்பும், தனிமையை துரத்தும். பல நேரங்களில் என் வியாதிகளுக்கு மருந்தும் அதுவே.

இடுப்பில் கட்டியதை உருவி உடலைப்போர்த்தி, இந்த சுதந்திர மண்ணில் நம்பிக்கை வைத்து ஆழ்ந்த உரக்கம், கொசு, எலி, நாய்கள், பாம்புகள், என உயிரெடுக்க பல படைகள் சூழினும்.


முதல் முறை போலீஸ் லத்தியில் அடி வாங்கி அரைகுறை போதையில் மலங்க விழித்து, சந்தேக கேசில் காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, என் முடை நாற்றம் தாங்க முடியாமல் 'விடுதலை' ஆகியிருக்கிறேன் பலமுறை.

எப்போதாவது பல வண்ணங்களில் கட்சிக்கொடிகளும், சுவரொட்டிகளும் கிடைத்தால் அதன் பின்னான தினங்களின் இரவுகளில் எனக்கு அவை தலையணை போர்வையாக மாறும் உன்னதம் நிகழும்.

மற்றபடி நான் இதோ எனது இன்றைய 'வேலையில்' மும்முரமாக இருக்கிறேன்.


"இது என்ன புதிதாய்?, கயிற்றில் கட்டிய பெட்டி?" என்கிறீர்களா? சொல்கிறேன்!

சென்ற ஆண்டு மார்ச் மாதம் வரை என்னைச்சுற்றியிருந்த பரபரப்பும் குப்பை பொதிகளும் திடீரென ஒரு நாளில் காணாமல் போனது.

சில வாரங்கள் என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை.

நான் உறங்கும் சாலையில் எல்லா கடைகளும் மூடப்பட்டன (அவற்றில் பல இன்றுவரை திறந்தபாடில்லை).

 'வெளியில் செல்லாதீர்கள்! சோப்பு போட்டு கை கழுவுங்கள், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்! தனிமையில் இருங்கள்!' என வாகனங்களில் மைக்குகள் கட்டி அலறிய வண்ணம் சீருடை அணிந்த சிலர் வலம் வந்தனர்.

இவை எதுவும் எனக்கில்லை என உறங்கி எழுந்து எனது வேலையை இன்று வரை நிறுத்தாமல் செய்கிறேன்.

என்ன மாயமோ தெரியவில்லை, குறைந்த குப்பைகள் திடீரென வன்மத்தோடு பெருகி... ஏராளமான அட்டைப்பெட்டிகள், ப்ளாஸ்டிக் பைகள், வீணான உணவுப்பைகள், முக கவசங்கள், மெத்தைகள் என சுமக்க முடியாத அளவு பெருஞ்சுமை எனது சாக்குப்பையில் சுமந்து... இன்று வரை இந்தக்குவிப்பு எனக்கு இன்னும் ஒரு நூறு ரூபாய் கூடுதலாய் கிடைக்க வைக்கிறது. சாக்கு நிரம்பியதும், இதோ, நீங்கள் கேள்வி கட்டி இந்த அட்டைப்பெட்டியிலும் நிரப்பி, கயிறு கட்டி என்னோடே இழுத்துச்செல்கிறேன் கடையில் கொடுக்க. சமீப காலங்களில் ஏராளமான சாராய பாட்டில்கள் குப்பை மேடுகளை நிறைத்திருக்கின்றன. அந்த பாட்டில்களை வீசுவோர் சற்றே வேகம் குறைத்து போட்டுச்சென்றால் சேதாரம் குறையும், எனக்கு வருமானம் கூடும்.

ஆனாலும் இதனால் பெரிய மாற்றம் என்னவோ எதுவும் நிகழவில்லை. சென்ற வருடம் நூறு ரூபாயில் என்னால் வாங்க முடிந்தவை எல்லாம் இந்த வருடம் இருநூறு கொடுத்தல்தான் கிடைக்கிறது.

.................


14 கோடி ரூபாய் மருத்துவ செலவு, ஒரு ஏழைக்குழந்தையின் உயிர் காக்க.

சமூக ஊடகங்களில் பல நல்ல உள்ளங்கள் இந்த தொகையை புரட்ட பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். ஒன்றரை கோடிப்பேர் ஆளுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட இலக்கை அடைந்துவிடலாம் என முயற்சி நடக்கிறது.

உயிர் காக்கும் மருந்துகள், இவ்வளவு விலையா? 

குறைக்க வழியே இல்லையா?

அரசு ஏற்காதா?

இந்த ஏழைக்குழந்தை போல, இன்னும் பல வடிவங்களில் நம் சமுதாய விளிம்புகளில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி எத்தனை எத்தனை மக்கள் உயிர் வாழ போராடிக்கொண்டிருக்கிறார்கள்? தினம் தினம் மருத்துவ செலவுக்காக உதவி வேண்டி எவ்வளவு கோரிக்கைகள்?

இன்க்ளூசிவிடி பேசும் அரசுகளால் இவர்களை நம் சமுதாய safety net இல் இன்க்ளூட் செய்ய முடியாதா?

"அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அரசு விழாக்கள் எதுவும் கிடையாது / அல்லது எளிமையாய் செய்வோம். அந்த விழாக்களுக்கு ஆகியிருக்கக்கூடிய செலவை சேமித்து நம் வருங்கால விளிம்பு நிலை மனிதர்களையும், குப்பைப்பெட்டி இழுத்து நம் தேசத்தை சுத்தம் செய்யும் "சுதந்திர"த்தையும் காப்போம்!" என உறுதி மொழி எடுத்து, செயல்படுத்த அரசு முன்வருமா?

பொது மக்களாகிய நாங்கள், வருமான வரி, மொபைல் பில், ஓடிடி, மருந்து, உணவு மற்றும் இதர செலவுகள் போக எஞ்சியதில் சில பத்து ரூபாய்களை சுதந்திரம் மேன்மையுறுவதற்காக தருவதற்கு தயாராக இருக்கிறோம், இருந்துகொண்டிருக்கிறோம்.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப்பயிரை? கண்ணீராலும் உதிரத்தாலும் காத்தோம். கருகத்திருவுளமோ?

இனியொரு விதி செய்வோம் இதை எந்த நாளும் காப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்