முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுஷன்டா!

 


மதுக்கோப்பைகளால் கட்டப்பட்ட மாளிகை பார்த்திருக்கிறீர்களா?


உச்சியில் ஒற்றைக்கோப்பை. அதன் கீழ் சில. அதன் கீழ் பல. அதன் கீழ் பலப்பல கோப்பைகளை அடுக்கி, உச்ச கோப்பையில் பளபளவென மின்னும் மதுவை ஊற்ற, அது நிரம்பி வழிந்தபின்னும் தொடர்ந்து ஊற்ற, அடுத்தடுத்த வரிசைகளின் கோப்பைகளும் நிரம்பி வழியும்.


இந்த வரிசையை ஒரு சம தளத்தின் மீது ஆயத்தம் செய்து துளி கூட சிந்தாமல் சிதறாமல் ஆடம்பர தளத்திற்குள் தள்ளிச்சென்று, லாபத்தில் கொழுத்த பெரு வணிக கரங்கள் ஒவ்வொரு கோப்பையாக இலாவகமாக எடுத்து துளிகூட சிந்தாமல் பருகி களிக்கும் நிகழ்வுகள் நித்தம் நடக்கிறது நம் உலகில். இவை பெரும்பாலும் வணிக வெற்றியின், பெரு லாபத்தின் கொண்டாட்டமாகவே இருக்கும்.


இந்த மதுக்கோப்பை மாளிகை, சம தளத்தின் மீது இல்லாமல் இரு வேறு திசைகளில் ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டே நகர்ந்துகொண்டிருக்கும் இரு தட்டுகளின் மீது இருந்தால்?



இமயம் நிற்பது இரு பெருந்தகடுகளின் மேலே.


இந்த பூமித்தகடுகளின் உரசலில் பிறந்த இமயம்தான் நம் உலகின் மிக இளமையான மலைத்தொடராம்.


மலைப்பனி உருகி உருகி உயிர் நனைக்கும் நீராகி ஆறாகி பள்ளத்தாக்குகள் சமவெளிகள் இறங்கி ஓடி கடல் மடி தேடி அடைவது இயல்பு.


ஓடும் நீரை பயன்படுத்தி, ஓடுகின்றபோது மட்டும் உணவுப்பயிர் வளர்த்து மகிழ்வாய் வாழ்ந்தோர் கோடி கோடி.


உணவு, உணவாக இருந்தவரை சிக்கல் எதுவுமில்லை.


உணவு, வணிகமாக மாறியபோதுதான் மாறிப்போனது எல்லாமே!


பனி உருகும் காலம் / மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் நாம் பயிர் வளர்க்கத்தொடங்கியது வணிகத்தின் வயிறு நிரப்ப மட்டுமே.


சந்தைப்பொருளாதாரத்தின் கட்டளைப்படி ஆசிய நாடுகளும் தீவனப்பயிர் வளர்ப்பதும் வணிகத்திற்கான மூலப்பொருள் வளர்ப்பதும் இதனால்தான்.


தமிழக தேயிலை தோட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளை களப்பலி தந்து அவற்றின் கல்லறைகளின் மீது எழுப்பப்பட்ட வணிக மாளிகைகளே!


காபி, மிளகு, ரப்பர், கோகோ, கரும்பு, நெல் இப்பயிர்கள் நிற்கும் நிலங்களின் கீழும் அழிந்த காடுகளின் எலும்புக்கூடுகள் மன அழுத்தம் தாளாமல் நிலக்கரியாக மாற, ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி புதையல் தமிழகத்தின் அரிசிக்கிண்ணத்தின் கீழே என ஆழத்தோண்டுது ஒரு கூட்டம்.


