'நீங்க என்ன சாதி?'
"சாதி இரண்டொழிய வேறில்லை பாப்பான்னு பாரதி சொல்லியிருக்காருங்க..."
'அந்தாளுக்கு என்ன தெரியும் நம்மளோட பரம்பர பெரும?... சொல்லுங்க, நீங்க எந்த சாதி?'
இந்த வினா, நான் என்ன சாதி என்கிற வினா, ஒரு மருத்துவமனை சிகிச்சைக்கான ஒரு படிவத்தில் இருந்ததையும், அதை நிரப்பவேண்டுமென்று மருத்துவமனை ஊழியர் வற்புறுத்தியதையும் வேதனையோடு பகிர்ந்தார் நண்பர் ஒருவர்.
நான் என் இளமையை நிறைத்த காலங்கள் எல்லாம் நம் தமிழ்நாட்டின் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மட்டுமே. அங்கு எல்லாம் சாதி முஷ்டி முறுக்கல்கள் நான் பார்த்ததில்லை, ஒரு முறை கூட.
எப்போதாவது செய்தித்தாள்களில் பதியப்பட்ட 'முதுகுளத்தூர் துப்பாக்கி சூடு' போன்ற சம்பவங்கள் இன்றுவரை நினைவில் இருப்பது இதனால்தான் (i.e. exception events)
கல்லூரி கல்விக்காக பெருநகருக்கு வந்து அதன் பின் இன்னும் பெரிய நகரில் வேலைக்கு வந்து... வணிக ஓட்டம் பிடரியை உந்தித்தள்ள, ஓடத்தொடங்கும்போதும்கூட சாதி பற்றிய உரையாடல்கள் மேம்போக்காகத்தான் இருந்தன.
ஒரு சராசரி மனிதனாக என் வாழ்வில் முதன்முதலாக பார்ப்பனீயம் is Bad என mainstream பேசுபொருள் கேட்டது 1990களி்ல்தான். பார்ப்பனீயம் Bad என்று சொன்னவர்களே, 'சக்கிலியனெல்லாம் இன்னைக்கு ஆட்டம் போடுறான்' என்று அங்கலாய்த்ததும் இதன் பிற்பாடுதான்.
அந்த காலகட்டம்வரை, 'பல நூறு ஆண்டுகளாய் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு இப்போது நாம் கொடுக்கும் விலை' என்பதாகவே நலிவடைந்த சமூகத்தினரின் சலுகைகள் அணுகப்பட்டன. மறுபுறம், பார்ப்பண துவேஷ அரசியலை திராவிடம் வளர்த்தபோதும் பார்ப்பனர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது சமூகத்தில்.
Economic liberalization of 90s changed everything.
பெருவணிகம் என்ற புதிய மதம் உள்ளே வந்து கடை விரிக்க, அதுவரை சமூக அடுக்குகளில் பல தட்டுக்களுக்குள் சிந்திக்காமலே முடங்கியிருந்த 'அனைவருமே' இந்த மதத்தில் முண்டியடித்து சேர வரிசைகட்டி நிற்கையில் முன்னால் நிற்பவரின், பின்னால் நெருக்குபவரின், பழைய 'தட்டு' உரசலாச்சி. அரசியலும் அதை ஊதி ஊதி பெரிதாக்க, இன்று இந்த நிலைமை.
இந்த சமூக வசதி சார்ந்த தட்டுகளெல்லாம் நம் சமூகத்தினால் வார்க்கப்படும் முன்னரும், நாமெல்லாம் அவற்றுக்கு வாழ்க்கைப்படும் முன்னரும் இங்கு வாழ்வு இருந்தது. அது உழவின் பின் கைகூப்பி சென்றது; சாதி உட்பிரிவுகள் பேதமின்றி.
உழுபவனுக்கு செருப்பு தைக்க, தளவாடம் செய்ய, ஆடைநெய்ய, நல்ல நாள் கெட்ட நாள் பார்த்து சொல்ல, அணிகலன் செய்ய, துணி வெளுக்க, முடி மழிக்க, மருந்து தர, வாகனம் செய்ய, ஈமக்கிரியை செய்ய என ஏனைய தட்டுகள் எல்லாம் தத்தம் வேலையை செவ்வனே செய்ய, உழவின் விளைச்சல் இந்த தட்டுகளை நிறைவாக நிரப்பியது. உழவனின் இல்ல நிகழ்வுகள் எதுவும் இந்த தட்டுகளின் பங்களிப்பின்றி நிகழ்ந்ததில்லை. அந்த காலகட்டத்தில் இன்றைய வன்முறை பேதம் இல்லவே இல்லை!
அந்த உழவர்கள் இன்று மற்ற அனைவரையுமே சாபமிட்டு இறைஞ்சினாலும், போராட்டங்கள் பல நடத்தினாலும் 'வணிக' மதத்திற்கு மாறிய நம் காதுகளில் விழுவதே இல்லை...
