ஆஜானுபாகுவான ஆள். பரம சாது. இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே பகுதியில் வசிக்கிறார். வேலை எதுவும் இல்லை அவருக்கு. வேலை தருவதற்கு யாரும் தயாரில்லை.
பசித்தால் காலாற நடந்து, கிடைத்ததை உண்டு வாழ்கிறார். அடுத்த நாளுக்கு, அடுத்த வாரத்துக்கு என சேமிக்கும் பழக்கமெல்லாம் இவரது பரம்பரைக்கே கிடையாது.
இவரது போக்கு சரியில்லை என ஒரு சாரார் இவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளார்கள்.
'பைசா எதுவும் தராமலே சாப்பிட்டுவிட்டு செல்கிறார்' என்பது இவர் மீது சுற்றியுள்ள மக்கள் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு. அவர்களும்கூட 'மற்றபடி ஈ, எறும்புக்கு கூட இவர் துன்பம் தந்ததில்லை' என சர்டிபிகேட் தருகிறார்கள்.
ஒரு பன்னாட்டு தொண்டு நிறுவனம் தந்த தொழில்நுட்ப உதவியோடு இவரது நடமாட்டத்தை கண்காணிக்க சிலர் முடிவு செய்து இவரது கழுத்தில் கண்காணிப்பு பட்டை ஒன்றை பொருத்துவதற்கு அவருக்கு தெரியாமலே தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.
பாகுபலி என்பது இவரது பெயர். விநாயகமும் சின்னத்தம்பியும் போலதான் இவர் என சிலரும், 'இல்லைங்க, இவரு வேற மாதிரி. தொந்தரவில்லாத ஆளு' என சிலரும் பேசிக்கொண்டே கண்காணிப்பு பட்டை பொருத்த மேட்டுப்பாளையத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் காத்திருக்கின்றனர்.
'இவரை சமவெளிக்கு வரவழைப்போம். மயக்க ஊசி போடுவோம். கழுத்தில பட்டைய மாட்டிடுவோம். அப்புறம் இவர் எங்கெல்லாம் போறாருன்னு சில வருசம் கண்காணிப்போம். அதன் அடிப்படையில் வழித்தட வரைபடம் ஒன்றை வெளியிடுவோம்' என்பதே அவர்களது திட்ட இலக்கு.
பாகுபலிக்கு இவை எதுவும் தெரியாது. "பசித்தால் வயிறு நிரம்ப உண்" என நம் எல்லோரைப்போலவே இவரிடமும் இயற்கை கட்டளையிட்டிருக்கிறது.
ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் இவரது "ஊரில்" நம் போன்றோர் நடத்தும் உணவுக்கூடங்கள் கிடையாது, வணிகம் கிடையாது. எனவே பணமும் கிடையாது.
தமிழக வனப்பரப்பில் Man Animal Conflict என்பது கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக செய்திகளில் இடம் பெறும் நிகழ்வு.
கானக எல்லைகளை சுறுக்கிக்கொண்டே வணிக விளைபொருள் உற்பத்தியை பெருக்கிக்கொண்டே நாம் போய்க்கொண்டிருக்கிறோமல்லவா, அதனால் வந்த வினை இது. சமீப ஆண்டுகளில் கேளிக்கை விடுதிகளும் வழிபாட்டு இடங்களும் இந்த கானக எல்லைகளில் வேரூன்றி கிளை பரப்பி இரவுகள் முழுவதும் வெளிச்சமும் பேரிரைச்சலுமாய் காட்டுவாசிகளின் இரவுகளை பொத்தலிட, இப்பேர்ப்பட்ட குற்றங்களை செய்பவர்களை பிடித்து அவர்களது கழுத்துகளில் கண்காணிப்பு பட்டைகளை பொருத்த காட்டுவாசிகளுக்கு எந்த பன்னாட்டு தொண்டு நிறுவனமும் அங்கு இல்லை!
அப்படி இருந்திருந்தால் நம்மில் நிறைய பேருக்கு கழுத்துகளில் கண்காணிப்பு பட்டைகள் நிரந்தரமாய் குடியேறியிருக்கும்!
பாகுபலி, பெயருக்கு ஏற்றது போல் நல்ல பலசாலி. அதனால் இவரை தங்களது ப்ராஜக்டுக்குள் கொண்டுவர கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்கிற மூன்று குண்டர்களை வனத்துறை பணியில் அமர்த்தி இருக்கிறதாம்!
கானக எல்லைகள் என வரையறுக்கப்பட்ட இடங்கள் ஏன் குறுக்கப்படுகின்றன?
அங்கு ஏன் யானைகளின் பசியை போக்கக்கூடிய தென்னை, வாழை, பாக்கு, பனை இன்னபிற பணப்பயிர்களும் இன்று வரை பயிரப்படுகின்றன? இப்பயிர்களை காக்க மின்வேலிகள் அமைக்க அனுமதிக்கும் அரசுகள் ஏன் 'தவிர்க்கப்படவேண்டிய பயிர்களை'யும் அங்கு மக்கள் பயிரிட அனுமதிக்கின்றன?
பாகுபலி மட்டும் கேரளாவின் மது என்கிற ஆதிவாசி இளைஞனைப்போல உருவத்திலும் ஆற்றலிலும் சிறுத்திருந்தால், பசிக்காக உணவு திருடிய மதுவை கட்டி வைத்து அடித்துக்கொன்றது போலவே பாகுபலியையும் 'செய்திருப்பார்கள்'.
ஆனால் முடியாதே!
(நாளை மற்றொரு யானை, மற்றொரு கண்காணிப்பு பட்டை என நம் கானக எல்லைகள் சுருங்கிச்செல்வதும் தொடரத்தான் போகிறது...)
கருத்துகள்
கருத்துரையிடுக