இப்பயிரெலாம் வளர்ந்து உலக நாடுகளின் கரன்சிகளாக மாற்றம் பெறவேண்டுமானால் மழையற்ற காலங்களிலும் நீர் தேவை, எனவே ஆற்று நீரை 'அணை'த்து தடுப்போம் என அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய மல்யுத்தம், ஆறுகளிலிருந்து மலையேறி, மலையிடை பள்ளங்களை அணைகளாக மாற்றும் பணி கடந்த முப்பது ஆண்டுகளாக வெகுவேகமாக நடக்கிறது.


நமது தேவையை தாண்டிய ஆசைகளுக்குதான் எல்லையே கிடையாதே. எனவே தொடர்ந்து அணைகள் செய்தோம், செய்கிறோம்

நதிகளின் போக்கை மாற்றினோம், மாற்றுகிறோம். இவை பெருக்கிய விளைச்சலைக்கொண்டு மென்மேலும் வணிகம் பெருக்கினோம், பெருக்குகிறோம். வணிக ஆலைகளின் வெப்பப்பெருமூச்சு, நஞ்சு அப்பிய பெருமூச்சு, நம் வான் பரப்பை சூழ்ந்து நம்மால் கணிக்க இயலாத விதங்களில் நம் சுற்றுச்சூழலை சிதைத்தது, சிதைக்கிறது, சில தினங்கள் முன்பு திடீரென வெடித்துச்சிதறிய இமயமலைத்தொடரின் பனிக்கட்டிப்பாளங்கள், பனிக்கட்டிப்பாறைகள் இத்தகைய ஒரு நிகழ்வினால்தான்...


நூற்றுக்கணக்கானோரை காணோம் என நாம் இப்போது தேடுகிறோம். பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றனர் இதே இமயத்தொடரில் சில பத்தாண்டுகளில்...

ஆனாலும் அயராது தொலைத்துக்கொண்டே இருக்கிறோம்!


ஒன்றின் மீது ஒன்று உரசிக்கொண்டே இருக்கும் இரண்டு நகரும் தன்மையுடைய தட்டுகளின் மீது எத்தனை எத்தனை அணைகள்? எத்தனை எத்தனை உயரங்களில்?


மின்சாரம் உண்டாக்க எளிதான பாதுகாப்பான வழிகளில் நவீன அறிவியலால் இயலும்.


தண்ணீரை தேவை தாண்டிய ஆசைக்கும் நவீன அறிவியலின் உதவியோடு நம்மால் சேமிக்க இயலும், நம் காலடியின் அடியில் விரவி இருக்கும் பூமியடி நீர்த்தேக்கங்களில் (aquifers).


ஆனால் "ஏன் இப்படி செய்வதில்லை?!" என்று சிந்திக்கக்கூட நமக்குதான் நேரமில்லை...


அரிது அரிது மானிடப்பிறவி அரிது.

அதனினும் அரிது நோய் நொடியற்ற வாழ்வு.

அதனினும் அரிது தன்னிறைவான வாழ்வு.


இந்த அரிதான மானுடம் அற்புதங்கள் செய்வதும் அற்ப மானிடப்பதராய் மாள்வதும் அவரவர் விருப்பம்.


ஆனால் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென கவிழ்ந்த பனிப்பாறை சேற்றுக்குழம்பில் சிக்கி மூச்சு முட்டி மரண தருணத்தில் மனைவி குழந்தை சுற்றம் நட்பை எண்ணி மருகி நம் சக மனிதர்கள் புதைந்து மாண்டது யாருடைய விருப்பம்????


நேற்று உடைந்து சிதறிய நம் அணை கூட. இந்த மதுக்கோப்பை மாளிகையை அலங்கரித்த ஒரு கோப்பைதான்...


ஏனெனில் இந்த மாளிகை நிற்பது ஓயாது உரசி எதிரெதிர் திசையில் நகரும் இரு தகடுகள் மேல்தான்.



இதற்கெல்லாம் சளைக்காத மானுடம் இன்னும் எத்தனை மதுக்கோப்பைகளை இதன்மீது அடுக்கப்போகிறதோ...


(Photos: Creative Commons)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...