அணில்குஞ்சின் வெந்து கருகும் உடல்வாசம்
உச்சிக்கொழுந்து சாம்பலாகி காற்றில் அலையும் அகார்ன் மரத்தின் எஞ்சிய கார்பன்
உலகின் மாசையெல்லாம் உறிஞ்சி உள்ளிழுத்து பச்சையாய் பசுமையாய் பூக்களாய் காய்களாய் கனிகளாய் குடில்களாய் மாற்றித்தந்த காட்டுப்பேராற்றல் வெந்து தணியவும் சிறு பொறியொன்று போதும்.
ஒரு சுள்ளி வெந்தாலும் ஓராயிரம் கோடி உயிரினங்கள் வேக்காடாகி மடிந்தாலும் பொறிக்கென்ன போச்சி?
மரங்கள் தானே உரசி தானே கொள்ளிவைத்துக்'கொல்வது' பேராற்றல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவாம்.
பேராற்றல் தந்த வாலை அறுத்துக்கொண்டு தரையிறங்கிய வானரக்கூட்டமொன்று இந்த கானகங்களுள் பொறிகளை வகைதொகையில்லாமல் பதுக்கிவைப்பது எந்த வகை?
ஆலைகள் செய்யவும் பாமாயில் செய்யவும் டிம்பர் பெருக்கவும் சாலைகள் வடிக்கவும் என இவை வைக்கும் பொறிகளெல்லாம் தன் தலையில் தானே கொள்ளி வகை; வைப்பது எங்காயினும் எரியப்போவதென்னவோ நம் நுரையீரல்தான்!
ஆனால் எரியும் வழியென்னவோ எங்கோ வெகு தொலைவில்தானே என நாம் வேண்டுமானால் சொல்லி சமாளிக்கலாம். ஆசியாவில் ஒரு வண்ணத்தியின் சிறகசைப்பு சில நாட்களில் தென்னமெரிக்காவில் புயல்மழை வரவைக்குமாம். நம் மூளைத்திறனின் உன்மத்த எல்லைக்கு வெளியே நமக்கு புலப்படாது விரவியிருக்கும் இயற்கையின் தொடர்கண்ணிகள் நாளை நம் நுரையீரலுக்கு கொண்டுவந்து தரும் ஆக்சிஜனில் சென்ற வாரம் இந்தோனேசிய காடுகளில் பாமாயில் ப்ளான்டேஷனுக்காய் நம் கூட்டம் கொளுத்திய தீயில் வெந்துபோன ஒராங்குட்டானின் தீய்ந்த வாடையும் நிச்சயமாய் இருக்கும்...
ஆனால் என்ன துயரம் தெரியுமா? நம்மை சூழ்ந்திருக்கும் சமூக நாற்றங்களை தாண்டி அவை நம் நாசிகளுக்குள் நுழைந்து நுரையீரலை தின்னப்போவதை உணரும் நிலையில் நாமிருக்கிறோமா என்ன?
கொசுறு:
இப்போது ஆப்பிரிக்க கண்டத்தில் கோலாகலமாய் கானகங்கள் எரிய, கோடைக்காலம் தொடங்கியாச்சி. வரும் மாதங்களில் இயற்கையாகவும் செயற்கையாகவும் ஈக்வடோரியல் கோடு முழுவதும் பற்றியெரியப்போகும் கானகங்களில் வாழும் உயிர்கள் எந்த கப்பல் / விமானம் / ஆட்டோமொபைல் / ஸ்பேஸ் ஷட்டில் பிடித்து தப்பிக்க இயலுமென்று நினைக்கிறீர்கள்?
வீட்டுக்கு வெளியே குப்பைகளை கொட்டி நாம் பற்றவைக்கும் ஒவ்வொரு தீக்குச்சியும் நிச்சயமாய் எங்கோ ஒரு காட்டை எரிக்கும்.
(PC: Top: TheGuatdian.com
Middle: NASA
Bottom: Deccan Herald)
கருத்துகள்
கருத்துரையிடுக