மனுநீதி தந்த வர்ண தட்டுகளுக்கு முன்பே இங்கு இருந்த வாழ்வியலில் உழவன் உச்சாணித்தட்டாக இருந்தான்.
ஆங்கிலேய வணிகம் இங்கு கப்பல் வழி தரையிறங்கும் வரை இந்த தட்டு மட்டுமே இங்கு வாழ்வு வளர்த்தது.
அவர்களின் அடக்கி ஆளும், உறிஞ்சித்தின்னும் பேராசைக்கு துணைபோகும் விதமாக மக்கள்தொகை கணக்குப்பதிவு (18ஆம் நூற்றாண்டு) நடக்கையில், அவர்களுக்கு மனுநீதி வழி உதவிய நம் மேல் வர்க்க மக்களின் வழிகாட்டுதல்படி, மனு தந்த இந்த நான்கு வர்ண தட்டுகள் அனைத்தும் ஒற்றை மதத்திற்குள் அடைக்கப்பட்டு, வர்ணம் சார்ந்த உயர்வு தாழ்வு வரையறைகள், மேல் வர்க்க உதவியாளர்களால் இன்னும் கடுமையாக்கப்பட்டு... திசைமாறிப்போனது நம் வாழ்வு.
"உயர்சாதி ஆணவம்",
"தாழ்த்தப்பட்டோர் போர்வையில் சலுகை உறிஞ்சிகள்",
ஆணவத்திருமணங்கள் / ஆணவக்கொலைகள்
என சாதிக்கொடுமை பற்றியும், சாதீய அடக்குமுறை பற்றியும் நெற்றி சுருக்கி கழுத்து நரம்புபுடைக்க ஆவேசப்படும் நாம் நம் உழவர்களை என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
தெரியாமல்தான் கேட்கிறேன்? வணிகத்துக்கு ஒரு தட்டு ஒதுக்கிய மனு நீதி உழவனுக்கு என்ன செய்திருக்கிறது?
நான்கு வர்ண தட்டுகளுக்கும் முதன்மையான, மேலான தட்டாக இருந்த உழவன், நான்கு தட்டுகளுக்கும் கீழான தட்டாக தாழ்ந்துபோனது வளமான வாழ்வினால் அவன் எடை கூடிப்போனதனாலா அல்லது அவன் சுமக்கும் கடன் சுமையினாலா?
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என போற்றிய சமூகத்தில் இன்று சாதிக்கொரு கட்சி, வீதிக்கொரு சாமி, ஆனால் என் சாமி உன் சாமி அல்ல என்பதாய் இந்த நான்கு தட்டுகளின் கூக்குரலில் காது செவிடாகி, மோதல்களில் நெளிந்து நசுங்கி... இன்று பசி மயக்கத்தில் தள்ளாடும் நம் உழவர்களை எங்காவது 'கண்டா வரச்சொல்லுங்க', கையோட கூட்டியாங்க, அவர்களிடம் உரக்க சொல்லுங்க, 'நாங்கள்லாம் மேல்சாதி, நீ மட்டும்தான் கீழ்சாதி'.
சாதி இரண்டொழிய என்று சொன்னவனின் வழி வந்தவர்கள் இன்றும் இரண்டு சாதிகளாக மட்டுமே பிரிந்து நிற்கிறோம் உலகளவில்; இருப்பவர் சாதி, இல்லாதவர் சாதி.
இங்கு சாதித்தாவல்கள் 'பணம்' என்கிற கருவியின் தயவால் மட்டுமே நிகழும்.
மகாமாரி (கொரோனா) காலம் நம்மை சற்றே புரட்டிப்போட்டு, வேளாண்மை பற்றிய அறச்சிந்தனைகளை எழுப்பினாலும், நாம் அனைவரும் கொரோனோ + விவசாய சிந்தனை தடுப்பூசிகளை குத்திக்கொண்டு மீண்டும் பழைய ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்...
இப்போதைய நம் கவலை எல்லாம் உயர்ந்துகொண்டே போகும் விலைவாசியை பற்றியும், உணவுத்தட்டுப்பாடு பற்றியும்தான்.
The spotlight, is on us, now. என்ன செய்யப்போகிறோம்?
காலகாலமாய் கடன்பட்டேனும் உணவு பெருக்கித்தந்துகொண்டிருக்கும் நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட எதுவும் செய்யாமலேயே, 'இன்னும் துரிதமாய், இன்னும் மிகுதியாய்' என அவர்களை விரட்டி வேலை வாங்கப்போகிறோமா?
அல்லது
நாங்களே ஆலைகளில் உணவு 'தயாரிப்போம்', நீங்கள் அனைவரும் இங்குள்ள எந்திரங்களை இயக்கவும், ஆலைகளையும் எங்கள் தனி மனித வளங்களையும் காவல் காக்கவும் மட்டுமே வாருங்கள் என அவர்களை கூலிப்பணியில் அமர்த்தப்போகிறோமா?
அல்லது ...
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக